காமராஜர்.. எம்ஜிஆர்.. மு.க.ஸ்டாலின்! உதயச்சந்திரன் ஐஏஎஸ் சிறப்புரை!

Published On:

| By Mathi

BookRelease jayaranjan

பேராசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத் தலைவர் டாக்டர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய ”Tamilnadu In Transition” நூல் வெளியீட்டு விழா சென்னை சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று ஜனவரி 5-ந் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை செயலாளரும் கூடுதல் தலைமை செயலாளருமான உதயச்சந்திரன் நூலை வெளியிட, அதை சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் பெற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன், கவிதா ராமு ஐஏஎஸ், பேராசிரியர் முரளி சண்முகவேலன், எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். மின்னம்பலம் ஆசிரியர் காமராஜ், வரவேற்புரை வழங்கினார். ஜெயரஞ்சன் ஏற்புரை நிகழ்த்தினார். பெல் ராஜன் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் பேசுகையில், “ஜெயரஞ்சன் அவர்களுக்கு வாழ்த்து கூறுவதற்குப் பதிலாக, தனிப்பட்ட முறையில் சில மென்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

முதல் கண்டனம்: வெகு குறைவான சமயங்களில்தான் நான் விழாவுக்கு குறித்த நேரத்தில் வந்திருப்பேன். இதுவும் அத்தகைய ஒரு சமயம். பின்னணி என்னவென்றால், வழக்கமாக ஐந்தரை மணிக்கு நிதித்துறை செயலாளரின் அலுவலகம் பரபரப்பாக இருக்கும். இன்று நிதித்துறை செயலாளர் ஐந்தரை மணிக்கு அலுவலகத்தைவிட்டுக் கிளம்பிவிட்டார் என்பதே தலைமைச் செயலகத்தில் ஒரு செய்தியாகப் பரவியது. சற்றே அவப்பெயருடன் அந்தச் செய்தியை எனக்குத் தேடிக்கொடுத்த ஜெயரஞ்சன் அவர்களுக்கு என் கண்டனங்கள்!” என்று நகைச்சுவையாக பேச்சைத் தொடர்ந்தார்.

மேலும் அவர், நகைச்சுவையைத் தள்ளிவிட்டு யோசித்துப் பார்த்தால், எனக்குத் தோன்றுவதெல்லாம், மேடையில் அமர்ந்திருக்கும் நபர்களுக்கும் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் நபர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி எதுவும் இல்லை. குறைந்தபட்சம் இந்த மேடையின் உயரம் சற்றுக் குறைந்திருக்கலாம்; ஒரு வட்ட வடிவில் இந்த உரையாடல் நடந்திருக்கலாம்.ஒவ்வொருவரும் தங்களுடைய துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியவர்கள்; சாதனைகளை நிகழ்த்த முயன்றுகொண்டிருப்பவர்கள். அந்த வகையில், இந்தக் கூட்டம் மிக முக்கியமான செய்தியைச் சொல்லிச் செல்கிறது என்று நான் நம்புகிறேன்.

ADVERTISEMENT

அனேகமாக இன்று இரவு நீங்கள் கண்களைச் சற்றே மூடிக்கொண்டு யோசித்துப் பார்த்தால், அதற்கான புரிதல் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சமூகமும் சிந்தனையாளர்களால் வழி நடத்தப்படுகிறது. பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால், 2 அல்லது 3 முக்கியமான அறிஞர்கள்தான் இந்த உலகை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். People used to say the great battle with Adam Smith and Karl Marx…

திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்படுகிறது?

சிந்தனையாளர்கள்தான் இந்த உலகை வழிநடத்துகிறார்கள். ஆனால், அந்தச் சிந்தனையாளர்களின் வழிநடத்துதலை, அவர்களுடைய சிந்தனையை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகின்ற எங்களைப் போன்ற அதிகார வர்க்கத்தினருக்கும் இவர்களுக்கும் இடையேயான இடைவெளி மிக முக்கியமானது. இந்த இடைவெளி குறைந்தால், அந்தச் சமூகம் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

நடப்புக் காலத்தில் இன்னொரு பரிமாணம் அதில் சேர்ந்துகொண்டது. சிந்தனையாளர்கள், நிர்வாகிகள், சிவில் சமூகத்தின் அமைப்புகள் ஆகியவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்த மூன்றும் சேரும் இடத்தில் அந்தச் சமூகம் மிகவும் முதிர்ச்சிகரமாக, தன்னுடைய பாதையை இன்னும் சிறப்பாகத் தீர்மானித்துக்கொள்ளக்கூடிய சமுதாயமாக மாறுகிறது.

