முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கப்பட்ட கிளாம்பாக்கம் காவல் நிலையம் இன்று (செப்டம்பர் 17) முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின், பேருந்து முனையம் உள்ளே, 2024 ஜனவரியில் தற்காலிக காவல் நிலையம் துவக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரூ.18.26 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, கடந்த மாதம் முதல்வரால் திறக்கப்பட்டும் கிளாம்பாக்கம் காவல் நிலைய புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய காவல் நிலையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக தாம்பரம் மாநகர காவல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை ஆகியவற்றை உறுதி செய்யும் பொருட்டு, காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் பணியமர்த்தப்பட்டனர். G.O. (MS) No.170, Home (Police XIV) Department, dated 04.03.2024 – ன்படி, சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய T-21 கிளாம்பாக்கம் காவல் நிலையம், பேருந்து முனையத்திற்குள் தற்காலிகக் கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), கிளாம்பாக்கத்தில் ஒரு நிரந்தரக் காவல் நிலையக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது. இக்கட்டிடம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
தற்போது, இந்த புதிய கட்டிடம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, இதில், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு, குற்றப் பிரிவு மற்றும் கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய முக்கியப் பிரிவுகள் இன்று 17.09.2025 முதல் பயன்பாட்டிற்கு வந்து முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.