அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் அதிமுக இதுவரை 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் தங்களுக்கான தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை நேற்று அறிவித்தனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக தரப்பில் ஒரு தொகுதியும், பாஜக தரப்பில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்படுவதாக கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் நேற்று (மார்ச் 27) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுக தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஒதுக்கியுள்ள தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிட உள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் கணவர் சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவில் குஷ்பு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவரது கணவர் சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
