அ. குமரேசன்
கட்டைவிரலின் ஆணவப் போக்கை மற்ற விரல்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. கையால் எந்தப் பொருளையும் எடுப்பதற்கோ பிடிப்பதற்கோ வளைப்பதற்கோ அந்த விரல் மையமாகத் தேவைப்படுகிறது. இந்த மதர்ப்பில் சுட்டுவிரலின் முக்கியத்துவத்தை, சுண்டுவிரலின் தேவையை, நடுவிரலின் மையமான பங்களிப்பை, மோதிரவிரல் ஏற்படுத்தும் சமநிலையை என எதையுமே கட்டை விரல் மதிப்பதில்லை. தான் வைத்ததே சட்டமெனத் தாண்டவமாடிக்கொண்டு, ஐந்து விரல்களின் முக்கியத்துவம் பற்றிய தத்துவக் கதைகளைப் பொருட்படுத்துவதுமில்லை.
ஒரு நாள் எப்படியோ ஏற்பட்ட காயத்தின் வலியால் கட்டைவிரல் துடித்துக்கொண்டிருந்த நிலையில் சுற்றி வந்த பூச்சிகள் காயத்தைக் குதறின. அதன் தவிப்பைத் தங்களின் வலியாகவும் எடுத்துக்கொண்ட நான்கு விரல்களும் விரிந்து கட்டைவிரலை உள்வாங்கி மூடிக்கொண்டன. காயம் ஆறிய கட்டை விரல் ஆணவத்திலிருந்தும் விடுதலை பெற்றது, கூட்டுறவின் மகத்துவத்தை உணர்ந்தது.
கொரோனா ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட இணையவழிக் கூடுகைகளில் குழந்தைகளுக்குச் சொன்ன இந்தக் கதை இன்று, இந்தியாவில் ஒன்றிய–மாநில உறவுகள் சீரமைப்பு தொடர்பாகப் பெரியவர்களுக்கு உவமையாய்ச் சொல்ல நினைவுக்கு வந்தது. அதிகார அத்துமீறல்களைப் பக்குவமாக எதிர்கொண்டு, மாநிலங்கள் தங்கள் நியாயமான தன்னாட்சி உரிமையை ஊன்றி, நீதியான கூட்டாட்சி மாண்பை உயர்த்திட வேண்டியுள்ளது.
சட்டங்களுக்கான பெயர்களில் கூட மொழித்திணிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதிக்க முயற்சிகள், பாடநூல்களிலும் மதவாதக் கருத்தியல் புகட்டல்கள், ஒரு பக்கம் அறிவியலின் கொடையாகிய செயற்கை நுண்ணறிவு மாநாடு நடத்திக்கொண்டே அறிவியலாளர் மாநாடுகளில் ஆய்வறிவுக்குப் புறம்பாகப் புராணப் புனைவுகளை முன்வைக்கும் திரிப்புகள், உண்மையான தொண்மைகளை மறுபடியும் மண்ணுக்குள் புதைக்க முயலும் உத்திகள், வரி வருவாயை மாநிலங்களுக்குப் பகிர்வதில் அரசியல் காழ்ப்புகள்… இதற்கான ஆயுதங்களில் ஒன்றாக இயக்கப்படும் ஆளுநர் பதவிகள்…
அழகான ஆழமான ஒருமைப்பாடு

ஒன்றிய ஆட்சியாளர்களின் இத்தகைய தொடர் தாக்குதல்களுக்கு எதிராக மாநிலங்களின் அரசுகளோடு இணைந்து மக்களும் நெஞ்சுயர்த்தி வென்றாக வேண்டும். நாடு தழுவிய கூட்டாட்சியும் மாநிலத் தன்னாட்சியும் தழைத்தோங்குவதை நிலைநாட்ட எழுகிற முழக்கங்கள் பல மடங்கு உரக்க ஒலிக்க வேண்டும். அதற்கோர் அடிப்படை ஆவணமாக வந்திருக்கிறது நீதிபதி குரியன் ஜோசப் குழு அளித்துள்ள அறிக்கை. அதன் பரிந்துரைகள் நடப்புக்கு வருமானால் ஒன்றிய அரசுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றியப் பகுதிகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு அழகாக வளரும், நாட்டின் ஒருமைப்பாடு ஆழமாக வலுப்பெறும்.