சிந்தனையாளர்களுக்கும் செயல்படுத்தாளர்களுக்கும், அதே நேரத்தில் களச் செயல்பாட்டாளர்களுக்கும் உள்ள உரையாடல் மிக முக்கியமானது. அந்த வகையில் இந்தக் கூட்டமும் புத்தகமும் மிக முக்கியமானது. நிதித்துறைச் சார்பாக யோசித்துப் பார்க்கும்போதெல்லாம், பல திட்டங்களை எப்படி நிறைவேற்றினோம், உருவாக்கினோம், அதற்கான நிதி ஆதாரங்களை எப்படி முன்னுரிமைப்படுத்தி உருவாக்கினோம் என்பதை யோசிக்கும்போது, பல நேரங்களில் பல திட்டங்கள் ஒரு சிறு பொறியிலிருந்து உருவாகி வரக்கூடும்.

ஒரு செய்திக் கட்டுரையில் சேலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு மருத்துவர்-செயல்பாட்டாளரின் மனைவி லட்சுமி நாராயணன் அரசைக் குறைகூறி ஒரு செய்தியைத் தெரிவித்திருந்தார் – “அரசு எனது கணவர் இறந்த போது ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தது; ஆனால் தரவில்லை” என்று குற்றம் சாட்டியிருந்தார். வழக்கமாக செய்தித்தாள்களில் நாங்கள் பாராட்டுச் செய்தியைப் படிப்பதில்லை; அரசுக்கு எதிரான செய்திகளைத்தான் படிப்பது வழக்கம். அந்தச் செய்தி சற்றே உறுத்தியது. எப்படி அரசு அதைச் சொல்லி செய்ய முடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு பார்க்கும்போது, மருத்துவக் கல்வி இயக்குநர் அத்தகைய வாக்குறுதி தரவில்லை போலும்; மருத்துவராகச் சேர்ந்து ஒரு தொகுப்பு நிதியை ஏற்படுத்திக்கொண்டு அதிலிருந்து கொடுத்திருக்கிறார்கள் – அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார் என்று ஒரு செய்தி வந்திருந்தது.

அதற்குப் பிறகு அதுகுறித்து யோசித்துக்கொண்டிருந்து, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனிப்பட்ட முறையில் நிறைய செய்திகளைச் சேகரித்துப் பார்க்கும்போது: எந்தெந்த வங்கிகளில் இது போன்ற திட்டங்கள் இருக்கின்றன என்று பார்க்கும்போது, எந்த அரசு ஊழியர் தனது சம்பளக் கணக்கை வைத்திருக்கிறாரோ அந்தக் கணக்கிற்கு காப்பீடு வழங்குவது வழக்கம்.எப்படி அதற்கான திட்டங்களை வகுக்க முடியும் என்று பார்க்கும்போதுதான் ஒரு புதிய திட்டம் உருவானது. விபத்தில் உயிரிழந்தால் ஒரு கோடி ரூபாய்; இயற்கை மரணமானால் குறைந்தது 10 லட்சம் ரூபாய்; விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் பெண் குழந்தைக்கு உயர்கல்விக்கு சில லட்ச ரூபாய், திருமணத்திற்கு இன்னும் சில லட்ச ரூபாய் என்று ஒரு திட்டத்தை வடிவமைத்தோம்.அந்தத் திட்டத்திற்கு ரூ. 92,000 கோடி ஒதுக்கிய நிலையில், அதில் சுமார் ரூ.55,000 கோடி பணம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்குச் சென்றது.

அதற்கு அந்த ஊழியருக்கு கிடைக்கும் வட்டி வெறும் 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.வருடத்தில் ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களில் 200 பேர் விபத்தில் இறந்து போகிறார்கள்; 2000 பேர் இயற்கையாக மரணமடைகிறார்கள் என்றெல்லாம் கணக்குப் பார்த்து பேசியபோது, ஒரு சில தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. சில நேரங்களில் சாணக்கிய நீதியையும் சற்றுத் துணைக்கு அழைக்க வேண்டியிருந்தது.

