ADVERTISEMENT

காஞ்சிபுரம் டிஎஸ்பி விவகாரம்- போலீஸுக்கு எதிராக வசமாக சிக்கிய சிசிடிவி பதிவு- வீடியோ!

Published On:

| By Kavi

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை நீதிபதி ப.உ.செம்மல் கைது செய்ய உத்தரவிட்ட சம்பவத்தில் வெளியாகி இருக்கும் சிசிடிவி பதிவுகளால் போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சம்பவம் 1: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பட்டிலன சமூகத்தைச் சேர்ந்த முருகன் அவரது மனைவி பார்வதி ஆகியோர், அதே பகுதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் சிவா, மகன் ஸ்டாலின், சிவா மருமகன் லோகேஷ் (போலீஸ்) ஆகியோர் மீது தங்களைத் தாக்கியதாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தனர்.

ADVERTISEMENT

சம்பவம் 2: பேக்கரி உரிமையாளர் சிவா, அவரது மருமகன் லோகேஷ் (போலீஸ்) இருவரும், பார்வதி- முருகன் தம்பதியினர் தங்களைத் தாக்கியதாக அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகி மருத்து பதிவேட்டில் பதிவு செய்தனர் விவரமாக.

எதற்காக இந்த புகாகர்கள்?

ADVERTISEMENT

சிவா- லோகேஷுக்கு சொந்தமான பேக்கரிக்கு அருகே வசிப்பவர் முருகன்- பார்வதி தம்பதியினர். சிவாவின் பேக்கரியில் வாங்கிய பொருளின் தரம் பற்றி முருகன் கேள்வி எழுப்ப அது வாய்தகராறில் தொடங்கி மோதலாகிவிட்டது. இதில் சிவா, மகன் ஸ்டாலின், சிவா மருமகன் லோகேஷ் மற்றும் கடை ஊழியர்கள் ஆகியோரும் முருகனும் சரமாரியாக தாக்கிக் கொள்கின்றனர்.

நீதிமன்றம் தலையிட்டது ஏன்?

ADVERTISEMENT

முருகன்- பார்வதி தம்பதியினர் , சிவா, ஸ்டாலின்,லோகேஷ், பெயர் தெரியாத மூவர் உட்பட ஆறு பேர் மீது புகார் கொடுத்தது ஜூலை 25-ந் தேதி. ஆனால் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது ஆகஸ்ட் 20-ந் தேதி. 27 நாட்கள் தாமதமாக எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட, செப்டம்பர் 4-ந் தேதி விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையை காஞ்சிபுரம் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் மேற்கொண்டார்.

இந்த விசாரணையின் போது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே 27 நாட்களா? என நீதிபதி ப.உ.செம்மல் கேள்வி எழுப்பினார். இதற்கு போலீசார் தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை. இதனால் இதனை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய உத்தரவிட்டார் நீதிபதி.

டிஎஸ்பியை நீதிபதி செம்மல் கைது செய்ய உத்தரவிட்டது ஏன்?

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு என்பதால் டிஎஸ்பி தான் விசாரணை அதிகாரியாக இருப்பார் சட்டப்படி. ஆகையால் செப்டம்பர் 8-ந் தேதி விசாரணையின் போது டிஎஸ்பி சங்கர் கணேஷ், நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போதும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மாவட்டத்தை வெளியேற்ற வேண்டும் என நேரக் கெடு விதித்து போலீசாருக்கு அவகாசம் தந்தார் நீதிபதி. இதனையும் போலீசார் நிறைவேற்றாததாலேயே டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டார் நீதிபதி செம்மல். பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கைது உத்தரவை ரத்து செய்தது.

நீதிபதி செம்மல் உத்தரவில் என்ன சர்ச்சை?