ஆளுநர் வழி அத்துமீறல்கள், குறிப்பாக பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உச்சத்திற்குச் சென்றுகொண்டிருந்த நிலையில்தான், ஒரு நல்ல முன்னெடுப்பாக 2023 ஜூலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீதிபதி குரியன் ஜோசப் குழுவை அமைத்தார். ஒன்றிய–மாநில உறவுகளைச் சீராக்கிச் செழுமைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை உருவாக்குகிற பணி அதனிடம் ஒப்படைக்கப்பட்டது. குழு தனது அறிக்கையின் முதல் பாகத்தை பிப்ரவரி 16 அன்று ஒப்படைத்தது. 387 பக்கங்கள் கொண்ட, இடைக்கால அறிக்கை என்று சொல்லத்தக்க இந்த முதல் பாகத்தை முதலமைச்சர் பிப்ரவரி 18 அன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.

அதில், அதிகாரப் பரவலாக்கம், மாநில சுயாட்சி, அரசமைப்பு சாசனத் திருத்தங்கள், ஆளுநர் பதவி, மொழிக் கொள்கை, தொகுதிகள் மறுவரையறை, தேர்தல், கல்வி, சுகாதாரம், ஜிஎஸ்டி ஆகிய 10 உள்ளடக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. இரண்டாம் பாகம் முழுமையாக மாநிலங்களின் பொருளாதார உரிமைகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் பாகம் சமூகநீதி, அரசாங்க நிர்வாகம் தொடர்பாகப் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது வெளியிட்டது ஏன்?
தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் முதல் பாகத்தை வெளியிட வேண்டிய தேவை என்ன வந்தது? திமுக அரசு இந்த நோக்கத்துடன்தான் வெளியிட்டதா என்று தெரியாது,
ஆனால் எனக்குத் தோன்றிய விடை இது:
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாநிலங்களின் ஆளுகை வரம்புகளுக்குள் ஒன்றியம் ஊடுருவுவது அதிகரித்து வரும் காலக்கட்டத்தில் இந்தத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. பாஜக–வுக்கு எதிராகத் திரள்கிற கட்சிகளின் பரப்புரைகளில் இந்த ஊடுருவல் பிரச்சினை நிச்சயமாக இடம்பெறும். அப்போது, ஊடுருவலைத் தடுக்கும் மாற்று வழிகளை முன்வைப்பதற்கு குரியன் குழு பரிந்துரைகள் உதவிகரமாக இருக்கும். இன்னொரு சிந்தனையும் தோன்றுகிறது – அறிவிக்கப்படும் இலவசங்களையும் வாக்குறுதிகளையும் தாண்டி, மக்கள் அரசியல் முதிர்ச்சியோடு பேசுவதற்கான கருப்பொருள்களாக இந்தப் பரிந்துரைகள் அமையும். அது ஜனநாயகத்துக்கு நல்லது.

இப்படிச் சொல்கிற அளவுக்கு அறிக்கையில் என்ன இருக்கிறது? தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றக் கூட்டத் தொடக்க நாளில் அரசுகள் தயாரித்தளித்த உரைகளை வாசிக்க மறுத்து ஆளுநர்கள் வெளியேறினார்கள் அல்லவா? அந்த ஆளுநர்கள் தொடர்பாகக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் தலையாய கவனம் பெறுகின்றன. ஒரு ஊராட்சி உறுப்பினர் கூட வட்டார மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மதிப்புக்கு உரியவராக இருக்கிறபோது, மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கண்காணிக்கிற, ஆளுநர்கள் அவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல. ஒன்றிய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே.
அந்த ஆளுநர் பொறுப்புக்கு மாநில சட்டமன்றம் மூன்று பேரைப் பரிந்துரைக்கும். அவர்களில் ஒருவரையே குடியரசுத் தலைவர் (ஒன்றிய அரசு) நியமிக்க வேண்டும். இதற்காக 155ஆவது சட்ட உரையில் நாடாளுமன்றம் திருத்தம் செய்யப் பரிந்துரைக்கிறது அறிக்கை. இது நிகழுமானால், மாநில சட்டமன்றம் அங்கீகரிக்கிற மூவர் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? நிச்சயமாக மாநில நிலைமைகளையும் தேவைகளையும் அறிந்தவர்களாக இருப்பார்கள்.
