மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம்ஶ்ரீ திட்டத்தில் இணையும் முடிவை கேரளா மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையானது இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கக் கூடியது; மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பதால் தமிழகம், கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த கொள்கையை ஏற்று மத்திய அரசின் பிஎம்ஶ்ரீ திட்டத்தில் இணையாததால், மாநில அரசுகளுக்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுத்தும் வந்தது.
இந்த நிலையில் கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு திடீரென, மத்திய அரசின் கல்வி கொள்கையை ஏற்று பிஎம்ஶ்ரீ திட்டத்தில் இணைவதாக அறிவித்தது பெரும் சர்ச்சையானது. கேரளாவில் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிஎம்ஶ்ரீ திட்டத்தில் சேரும் மாநில அரசின் முடிவுக்கு கூட்டணி கட்சியான சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனையடுத்து கேரளா மாநில அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிஎம்ஶ்ரீ திட்டத்தில் சேருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில், மத்திய அரசின் பிஎம்ஶ்ரீ திட்டத்தில் விலகுவது என கேரளா மாநில அமைச்சரவை முடிவு செய்தது. மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்ய 7 அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