ஒவ்வொரு வங்கியாளர்களாகத் தனித்தனியாக அழைத்துப் பேசி, கடைசியில் அந்தத் திட்டம் வந்தபோது மிகப்பெரிய திட்டமாக வந்தது. இந்தியாவில் முதல்முறையாக அந்தத் திட்டம் தமிழகத்தில் வந்தது. ஒரு பத்திரிகை செய்தியிலிருந்து உருவான திட்டம் அது.அந்த வங்கியாளர்கள், உயர் அதிகாரிகள் பலரும் பேசியபோது சொன்னது, “எங்களுக்கே இந்தத் திட்டங்கள் கிடையாது; ஆனால் இங்கு உள்ளது” என்றனர். ஒரு அரசு ஐஏஎஸ் அதிகாரி விபத்தில் இறந்தால் ஒரு கோடியும், கடைநிலை அதிகாரி விபத்தில் இறந்தால் ஒரு லட்சம் கொடுப்பது அரசின் நோக்கம் அல்ல. இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் ஒரு கோடி.

திருச்சியில் வருவாய் கோட்ட அதிகாரியான தேவசேனா விபத்தில் இறந்தார் – அவருடைய குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தோம்; ஒரு சத்துணவுப் பணியாளர் இறந்ததற்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கினோம். ஏனெனில், அரசு தனது சொந்த ஊழியர்களிடம் பாகுபாடு பார்க்க முடியாது. பல நேரங்களில் இதில் ஒரு சமூக அக்கறையும் இருக்கும்; பின்னணியில் நிதித்துறையும் இயங்க வேண்டியிருக்கும்.

கொள்கைகளின் நிறம் மாறலாம்

காலை உணவுத் திட்டம் வந்த கதை குறித்து, அனேகமாக ஓய்வு பெற்ற பிறகு ஒரு புத்தகம் எழுதும் அளவிற்குச் செய்திகள் என்னிடம் இருக்கின்றன. அது குறித்து பேசும்போது, பல நேரங்களில் ஜெயரஞ்சனிடமும் உரையாடியிருக்கிறேன்.தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன? காலை உணவுத் திட்ட அரசாணையை நான் தயாரித்துக் கொடுத்தேன். அந்த அரசாணையின் முதல் வரியே சங்க இலக்கியப் பாடல் வரியோடுதான் தொடங்கும்:“பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே?” என்பதுதான்.

தமிழ்நாட்டின் தலைவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பசிப்பிணியைப் போக்க, வறுமையை அகற்ற தன்னால் இயன்ற திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் கொள்கைகளின் நிறம் மாறியிருக்கலாம்; ஆனால் நோக்கம் மக்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக.முதலில் சைதாப்பேட்டையில் உள்ள மாதிரிப் பள்ளியில் ஆரம்பித்த அந்த மதிய உணவுத் திட்டம், ஓரிரு ஆண்டுகளிலேயே நிறுத்தப்பட்டுவிடுகிறது.

அதற்கு மிக முக்கியமான காரணம் மெட்ராஸ் முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆடிட் டிபார்ட்மெண்ட் கடும் ஆட்சேபனை தெரிவித்ததால் அந்தத் திட்டம் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்டது. அந்தத் திட்டம் கொண்டுவந்த பிறகு மாணவர்களின் சேர்க்கை எப்படி அதிகமானது என்பதெல்லாம் எடுத்துவைக்கப்பட்டும், திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.பிறகு நீண்ட ஆண்டுகள் கழித்து பெருந்தலைவர் காமராஜர் இந்த மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்த போது, அமைச்சரவைக் கூட்டத்தில் அது எப்படி விவாதிக்கப்பட்டது என்பது குறித்த கட்டுரையை “தமிழர் நிதி நிர்வாகத்தில்” பதிவு செய்துள்ளோம்: எப்படி அதிகார வர்க்கம் அதை எதிர்த்தது; எப்படி அதிகாரிகள் அதை எதிர்த்தார்கள்; அதை முதல்வர் எப்படி தன்னுடைய கூர்ந்த மதியைப் பயன்படுத்தி மாற்றி, அந்தத் திட்டத்தை நிறைவேற்றினார் என்பது குறித்த ஒரு நல்ல கட்டுரை அது.அதிலிருந்து ஆரம்பித்து சத்துணவுத் திட்டம் வந்தபோதும் கூட, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்ட அதிகாரிகள் கடுமையாக உழைத்துத் திட்டங்களைத் தீட்டுகிறார்கள்: 30,000 பள்ளிகளுக்கு இதை விரிவுபடுத்த வேண்டும்; அதை நடைமுறைப்படுத்த எவ்வளவு செலவாகும்; சமையல் கூடம் கட்டுவதற்கான செலவு; திங்கள் முதல் சனி வரை 6 நாட்களுக்கு சமைப்பதற்கு எவ்வளவு செலவு; சமைக்கும் நபர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த விரிவான பட்டியல் – அவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு தலைமைச் செயலாளர் முதலமைச்சரிடம் செல்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை பசிக்காதா?