நியமனமும் பதவிக்காலமும்
இவ்வாறு நியமிக்கப்படும் ஆளுநருக்கான பதவிக் காலத்தை ஐந்தாண்டுகள் என அறிக்கை முன்வைக்கிறது. அவரது ஒரு தலையாய பணிக்கான காலவரம்பையும் குழு பரிந்துரைத்திருக்கிறது. சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்புகிற சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிப்பது, நிராகரிப்பது, நிறுத்திவைப்பது, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது குறித்து ஆளுநர்கள் 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். குடியரசுத் தலைவரும் 15 நாட்களில் முடிவெடுக்க வேண்டும். திருப்பி அனுப்பப்பட்ட முன்வரைவை மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றுமானால் ஆளுநர் நிராகரிக்காமல், நிறுத்தி வைக்காமல் 15 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் சார்ந்த பணிகளை மட்டுமே ஆளுநர்கள் மேற்கொள்ள வேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட அரசமைப்பு சாசனப் பூர்வமான பதவிகளை வகிக்கக்கூடாது.
குழுவின் இந்தப் பரிந்துரைக்கான பொழிப்புரை:
மாநில அரசாங்கங்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களின் “வேந்தர்” என்ற அதிகாரத்தைத் தூக்கி ஆளுநர்களிடம் கொடுக்கக் கூடாது.

தமிழ்நாடு சட்டமன்றம் இனி முதலமைச்சர்தான் அந்தப் பொறுப்பை வகிப்பார் என்று 2022இல் ஒரு சட்ட முன்வரைவாகவே நிறைவேற்றி, ஆளுநர் அதைக் கிடப்பில் போட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப் படி அது சட்டமாக அங்கீகாரம் பெற்று, ஆளுநர் அலுவலக மேல்முறையீட்டைத் தொடர்ந்து இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, இந்த பிப்ரவரி 4இல் அந்தத் தடை விலக்கப்பட்டது. துணைவேந்தர்கள் மாநில அரசால் – முதலமைச்சரால் நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகியிருக்கிறது. இதில் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) விதிகள் உள்ளிட்ட சில நடைமுறைச் சிக்கல்களும் இருக்கின்றன. குரியன் குழு, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில், நாடாளுமன்றமே உரிய சட்டத் திருத்தம் செய்யப் பரிந்துரைக்கிறது.

அப்புறம் அந்த சட்டமன்ற ஆளுநர் உரை விவகாரம். இந்த பிப்ரவரி 11 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, அரசின் கொள்கை அறிக்கையாகிய உரையை வாசிக்க மறுத்துவிட்டு வெளியேறினார். கேரள முதல்வர் பினராயி விஜயனோடு மோதிக்கொண்டிருக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையின் கடைசிப் பத்தியை மட்டும் வாசித்துவிட்டு வெளியேறினார். மேற்கு வங்க ஆளுநர் சி.ஐ. ஆனந்த போஸ் உரையைப் பாதியில் நிறுத்திவிட்டு, அதில் இல்லாத விமர்சனத்தை மாநில அரசு மீது வைத்துவிட்டு வெளியேறினார். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தன்னிடம் கொடுக்கப்பட்ட உரையின் முதல் இரண்டு வரிகளை மட்டும் வாசித்து, “ஜெய் ஹிந்த்”, “ஜெய் கர்நாடகா” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
சடங்குக்கு முற்றுப்புள்ளி
இப்படி, தலைப்புச் செய்திகளின் வேடிக்கை விளையாட்டாகப் போய்விடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க குரியன் குழு முயல்கிறது. கூட்டத் தொடரை ஆளுநர்தான் உரையாற்றித் தொடங்கிவைப்பார் என்ற வழக்கத்தை விலக்கிக்கொள்ளப் பரிந்துரைத்திருக்கிறது. நாடாளுமன்றம் இதற்கான சட்டத்திருத்தம் ஒன்றை நிறைவேற்றுவதாக வைத்துக்கொள்வோம், அதன் பிறகு, சட்டசபையில் தங்களை அவமதித்துவிட்டதாக ஆளுநர்கள் குறைப்பட்டுக்கொள்ளும் சூழலே ஏற்படாதே!
இத்தகைய பரிந்துரைகள் ஆளுநரின் அதிகாரத்தைப் பறிப்பதற்கல்ல, முறைப்படுத்துவதற்கே. அண்டமளாவிய அதிகாரங்களைச் சுமந்துகொண்டிராமல், மாநிலங்களுக்கும் ஒன்றியத்துக்கும் இடையேயான தொடர்புப் பொறுப்பாளராக ஆளுநரை அங்கீகரிக்கிற பரிந்துரைகள் இவை. ஆளுநர் பதவியே தேவையில்லை என்ற வாதமே கூட தமிழ்நாட்டில் எழுந்ததுண்டு. அண்ணா கூறிய ஆட்டுத்தாடி உவமை மறக்க முடியாதது. இப்போது, குரியன் குழு ஆளுநர் பொறுப்பை அங்கீகரித்து, ஒன்றியத்துடனான இணக்க உறவுக்கு வழிசெய்கிறது.
