“சிறையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் என் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்று அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மார்ச் 22) தெரிவித்துள்ளார்.
டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு 9 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து நேற்று இரவே உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் அவரச வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஆஜர்படுத்த இருந்ததால், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இதனை தொடர்ந்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியபோது, “உள்ளே இருந்தாலும் சரி வெளியே இருந்தாலும் சரி என் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜூ ஆஜராகி, “நேற்று இரவு 9.05 மணிக்கு கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டிருக்கிறார். 10 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு உள்ளது. இந்த புதிய மதுபான கொள்கையை நடைமுறைப்படுத்தியதிலும், தெற்கு குழுவுக்கு ஆதரவாகவும் கெஜ்ரிவால் செயல்பட்டுள்ளார்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி ஆஜராகி, “ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட நான்கு முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நேரடியான ஆதாரம் இல்லை. அதனால் இவர்களை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை
இந்த வழக்கை இயந்திரத்தனமாக கையாளாதீர்கள். சட்டப்படி அணுகுங்கள். இதில் ஜனநாயகத்தின் பெரிய பிரச்சனைகள் உள்ளன” என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Padai Thalaivan: சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்
பொன்முடிக்கு உயர்கல்வி… ராஜகண்ணப்பனுக்கு கதர், கிராம தொழில் ஒதுக்கீடு!