கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமுதா ஐஏஎஸ், காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக சிபிஐ ஆலோசனை நடத்தி வருகிறது.
கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள், கரூரில் முகாமிட்டு 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து 2-வது கட்டமாக டெல்லிக்கு தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மற்றும் கரூர் ஆட்சியர் தங்கவேல், கரூர் எஸ்.பி. ஜோஷ் தங்கையா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் 3 நாட்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போதே, விஜய்யின் பிரசார பேருந்து ஓட்டுநரை விசாரித்த நிலையில் விஜய்யையும் விசாரிக்க சம்மன் அனுப்ப இருக்கிறோம் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதேபோல தவெக நிர்வாகிகள் தெரிவித்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் விஜய் பிரசாரம் நடந்த அன்று கரூர் இன்ஸ்பெக்டர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மாலை முதலே போன் செய்து பேசியது, ஜிபேயில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பணம் அனுப்பியது, விஜய் கூட்டத்துக்கான பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட போலீசார் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து, சம்பவம் நடந்தது தொடர்பாக பிரஸ் மீட் கொடுத்த காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அமுதா ஐஏஎஸ் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து விஜய், செந்தில் பாலாஜி, டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அமுதா ஐஏஎஸ் ஆகியோருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றனர்.