‘மக்கள் பவன்’ என்றும் ‘லோக் பவன்’ என்றும் பெயர் மாற்றப்பட்ட ராஜ் பவன் வளாகங்களுடன் குரியன் குழு நின்றுவிடவில்லை. ஒன்றிய அரசின் தலைமைச் செயலகமாகிய கார்த்தவ்ய பவன், பிரதமர் அலுவலகமாகிய சேவா தீர்த், குடியரசுத் தலைவர் மாளிகையாகிய ராஷ்டிரபதி பவன் ஆகிய வளாகங்களுக்கும் சென்று வந்திருக்கிறது.

தேர்தல் ஆணையத்துக்கும் கடிவாளம்
ஒன்றிய அரசு தனது “ஒரே நாடு, ஒரே மொழி” முழக்கத்தையும், மும்மொழிக் கொள்கையையும் கைவிட வேண்டும், இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்று குழு கூறியுள்ளது. இது, மாநிலங்களின் சொந்த மொழிப் பாதுகாப்புக்கு ஆதரவானது. மூன்றாவது என்ற போர்வை போர்த்திய திணிப்புக்கு எதிரானது. வரும் காலத்தில், அந்தந்த மாநிலத்துடன் அந்தந்த மாநில மொழியிலேயே ஒன்றிய அரசின் தொடர்பு என்ற சிறப்பான தேசியப் பண்பாடு வளர இது உரம் போடும்.
ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்துகிறபோது அதற்கான நிதித் தேவையில் 80 சதவீதத்தை ஒன்றியமே ஏற்க வேண்டும்; கூட்டாட்சி மாண்பினை மதித்திடும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்தை (ஜிஎஸ்டி கவுன்சில்) மாற்றியமைக்க வேண்டும்; கல்வி, தேர்தல் உள்ளிட்ட மையமான ஏற்பாடுகளில் மாநில அரசுகளின் குரல்களுக்குத் திட்டவட்டமான, விரிவான வெளி இருக்க வேண்டும் என்று குரியன் குரல் கொடுத்திருக்கிறார்.
ஒரு புதிய மாநிலம் உருவாக்கப்படுகிறது என்றால், அதற்கான சட்டத்திற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும்; புதிய ஒன்றியப் பகுதிகள் அறிவிக்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும்; நாடாளுமன்றத்தில் எந்தவொரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும்; மாநிலங்களின் தன்னாட்சியே தேசத்தின் வலிமை என்ற புரிதலோடு மத்திய அதிகாரக் குவிப்பு கலைக்கப்பட்டுப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள், சட்டமன்றங்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற, குடியரசுத் தலைவர் ஆணையின் மூலமாக ஒன்றிய அரசு கலைப்பதற்கு அதிகாரமளிக்கிற 356ஆவது சட்ட உரை அகற்றப்பட வேண்டும்; மாநில அமைச்சரவை ஒப்புதல் அடிப்படையிலேயே சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை நாடு விவாதிக்கத்தானே செய்யும்?

முன்பு அவசரநிலை ஆட்சியின்போது மாநிலப்பட்டியலில் இருந்து பிடுங்கி பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டது கல்வி. அதனை மறுபடியும் மாநிலங்களிடமே விடுவதற்கான, ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்காலத் தலைமுறையினர் நிறைவான கல்வி வாய்ப்புகளைப் பெறச் செய்வதற்கான பரிந்துரையை குழு முன்வைத்திருக்கிறது. நீட், டெட் என்றெல்லாம் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் தேர்வுகளை நடத்துகிற மத்திய முகமைகளை விலக்கி வைக்கவும் கூறியிருக்கிறது. நாடு தழுவிய முழக்கங்களாகவே ஒலிக்க வேண்டிய பரிந்துரைகள் இவை.
நாடு தழுவிய குரலாக ஒலிப்பதற்கான மற்றொரு பரிந்துரையும் இருக்கிறது. அது தேர்தலும் தேர்தல் ஆணையமும் தொடர்பானது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற, மாநிலங்களின் கள நிலைமைகளுக்குப் பொருந்தாத, நடைமுறைச் சிக்கல்களும் நிறைந்த. “லட்சியம்” கைவிடப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல், இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும், குடியரசுத் தலைவர் – துணைத் தலைவர் பொறுப்புகளுக்கும் மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும். மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல்களை மாநிலத் தேர்தல் ஆணையங்களே நடத்தும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்! இது நிறைவேறுமானால், ஜனநாயக விழுமியங்கள் ஆழமாக வேரூன்றும்.
