பாசம் என்றால் என்ன என்றே அறியாத வனப் பகுதியில் வாழும் சிறுவன் ஒருவன். இன்னொருவனோடு வாழ்ந்து கொண்டு எப்போதும் மது குடித்துக் கொண்டு யாராயிருந்தாலும் அடித்து நொறுக்கும் அம்மா (சூசன்) … அம்மாவின் தொடுப்பு நபரால் கிண்டல் கேலி .. அப்பா யார் என்று தெரியாத நிலை..
இப்படி வாழும் அவன் ஒரு நிலையில் மனிதர்களை விட வன விலங்குகளும் பறவைகள் பூச்சிகள் மேல என்று இவைகளோடு இயற்கையையும் நேசிக்க ஆரம்பிக்கிறான்
தந்தங்களுக்காக யானை வேட்டையாடும் கூட்டம் ஒன்று , ஒரு காட்டு யானைக் கூட்டத்தில் ஒரு யானையை சுட்டுக் கொல்ல, ஒரு குட்டி யானை ஒரு பள்ளத்துக்குள் விழுந்து விடுகிறது. குழியில் இருந்து ஏற முடியாமல் பலநாள் பட்டினியில் தவிக்கிறது
அந்தப் பக்கம் வந்த அந்தச் சிறுவன் குழிக்குள் இறங்கி கஷ்டப்பட்டு யானையை தனி ஆளாக மேலே ஏற்றுகிறான். நன்றியுடன் அந்த யானை அவன் கூடவே வருகிறது.
மகன் யானை வளர்ப்பதை அறிந்தஅந்த குடிகார அம்மா ,’யானை வளரட்டும்; வளர்ந்த உடன் பார்த்துக் கொள்ளலாம்’ என்று காத்திருக்கிறாள்.
ஒரு நாள் யானை காணாமல் போகிறது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவன் யானையின் நினைவுகளுடனேயே வளர்ந்து கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற நிலையில் அந்த யானை, காட்டு யானைகளை விரட்டும் கும்கி யானையாக இருப்பது தெரிகிறது . யானையை வளர்ப்பதற்கான எல்லா ஆவணங்களும் இப்போது யானையை வைத்திருக்கும் அந்தப் பாகன் பெயரில்தான் இருக்கிறது.
இந்த நிலையில் ஓர் அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதி சாக வேண்டும் என்பதற்காக யானையை வெட்டிப் பலி கொடுக்கும் பூஜை செய்ய யானை தேடுகிறார்.
பாகனிடம் இருக்கும் யானையை அரசியல்வாதிகள் ஒரு கோடி ரூபாய்க்கு கேட்கிறார்கள் .
யானையின் கதி என்ன? யானையைக் காப்பாற்றி வளர்ந்த நாயகனுக்கு யானை கிடைத்ததா? என்பதே,

ஜெயந்தி லால் காடா மற்றும் தவல் காடா தயாரிப்பில் மதி, ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெராடி, சூசன் நடிப்பில் பிரபு சாலமன் எழுதி இயக்கி இருக்கும் படம் கும்கி 2.
தமிழ் நாட்டில் ஒரு அரசியல் குழப்ப சூழ்நிலையில் ஒரே கட்சியில் உள்ள ஒரு பிரமுகர் தனக்குப் போட்டியாக வராமல் செத்துப் போய்விட வேண்டும் என்பதற்காக ஜோசியர் சொன்னபடி ஒரு முறை குதிரையை வெட்டிப் பலி கொடுத்ததோடு ,
இன்னொரு முறை யானையையும் வெட்டிப் பலி கொடுக்கத் திட்டமிட்டு,வெளியே தெரிந்தால் சிக்கலாகி விடும் என்பதற்காக யானைக்கு சாப்பாட்டில் விஷம் கொடுத்து கொன்றார்கள்: என்ற ரகசிய தகவல்கள் உண்டு. (அப்படி செய்ததாக சொல்லப்பட்டவர்கள் அரசியலில் தனி மரமாய் ஆனார்கள் என்பது வேறு விஷயம். குதிரை மற்றும் யானையின் சாபமோ என்னவோ?)
அந்த விஷயத்தை வைத்து பரபரப்பான கிளைமாக்ஸ் கொடுத்து இருக்கிறார்.
படத்தின் முதல் கால் மணி நேரம் ….
காடுகள்… அவற்றின் கரும்பச்சை நிறம்.. பேரிரைச்சலோடுபொங்கி எழுந்து விழும் காட்டு அருவிகள்.. மலைப்பாம்பு, பாம்பு போல நீண்டு பருத்து வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள், சிறு சிறு பூச்சிகள், மிருகங்கள் இயற்கை சத்தங்கள் ,,,, இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திலும் கிடைக்காத ஆரம்பம்
இயக்குனர் பிரபு சாலமன். ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்று படக்குழு ஆகியோரின் பிரமாண்ட பிரம்மாத உழைப்புக் பாராட்டுகள் .
யானைக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுப்பது , அதற்கு பவுடர் அடித்து காதில் தோடு போல மாட்டி சிறுவன் ரசிப்பது . தும்பிக்கையால் வளைத்து அவன் மேல் யானை காட்டும் பாசம், யானையின் எக்ஸ்பிரஷன்கள் சிறுவனின் முகபாவனைகள் யாவும் அபாரம். (சில ஹீரோக்களை விட இந்த யானை சிறப்பாகவே ‘ நடித்து’ இருக்கிறது )
சில வினாடிகள் வரும் ஒரு சிறு காட்சியில் இருந்தே கிளைமாக்ஸ் அமைத்து இருப்பதும் பலே
நடு ரோட்டில் யானை போடும் சண்டை எதிர்பாராத விருந்து.

ரசூல் பூக்குட்டியின் உதவியாளராக வித்தியாசமான ஒலிகளை பதிவு செய்ய வரும் பெண்ணை (ஷ்ரிதா ராவ்) படத்தில் ஒரு முக்கியமான விசயத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் விதமும் நேர்த்தி.
நண்பராக வருபவர் காமெடி என்ற பெயரில் எதாவது பேசிக் கொள்கிறார். பார்ப்பவர்களை பேசிக் கொல்கிறார் அந்த சமயம் எல்லாம் படம் தொங்க ஆரம்பிக்கிறது.
ஆனால் சரியான சமயத்தில் திரைக்கதையை சரியான திசையில் கொண்டு வந்து படத்தை தூக்கி நிறுத்துகிறார் பிரபு சாலமன்.
அர்ஜுன் தாஸ் கேரக்டரை முடித்த விதம் கவிதை . மனிதர்களின் மிருகத்தனமும் மிருகங்களின் மனிதப் பண்பும் வெளிப்படும் இடம் அது.
பிரபு சாலமனின் இயக்கத்தையும் சுகுமாரின் ஒளிப்பதிவையும் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. அப்படி ஓர் இணைவு.
நிவாஸ் பிரசன்னாவின் இசை, புவனின் படத்தொகுப்பு ஆகியவை படத்துக்கு தக்க பலம்.
ஆறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் , இப்போதும் பிரெஷ்ஷாக இருப்பது சிறப்பு.
கும்கி 2… பெரிய விலங்கு மற்றும் மாபெரும் இயற்கை இவற்றின் அழகிய கூட்டு
- ராஜ திருமகன்
