ஈரோடு அருகே குழந்தை வந்தனா கடத்தப்பட்ட விவகாரத்தில் 7 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ், இவரது மனைவி கீர்த்தனா. இந்த தம்பதிக்கு 5 மற்றும் ஒன்றரை வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியினர் ஈரோடு மாவட்டம் சித்தோடு கோணவாய்க்கால், லட்சுமிநகர் பகுதியில் உள்ள சேலம்–கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த தம்பதியின் ஒன்றைரை வயது குழந்தை வந்தனா கடந்த அக்டோபர் 15ம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபரால் கடத்தப்பட்டது. அதிகாலையில் குழந்தை காணாமல் போனதை உணர்ந்த தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து சித்தோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏடிஎஸ்பி தங்கவேல் தலைமையில் 7 தனிப்படை அமைத்து காவல்துறையினர் குழந்தையை தேடி வந்தனர். சம்பவம் நடந்த அதிகாலை 12 முதல் 1 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சம்பவ இடத்தை கடந்து சென்றுள்ள 120 வாகனங்கள் எண்களை எடுத்து ஆய்வு செய்தும் , சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சுற்றியுள்ள இடங்களில் இருந்த நூற்றுக்காணக்கான சிசிடிவி கேமராகளை காட்சிகளை ஆய்வு செய்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
குழந்தை கடத்தப்பட்டு 25 நாட்கள் ஆன நிலையில் இன்று (நவம்பர் 10) நாமக்கல்லில் இருந்து குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தையை கடத்திய ரமேஷ் என்பவர் கொடுமுடியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
