காஞ்சிபுரம் வரதராஜ பெமாள் கோவிலில் நீண்டகாலமாக நீடித்து வரும் வடகலை- தென்கலை வைணவ பிரிவினர் இடையேயான மோதலுக்கு தீர்வு காண முன்னாள் நீதிபதி சஞ்சய் கவுலை நடுவராக, உச்சநீதிமன்றம் இன்று நியமித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், “ஸ்ரீ சைலேச தயாபாத்திரம்”, “நாலாயிர திவ்யப் பிரபந்தம்” மற்றும் “மணவாள மாமுனிகள் வாழி திருநாமம்” ஆகிய ஸ்லோகங்களை உச்சரிப்பதில் வடகலை, தென்கலை பிரிவினருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. கடந்த 2025 டிசம்பர் மாதத்தில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது.
தென்கலை பிரிவினருக்கு ஆதரவாக அமைந்த இந்த தீர்ப்பு, வரதராஜப் பெருமாள் சன்னதி முன்பு இந்த ஸ்லோகங்களை உச்சரிக்கும் முழு உரிமை தென்கலைப் பிரிவினருக்கே உண்டு என உறுதிப்படுத்தியது.
முன்னதாக, கோயில் அறநிலையத்துறை உதவி ஆணையர் தென்கலை பிரிவினருக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்தார். இதை எதிர்த்து வடகலை பிரிவினர் தொடர்ந்த வழக்கில், இரு பிரிவினரும் ஒரு குறிப்பிட்ட வரிசையில் உச்சரிக்கலாம் என தனி நீதிபதி முதலில் உத்தரவிட்டிருந்தார். ஆனால், தென்கலை பிரிவினர் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். 1910, 1915, 1963 மற்றும் 1969 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, தென்கலைப் பிரிவினரின் பிரத்யேக உரிமையை டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்தது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இருதரப்பும் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன. இதனை இன்று ஜனவரி 28-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இரு பிரிவினருக்கு இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வர நடுவராக முன்னாள் நீதிபதி சஞ்சய் கவுலை நியமித்து உத்தரவிட்டது.