காஞ்சிபுரம் நீதிமன்ற விசாரணையிலேயே அரசு தரப்பில், நீதிபதிக்கும் பேக்கரி உரிமையாளர் சிவாவின் மருமகன் லோகேஷுக்கும் முன்பகை இருப்பதால்தான் நீதிபதி செம்மல், இவ்வழக்கில் கடுமையான உத்தரவை பிறப்பிக்கிறார் என குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சிவா-லோகேஷ்-க்கு ஆதரவாக, பேக்கரியில் அப்படி ஒரு தகராறு- சண்டை எதுவுமே நடக்கவில்லை எனவும் சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர்.

பேக்கரி தகராறு நடந்தது உண்மையா?

ஆம். சிவா- லோகேஷ் பேக்கரியில் தகராறு- அடிதடி சண்டை நடந்தது உண்மை. இது தொடர்பாக 2 சிசிடிவி பதிவு காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் சிவா,லோகேஷ்,ஸ்டாலின், கடை ஊழியர்கள் ஆகியோருக்கும் முருகனுக்கும் இடையேயான மோதல்- தகராறு- அடிதடி அனைத்தும் பதிவாகி உள்ளது. குறிப்பாக முருகனை, சிவா, ஸ்டாலின்,போலீஸ் லோகேஷ் மற்றும் கடை ஊழியர்கள் சேர்ந்து அடித்து புரட்டி எடுக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.

இந்த காட்சிகள் வெளியான நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட புகார் மற்றும் வழக்குகளில் காஞ்சிபுரம் போலீசார் அலட்சியம் காட்டுவதைக் கண்டித்து அம்மாவட்ட வழக்கறிஞர்கள் செப்டம்பர் 12-ந் தேதி கண்டனப் போராட்டம் நடத்த உள்ளனர்.

வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?

தாடி கார்த்தி

காஞ்சிபுரம் வழக்கறிஞர் தாடி கார்த்தி நமது மின்னம்பலத்திடம் கூறுகையில், “எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 18 (A) (i) (a)-ன் கீழ் ஒருவர் புகார் தந்தால் போலீசார் உடனே முதல் தகவலறிக்கையைப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற வழக்கில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யாவிட்டால் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கான காலதாமதத்தையும் விளக்க வேண்டும்.

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான புகார்களுக்கு ஆதாரமில்லை; மேல் நடவடிக்கை எடுக்க தேவை இல்லை என போலீசார் முடிவு செய்ய முடியாது. அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை புகார்தாரர் எழுதப்படிக்கத் தெரியாதவர் எனில் Sec 4(2), 4(6)-ன் கீழ் போலீசாரே புகாரை எழுதி அந்த நபருக்கு வாசித்து காட்டியிருக்க வேண்டும். இதனையடுத்து Sec 4(2) (c)-ன் படி புகாரை ஏற்று முதல் தகவல் அறிக்கையை உடனே பதிவு செய்ய வேண்டும்.

இப்படி எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி சங்கர் கணேஷ் விவகாரத்தில், பூசிவாக்கம் முருகன் பேக்கரிக்கு போனதும் உண்மை- பேக்கரியில் தகராறு நடந்து தாக்கப்பட்டதும் உண்மை. பேக்கரியின் உரிமையாளரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு ஆதாரமும் உள்ளது.

ஆகையால்தான் நீதிபதி ப.உ.செம்மல், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டித்தார். போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் தாமாக முன்வந்து வழக்கை நடத்தினார். அப்போதும் போலீசாருக்கு அவகாசம் கொடுத்தார்; ஆனாலும் போலீசார் நீதிபதியின் உத்தரவை மதிக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டார். ஆகையால் நீதிபதி ப.உ.செம்மலின் நடவடிக்கைகள் சரியானது; அவரது உத்தரவும் நியாயத்துக்கானதுதான் என்கிறார்.

டிஎஸ்பிக்கும் நீதிபதிக்கும் முன்விரோதமா? வெளியான CCTV... | Kanchipuram DSP | Kanchipuram Police
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share