ஸ்டாலின் vs ராயபுரம் மனோ.. சூடுபிடிக்கும் கொளத்தூர்!

Published On:

| By Mathi

MK Stalin Royapuram Mano

கொளத்தூர் (Kolathur) சட்டசபை தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை (M.K.Stalin) எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.

கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் 3 தேர்தல்களை அத்தொகுதி சந்தித்துள்ளது. 2011, 2016, 2021 ஆகிய 3 தேர்தல்களிலுமே திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

இந்த 3 தேர்தல்களிலும் ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக வேட்பாளர்களை நிறுத்தியது. 2011-ல் சைதை துரைசாமி, 2016-ல் ஜேசிடி பிரபாகரன், 2021-ல் ஆதிராஜாராம் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த முறை கொளத்தூர் தொகுதியில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவருக்கு எதிரான அதிமுக வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

சட்டசபை தேர்தலில் 169 இடங்களில் போட்டியிடும் அதிமுகவின் 150 வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் சென்னை மாவட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்னமும் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவில்லை.

இதனிடையே கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து ராயபுரம் மனோ அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட இருக்கிறார்.

ADVERTISEMENT

யார் இந்த ராயபுரம் மனோ?

எம்.டெக் பட்டதாரியான ராயபுரம் மனோ, காங்கிரஸில் தீவிரமாக பணியாற்றியவர்; சென்னை மாநகராட்சி கவுன்சிலராகப் பணியாற்றியவர். சென்னை மேயராக ஸ்டாலின் பதவி வகித்த காலத்தில் காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தவர் ராயபுரம் மனோ.

காங்கிரஸில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2024 மக்களவைத் தேர்தலில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வடசென்னை மக்களவை தொகுதிக்குட்பட்டதுதான் கொளத்தூர் சட்டசபை தொகுதி. இந்த அனுபவங்களின் அடிப்படையில் ராயபுரம் மனோவை ஸ்டாலினுக்கு எதிரான வேட்பாளராக நிறுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share