எம்.ஜி.ஆர் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார். பொதுவாக தமிழக நிர்வாகம் சற்று நுணுக்கமாக செய்திகளையும் உள்வாங்கிக்கொண்டுதான் திட்டங்களைத் தீட்டுவது வழக்கம் – பைசா கணக்கு வரை சரியாக இருக்கும். இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு பெருமிதப்பட்டுப் பாராட்ட வேண்டிய முதல்வர் சொன்னது ஒரு கேள்வி: “குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பசிக்காதா?” என்று. திட்டம் மாற்றப்பட்டது. இப்படித்தான் அந்தத் திட்டம் உருவானது.காலை உணவுத் திட்டம் கொண்டுவந்த போதும் இது போன்ற வாதப்பிரதிவாதங்கள் அலுவலர்களிடையே அதிகமாக நடந்தது. அதை முதல்வரிடம் கொண்டுசென்ற போது, அவர் முழுமையான ஆதரவு கொடுத்து “இதை அவசியம் செய்ய வேண்டும்” என்று சொன்னதால்தான் இந்தத் திட்டம் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த நிகழ்வு, இந்த நூல் அனைத்துமே மக்களைப் பற்றிப் பேசக்கூடிய, மக்களது பிரச்சனைகளைப் பற்றிப் பேசக்கூடிய செய்திகள் இருக்கிறது. எனவே இது வெறும் கருத்தாக்கமாக மட்டும் இல்லாமல், எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தது.

12 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தன்னார்வத் தொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போது, முதல் முறையாக எனக்குச் சற்று வெட்கி தலைகுனிய வேண்டிய ஒரு சூழல் வந்தது.அந்தத் தொண்டு நிறுவனம் தனக்கான பயனாளர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான சில விதிமுறைகளை வகுத்திருந்தது. பொதுவாக அரசின் பார்வையில் நாங்கள் பார்க்கும்போது: கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைப் பெண்கள் என்று பலருக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களைத் தீட்டுவோம்.அந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டாளர்கள் எப்படி தங்களுடைய பயனாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள் என்று வந்திருந்தவர்களுக்கு விளக்கிச் சொன்னபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது: தந்தையை இழந்த குடும்பம் குழந்தையைவிட, தாயை இழந்த குடும்பம் நிச்சயம் மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது என்றனர்.யோசித்துப் பார்த்தால், தந்தையை இழந்த குழந்தை எப்படியாவது தாயால் வளர்க்கப்பட்டுவிடும். ஆனால் தாயை இழந்த குழந்தை அனேகமாக மாற்றான் தாயிடம் போய்ச் சேரும் அல்லது தந்தை தனது குழந்தையைக் காப்பாற்றாமல் விட்டுவிடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அது மிக மிக முக்கியமானது. அந்த வகையில் அவர்கள் போட்ட நான்கு-ஐந்து குறியீடுகள் ஆச்சரியமாக இருந்தது.

இன்று யோசித்துப் பார்த்தால்: வறுமையின் நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது; வறுமையின் குறியீடுகள் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது.இரண்டு முக்கியமான திட்டங்கள் குறித்து அவர்கள் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானது. லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இருந்து வந்து ஆய்வு செய்திருந்தார்கள். இரண்டு முக்கியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் இலவச மகளிர் பேருந்துத் திட்டம்.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்துப் பேசும்போது: அரசுப் பேருந்துகளில் பயணிக்கக்கூடியவர்கள் அத்தனை பேரும் குறைவான ஊதியத்தில் இருப்பவர்கள். இரண்டு ஆய்வுகளும் மிகவும் சுவாரஸ்யமாக (interesting) இருந்தது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முடியுமா என்று மலைப்பாக இருந்தது; ஆனால் அதைச் செய்திருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் கொடுப்பது அந்தக் குடும்பத்தில் எவ்வளவு மகிழ்ச்சியை உருவாக்கும், அவர்கள் எப்படி இருப்பார்கள், அந்தப் பணத்தை எப்படிப் பயன்படுத்துவார்கள், இதை அவர்களை அங்கீகரிப்பதற்கான ஒன்று போன்றவற்றைப் படித்துப் பார்க்கும்போது உணர்ச்சிமயமாக இருந்தது.

