சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் பட்டாசு தயாரிப்பு மையமாக கருதப்படும் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான மினி நாக்பூர் உரிமம் பெற்ற திவ்யா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 30 க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு உற்பத்தி பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டாசு தயாரிக்க தேவையான ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு அறைகள் தரைமட்டமானது.
தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்து கொண்டிருந்த கண்டியாபுரம் இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த கௌரி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காளி முத்து என்பவரும் உயிரிழந்தார்.
மேலும் குமரேசன் 30, மாரியம்மாள் 40, மேகலை 21, சிவரஞ்சனி 39, ஜெயலட்சுமி 55 ஆகிய 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 100 சதவீத தீக்காயமடைந்த காளிமுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
வெடி விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் தொடர்புடைய போர்மேன் சோமசுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
