ஆண்கள் சுய உதவிக் குழு.. மீண்டும் சட்ட மேலவை.. அமமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

அமமுகவின் 11 வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று மார்ச் 29-ஆம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து அமமுக சார்பாக 120 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிட்டார்.

அமமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
  • தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 85 சதவீதம் தமிழர்களே பணிபுரியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்.
  • தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்துக்கு நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை முறியடித்து தமிழ்நாட்டின் உரிமை பாதுகாக்கப்படும்.
  • இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் காவிரி டெல்டா பகுதியில் இயற்கை வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தவும், ஊதியத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழகத்தில் நடைபெறும் மணல் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்துவதோடு, அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சட்டபூர்வமான சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த நடவடிக்கை எடுப்பதோடு, 69 சதவீத இட ஒதுக்கீடு முறையாகப் பாதுகாக்கப்படும்.
  • தென் மாவட்டங்களில் வசிக்கும் சீர் மரபினருக்கு டிஎன்சி அல்லது டிஎன்டி என்ற இரண்டு சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையை மாற்றி, டிஎன்டி என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழகத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் பி.எம். ஸ்ரீ திட்ட பள்ளிகள் அதிக அளவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை அறிவியல் இளநிலை படிப்புகளுக்கு அனைத்து வகையான கட்டணங்களும் ரத்து செய்யப்படும்.
  • மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் போல வட தமிழக மக்களுக்காக அப்பகுதியில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • திமுகவின் அதிகார வர்க்கத்தால் கைகள் கட்டப்பட்டுள்ள காவல் துறைக்கு முழு சுதந்திரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மதுவிலக்கு கொள்கையை முழுமையாக அமல்படுத்தும் வகையில் நடைமுறைக்கு சாத்தியம் உள்ள புதிய மதுக் கொள்கையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • குடியிருப்புகளுக்கு மாதம் ஒருமுறை மின்கணக்கீடு செய்யப்படும்.
  • மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
  • மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விரும்பும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழகம் முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
  • திமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அனைத்து மதத்தினரின் வழிபாட்டு உரிமைகள் நிலைநாட்டப்பட்டு அவர்களது மத சுதந்திரம் பாதுகாக்கப்படும்.
  • தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் குறைந்தபட்சம் ஒரு அம்மா உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போலவே தொழில் ஆர்வம் உள்ள இளைஞர்களைக் கொண்டு ஆண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து அவர்களுக்கு தேவையான நிதி உதவி வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • திமுக-காங்கிரஸ் கூட்டணியால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழகம் முழுவதும் உள்ள தகுதியான பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

என்பது உள்ளிட்ட 120 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share