கடந்த வாரம் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அவற்றில் இரண்டு படங்கள் இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து விலகின. அந்த போட்டிக்கு நடுவே ‘ஓகே’, ‘நல்லாயிருக்கு..’, ‘சூப்பர்ப்..’ என்று விதவிதமான ‘கமெண்ட்’களுடன் குமார சம்பவம், பாம், பிளாக்மெய்ல், தணல் ஆகியன ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இது போக மதராஸி, காந்தி கண்ணாடி, லோகா சேஃப்ட 1: சந்திரா, மிராய், கிஷ்கிந்தாபுரி ஆகிய படங்களும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், வரும் 19ஆம் தேதியன்று தமிழில் 4 திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், இந்த வாரம் கடும் போட்டி காத்திருப்பது தெளிவாகியிருக்கிறது.
சக்தித் திருமகன்
விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து, நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ‘அருவி’ புகழ் அருண் பிரபு இயக்கியுள்ளார். நாயகியாக த்ருப்தி ரவீந்திரா அறிமுகிறார். வாகை சந்திரசேகர், செல் முருகன், கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் நெடுநாட்கள் கழித்து ‘காதல் ஓவியம்’ புகழ் சுனில் கிரிபலானி நடித்திருக்கிறார். இப்படம் திரையில் ஓடும் நேரம் 157 நிமிடங்கள்.
தண்டகாரண்யம்
சாய் தேவானந்த் உடன் பா.ரஞ்சித் இணைந்து தயாரித்திருக்கிற இப்படத்தை ‘இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு’ அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார். கலையரசன், வின்சு ரேச்சல் சாம், தினேஷ், ரித்விகா, சபீர் கல்லாரக்கல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் திரையில் ஓடும் நேரம் 130 நிமிடங்கள்.
கிஸ்
கவின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ‘அயோத்தி’ புகழ் ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்திருக்கிறார். பிரபு, விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய் தேவயானி உள்படப் பலர் நடித்துள்ளனர். டான்ஸ்மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இதில் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் திரையில் ஓடும் நேரம் 144 நிமிடங்கள்.
படையாண்ட மாவீரா
இயக்குனர் வி.கௌதமன் நாயகனாக நடித்ததோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். பூஜிதா பொன்னாடா, சமுத்திரக்கனி, சரண்யா உட்படப் பலர் நடித்துள்ளனர். மறைந்த அரசியல் தலைவர் ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படம் திரையில் ஓடும் நேரம் 155 நிமிடங்கள்.
அஜய் – தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் எ யோகி
அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் கதைகள், தொடர்ந்து படமாகி வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கை வரலாறு ‘அஜய் – தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் எ யோகி’ என்ற படமாக உருவாகியுள்ளது. சாந்தனு குப்தா எழுதிய ‘த மொங்க் ஹு பிகேம் சீஃப் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது. யோகி ஆதித்யநாத்தாக ஆனந்த் ஜோஷி நடிக்கிறார். பரேஷ் ராவல், தினேஷ் லால் யாதவ், பவன் மல்ஹோத்ரா உட்பட பலர் நடிக்கின்றனர். ரவிந்த்ரா கவுதம் இயக்குகிறார்.
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிஃப் அலி, அபர்ணா பாலமுரளி நடித்துள்ள த்ரில்லர் படமான ‘மிராஜ்’ இந்த வாரம் வெளியாகிறது. தியான் சீனிவாசன், ரவீணா ரவி, லுக்மென் ஆவரன் நடிப்பில், முஹாஷின் நலகத் இயக்கியுள்ள பேண்டஸி காமெடி படமான ‘வளா: ஸ்டோரி ஆஃப் பேங்கில்’ படமும் திரைக்கு வருகிறது.
தெலுங்கு படமான ‘தக்ஷா’வில் லட்சுமி மஞ்சு, மோகன்பாபு, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதோடு புதுமுகங்கள் அங்கித் கொய்யா, நிலாஹி பத்ரா நடித்துள்ள ‘பியூட்டி’யும் இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் அக்ஷய் குமார் அர்ஷத் வர்ஸி நடிப்பில் சுபாஷ் கபூர் இயக்கியுள்ள ‘ஜாலி எல்.எல்.பி’ இந்த வாரம் வருகிறது. ஆங்கிலப் படங்களான ’ஆஃப்டர்பர்ன்’, ’எ பிக் போல்டு பியூட்டிபுல் ஜர்னி’, ’ஹிம்’ ஆகியனவும் வெளியாகின்றன.
மேற்சொன்ன படங்களில் நம் மனதைக் கவர்ந்த படங்கள் எதுவென்பது இப்படங்கள் வெளியான சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்..!