ஐபிஎல் மோசடி குற்றச்சாட்டை தொடர்ந்து நாட்டை விட்டு தப்பி ஓடிய லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மோசடி புகார் எழுந்த நிலையில் லலித் மோடி கடந்த 2010ம்ஆண்டு இந்தியாவை விட்டு தப்பி ஓடி லண்டன் சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை கே.கே.மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு மறைந்த நிலையில் அவரது குடும்பத்தில் சொத்து தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி கடந்த ஆண்டு தனது தாயுடன் ஏற்பட்ட வாரிசு உரிமை தகராறு காரணமாக பாதுகாப்பு கோரி தில்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தில்லி காவல் நிலையத்தில் சமீர் மோடி மீது கடந்த வாரம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “திருமணம் செய்து கொள்வதாக போலி வாக்குறுதி அளித்து கடந்த 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை சமீர் மோடி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். தற்போது தன்னை ஏமாற்றியதுடன் மர்ம நபர் மூலம் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும் சிலர் தன்னை பின் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 18) வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பிய சமீர் மோடியை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.