கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜனவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட தென்மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டன.
ஆனால் வெளியூர்களுக்கு செல்லும் போது சென்னை சிட்டிக்குள் இருந்து வணடலூர் அருகே இருக்கும் கிளாம்பாக்கத்துக்கு செல்ல பயணிகள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். தமிழக அரசு சார்பில் சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து 5 நிமிடத்துக்கு ஒரு நகர பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றனர்.
அதேசமயம் ரயிலில் செல்ல வேண்டுமென்றால் வண்டலூரில் இறங்கி கிளாம்பாக்கத்துக்கு செல்ல வேண்டும்.
இந்தநிலையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்ககு தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தப்புள்ளி கோரியது. தொடர்ந்து ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளன. பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலையில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ் , “கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடையின் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைக்க ஆகாய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.