முகவுரை எழுதிய முன்னோடிகள்
குரியன் குழு அறிக்கைக்கு முன்னோடிகள் உண்டு. தமிழ்நாட்டிலேயே, 1969இல் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அமைத்த நீதிபதி பி.வி. ராஜமன்னார் குழு அளித்த அறிக்கை, மாநில சுயாட்சி குறித்த விவாத அலைகளைக் கிளப்பியது. சுதந்திர இந்தியாவில் மத்திய–மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காகவென்றே ஒரு குழுவை ஒரு மாநில அரசு அமைத்தது இதுவே முதல் முறை.
1973இல் பஞ்சாப் சட்டமன்ற எதிர்க்கட்சியான அகாலிதளம், அனந்த்பூர் சாஹிப் நகரில் மாநாடு நடத்தி, மாநிலத் தன்னாட்சி தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி தனது கொள்கையாக அறிவித்தது.
1977இல், மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசு ஓர் ஆவணத்தைத் தயாரித்து, சட்டமன்றத்திலும் தாக்கல் செய்து, பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசுக்கும், பிற மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் அனுப்பி வைத்தது. “மேற்கு வங்க முன்மொழிவு–1977” என்ற அந்த ஆவணம், நாட்டின் பாதுகாப்பு, பணம் அச்சிடல், வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகியவை தவிர்த்து மற்ற அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளின் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

சர்க்காரியா, பூஞ்சி ஆணையங்கள்
இத்தகைய பரிந்துரைகள் இதுவரையில் ஒன்றிய ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப் படவில்லைதான். ஆனால், காற்றோடு கரைந்துவிடவுமில்லை. 1983இல் பிரதமர் இந்திரா காந்தி, நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தார். 1987இல் அந்த ஆணையம் ஒப்படைத்த அறிக்கையை 1988இல் பிரதமர் ராஜீவ் காந்தி வெளியிட்டார். சட்ட உரை 356 அரிதிலும் அரிதான சூழலில் கடைசி வழியாகவே பயன்படுத்தப்பட வேண்டும், ஆளுநர் நியமனங்களில் முதலமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும், சட்டமன்றப் பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனை ஆளுநர் மாளிகையில் அல்லாமல் சட்டமன்றத்திலேயே நடத்தப்பட வேண்டும், அரசமைப்பு சாசனத்தின் 263ஆவது சட்ட உரையின்படி மாநிலங்களிடையே மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டல்களை சர்க்காரியா ஆணையம் வழங்கியது.
2007இல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீதிபதி மதன்மோகன் பூஞ்சி தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது. 2010இல் அதே அரசின் உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் பெற்றுக்கொண்ட அந்த ஆணையத்தின் அறிக்கையில், ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றுதல், பல்கலைக்கழக வேந்தர் அரியாசனத்திலிருந்து ஆளுநர்களை இறக்கிவிடுதல், சட்ட முன்வரைவுகள் மீது ஆளுநர் முடிவெடுப்பதற்கு 6 மாதக் கால வரம்பு நிர்ணயித்தல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் மாநிலங்களுடனான கூட்டுறவுக் கூட்டாட்சியை நிறுவுதல் உள்ளிட்ட வழிகாட்டல்கள் உள்ளன.
இந்தப் பாதைகளைப் பின்பற்றி வந்துள்ள குரியன் குழு அறிக்கையும் நாடு தழுவிய கவனத்தை ஈர்க்கிறது. குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் நாடாளுமன்ற சட்டத் திருத்தங்கள் மூலமே செயலுக்கு வர முடியும். எதற்கெடுத்தாலும் “ஒரே நாடு.. ஒரே அது… ஒரே இது…’’ என்று நீட்டி முழங்கிக்கொண்டிருக்கிற இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் தாங்களாக இந்த மாற்றங்களுக்கான சட்ட முன்வரைவுகளைத் தாக்கல் செய்வார்களா? அப்படியோர் அதிசயக் கனவு கூட வராது.
வருங்காலத்தில் இவற்றின் தேவையை உணரும் மக்களின் எழுச்சிக் குரலாக ஒலிக்கிறபோது அசையத்தான் வேண்டும். மக்களின் எழுச்சி, ஒன்றிய–மாநில உறவுகளில் மட்டுமல்லாமல், மாநில அரசாங்கங்கள்–உள்ளாட்சி அரசாங்கங்கள் உறவுகளிலும் உலகிற்கோர் எடுத்துக்காட்டை ஏற்படுத்தும்.
