டெல்லி சிபிஐ (Karur Tragedy CBI Probe) தலைமை அலுவலகத்தில் கரூர் துயரம் சம்பவம் தொடர்பாக 2-வது நாளாக நேற்று (டிசம்பர் 30)-ந் தேதி விசாரணை நடைபெற்றது.
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவர் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன், விஜய் பிரசார பேருந்தின் ஓட்டுநர் மற்றும் கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆஜராகி வருகின்றனர்.
முதல் நாள் டிசம்பர் 29-ந் தேதி சுமார் 9 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. 2-ம் நாளான நேற்று சுமார் 6 மணி நேரம் இவ்விசாரணை நடந்தது.
அதிகாரிகள் சொன்னது என்ன?
முதல் நாள் விசாரணையின் போது தவெக நிர்வாகி நிர்மல்குமார் உள்ளிட்டோர் 43 பக்க ஆவணங்கள், வீடியோ பதிவுகள், வாய்ஸ் மெசேஜ்களை சிபிஐ அதிகாரிகளிடம் கொடுத்திருந்தனர். இதனடிப்படையில் நேற்று அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த விசாரணையின் போது அதிகாரிகள் தெரிவித்த விவரங்கள்
- நாமக்கல்லில் விஜய் பிரசார கூட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டபோதே, “சீக்கிரமாக கரூருக்கு வாங்க.. கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது” என அறிவுறுத்தல் கொடுத்தோம். ஆனால் தவெகவின் நிர்மல்குமார், மதியழகன் கேட்கவில்லை.
- கரூருக்குள் வாகனம் வந்த போதும் கூட்டத்துக்கு ”வேகமாக வாங்க” என்றுதான் சொன்னோம்.
- சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்துக்கு முன்னதாகவே விஜய் வாகனத்தை நிறுத்த சொன்னோம்.. ஆனால் கூட்டத்துக்கு நடுவே விஜய் வாகனம் சென்றது
- விஜய் வாகனம் திடீரென அப்படி கூட்டத்துக்குள் சென்றதால்தான், அங்கிருந்தவர்கள் ஒருபக்கமாக விலக, நெரிசல் ஏற்பட்டு சம்பவம் நிகழ்ந்துவிட்டது.
- கூட்டத்துக்கு சரியான நேரத்துக்கு வருவதில் விஜய் அலட்சியமாக இருந்தனர்.
- பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது தீயணைப்பு துறை, ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க சொல்வோம். அது வழக்கமான நடைமுறைதானே தவிர எந்த உள்நோக்கமும் இல்லை.
- சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் செல்போன் எண்களுக்கு ஜிபே மூலம் பணம் செலுத்தப்பட்டது, டாஸ்மாக் கடைகளுக்கு அவர்கள் சென்றதாக கூறப்படுவது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.
தவெகவினர் பதில்கள் என்ன?
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்த பதில்களை வைத்துக் கொண்டு மீண்டும் தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் பேருந்து ஓட்டுநர் ஆகியோரை ஒன்றாக அமரவைத்து விசாரித்தனர் சிபிஐ அதிகாரிகள்.
அப்போது, “நீங்கள் கொடுத்த ஆவணங்கள் உள்ளிட்டவைகளுக்கு அதிகாரிகள் தரப்பில் பதில் தெரிவித்துள்ளனர்.. உங்க பதில் என்ன?” என அதிகாரிகள் கேட்டனர்.
இதனையடுத்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர், “நாங்க கட்சிக்காரங்களை ஒழுங்குபடுத்துறதுல கவனமாக இருந்தோம்.. கூட்ட ஏற்பாடுகளை கவனிச்சது சிடி நிர்மல்குமாரும் கரூர் மாவட்ட செயலாளர்களும்தான்” என பதிலளித்தனர்.
- பின்னர் நிர்மல்குமார் முதல் நாள் தந்த ஆதாரங்களுக்கு கூடுதல் விளக்கம் தந்தார்.
விஜய் டிரைவரிடம் விசாரணை– தடுமாற்றம்
விஜய் பிரசார பேருந்தை ஓட்டிய ஓட்டுநரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, “கூட்டத்துக்குள் பேருந்தை விஜய்தான் ஓட்ட சொன்னாரா? “ என்பது உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகள் கேட்ட போது, ஓட்டுநர் ரொம்பவே தடுமாறிக் கொண்டிருந்தார்.. சில நேரங்களில் என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது எல்லாம் ஆதவ் அர்ஜூனா குறுக்கிட்டு சில பதில்களை கூறினார்.
3 முறை விசாரித்த விஜய்
இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமாரை தொடர்பு கொண்டு விஜய் தொடர்ந்து விசாரித்து கொண்டே இருந்தார்.
- விசாரணைகள் எப்படி போகிறது?
- விசாரணையில் ரொம்ப பிரஸ்ஸர் தர்றாங்களா?
- விசாரணைக்கு என்னை கூப்பிடுவாங்களா?
என விஜய் கேட்டிருக்கிறார்.
இதற்கு
- விசாரணை கூலாகவே போகிறது
- அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்ளவில்லை; நெருக்கடி, பிரஸ்ஸர் கொடுக்கவில்லை என தவெகவினர் பதிலளித்துள்ளனர்
தன்னை விசாரணைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைப்பார்களா? என விஜய் போனில் கேட்ட கேள்விக்கு, “அதுதான் எனக்கு தெரியலை” என புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
தவெகவினரின் இந்த பதில்களை வைத்துக் கொண்டு அரசு அதிகாரிகளிடம் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் சில விளக்கங்களைப் பெற்றனர்.
இந்த விசாரணையின் இடையே சிபிஐ அலுவலகத்தில் அமர்ந்தபடியே புஸ்ஸி ஆனந்த் ‘குட்டி தூக்கமும்’ போட்டு எழுந்தார்.
இன்று 3-வது நாளாக நடைபெறும் விசாரணைக்கு தவெக நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் ஆஜராகி உள்ளனர்.
