ஜம்மு காஷ்மீரின் நௌகாம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் கடந்த நவம்பர் 10 அன்று செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பயங்கரவாத செயலாகவே மத்திய அரசால் கருத்தப்பட்டு, என்.ஐ.ஏ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காஷ்மீர், புல்வாமா பகுதியைச் சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் ஜம்மு காஷ்மீரின் நௌகாம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனை நேற்று ஆய்வு செய்து கொண்டிருந்தபோது வெடித்து சிதறியுள்ளது.
இரவு 11.22 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி ஒருவர் தி பிரிண்ட் ஊடகத்திடம் கூறியுள்ளார்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் வெடிபொருள் வெடித்து 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று கார் வெடிகுண்டு தாக்குதல், அதிகரித்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் ஆகிய சம்பவங்கள் தேசத்தின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது.
