‘காலையில் தினமும் இட்லி, தோசைதானா’ என்று நினைப்பவர்களுக்கு, இன்று இட்லி, தோசைக்கு குட்பை என்று சொல்லிவிட்டு வீட்டிலேயே வெறும் 15 நிமிடங்களில் இந்த மசாலா பாஸ்தா செய்து அசத்தலாம். kitchen keerthana masala pasta mar20
என்ன தேவை?
பாஸ்தா (ஃபர்பால்லே பாஸ்தா) – ஒரு கப்
பொடியாக நறுக்கிய, பெரிய வெங்காயம் – 1
தக்காளி பெரியது – 1
ஆலிவ் ஆயில் – 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் – கால் கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கால் கப்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
கஸுரி மேத்தி – ஒரு சிட்டிகை
இத்தாலியன் சீசனிங் – அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அடுப்பில் கடாயை வைத்து, நாலு கப் தண்ணீர் ஊற்றி, பாஸ்தாவைச் சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்து தண்ணீர் இறுத்து தனியாக வைக்கவும். இறுத்த தண்ணீரில் கால் கப்பைத் தனியாக வைக்கவும். அடுப்பில் தண்ணீர் நிரப்பிய கடாயை வைத்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் அதிகபட்ச சூடாக இருக்கும்போது, அதில் தக்காளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக விடவும்.
பின்பு தக்காளியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, அதன் தோலை உரித்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தீயை மிதமாக்கவும்.
இதில் இஞ்சியைச் சேர்த்து அரை நிமிடம் வதக்கி, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன், கேரட், பச்சைப் பட்டாணி, உப்பு, தயாரித்து வைத்திருக்கும் தக்காளி பியூரி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், கஸுரி மேத்தி, இத்தாலியன் சீசனிங் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இறுதியாக குடமிளகாய், பாஸ்தா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கியவுடன்
மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். ஒருவேளை பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டால், பாஸ்தா வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து அது வற்றும் வரை வதக்கவும்.