ஏமன் நாட்டில் தூக்கு மேடையில் நிற்கும் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. Nimisha Case
கேரளாவின் நிமிஷாவுக்கு, ஏமனில் தொழில் பங்குதாரரான அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்த வழக்கில் 2020-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நிமித்ஷாவின் இறுதியான மேல்முறையீடும் 2023-ல் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவருக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.
ஏமன் தலைநகர் சனா சிறைச் சாலையில் அடைக்கப்பட்ட நிமிஷாவுக்கான தூக்கு தண்டனை ஜூலை 16-ந் தேதி நிறைவேற்றப்பட இருக்கிறது. நிமிஷாவின் உயிரை மீட்பதற்காக, படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ8.60 கோடி குருதிப் பணம் (நிவாரணம்) தர அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இந்த குருதிப் பணத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிமிஷாவின் உயிர் தப்பும்.
இந்த சூழ்நிலையில், நிமிஷா விவகாரத்தில் மத்திய அரசு தலையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த அமர்வில் இன்று ஜூலை 14-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, மத்திய அரசு பெரும் முயற்சிகளை எடுத்துவிட்டது. நிமிஷாவின் குடும்பத்தினர் குருதிப்பணம் கொடுக்க முயற்சித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசால் இனி எதுவும் செய்ய இயலாத நிலைதான் உள்ளது என அட்டர்னி ஜெனரல் வேங்கடரமணி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நிமிஷாவின் நிலைமை தொடர்பாக கவலை தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்
இதனிடையே நிமிஷா விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார்.