இதேபோல, இலவச மகளிர் பேருந்துத் திட்டத்தைப் பெண்கள் வரவேற்கின்றனர். சிலர் “எங்களுக்கு இலவசப் பேருந்து தேவையில்லை; அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் எங்களை மதிப்பதில்லை” என்று சொல்லியிருந்தார்கள். இந்தக் கருத்துக்கள் எல்லாம் வரும்போது, இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடிந்தது.இதுபோன்ற feedbackகள் எல்லாம் வரும்போது, எங்களைத் திருத்திக்கொண்டு முழுமையாகச் செயல்படுத்த முடிந்தது.தமிழ் சமூகம் எது குறித்து உரையாட வேண்டும் என்ற சட்டகத்தை வகுத்துக்கொண்டால், இன்றைய தேதியில் மிக முக்கியமாக உரையாட வேண்டியது பொருளாதார வளர்ச்சி குறித்துதான் என உறுதியாக நம்புகிறேன்.நமது மாநிலத்தின் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே இருக்கிறது. நமது வாழ்க்கை நலன்களைப் பார்க்கும்போது, வாழ்வதற்கான செலவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நம்மிடம் அடுத்த 10 ஆண்டுகளில் வேலை செய்யும் மக்கள் தொகை குறைவாக இருக்கும். இந்த 10 ஆண்டுகளில் நாம் மிகக் கடுமையாக உழைத்து மேலே செல்ல வேண்டும்.

இன்று இரவு நீங்கள் யோசிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், நம்முடைய வாழ்க்கையை நாம் சிறப்பாக அமைத்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்; குழந்தைகளின் வாழ்க்கை முக்கியம் என ஓடிக்கொண்டிருக்கிறோம்; பெற்றோரின் நலன் கருதி பயணித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில்தான் இந்த வசதி இருக்கும். அதற்குப் பிறகு வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய கேள்வியைத் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும்.அதனால் பொருளாதார வளர்ச்சி மிக மிக முக்கியம். தமிழகத்தின் வட பகுதிகளில் மிக அதிகமான வேலைகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி குறித்த உரையாடல்…

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு என்னிடம் இரண்டு மூன்று கேள்விகளைக் கேட்டார். “டிஜிட்டல் காலத்தில் லைப்ரரி, மியூசியம் இதெல்லாம் தேவையா?” என்று கேட்டார். டிஜிட்டல், AI என்பதெல்லாம் சமூகத்தின் உயர்தரத்தை உச்சரிக்கும் வார்த்தைகள். நாம் கட்டிய மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 20 லட்சம் பேர் வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்திற்கு தினந்தோறும் ஆயிரம் பேர்; வார இறுதியில் ஐந்தாயிரம் பேர் வருகின்றனர். பொருநை அருங்காட்சியகத்திற்கு தினந்தோறும் எவ்வளவு பேர் வந்தனர் என்ற புள்ளிவிவரங்களை முதலமைச்சர் கேட்கின்றார் – வார இறுதியில் 10 முதல் 12 ஆயிரம் பேர் வருகின்றனர்.நமது தமிழ்ப் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது என அரசு கருதினால், அருங்காட்சியகங்கள் தேவை. அறிவை விரிவாக்க நூலகங்கள் தேவை.ஒரு பொருளாதார நிபுணர் என்ற அடைப்புக்குள் யோசித்துப் பார்த்தால்: 20 லட்சம் பேர் பார்த்துப் பயனடைவதைவிட வேறு என்ன பலனை எதிர்பார்க்க முடியும்? அதை நாம் செய்வது சரிதான்; எந்தத் தவறும் இல்லை.

“இலவச பஸ் தேவையா?” என்ற கேள்விக்கு என்னுடைய பதில்: பெண்கள் தங்களுடைய பிறந்த வீட்டிற்குச் செல்வதற்குக்கூட ஆணிடம் அனுமதி வாங்கிச் செல்லக்கூடிய சமூகத்தில், இலவசப் பேருந்து என்ன விதமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஆண்களும், கோபுரத்தின் உச்சத்தில் இருக்கும் நபர்களும் தீர்மானிக்கத் தேவையில்லை; பயனாளர்களான பெண்கள் தீர்மானிக்கலாம்.பொருளாதார அடிப்படையில் பார்த்தால் கூட: உலகெங்கும் இருக்கும் பொது போக்குவரத்து அதிகமான செலவு கொண்டது. சென்னை மாநகரத்தில் இரண்டாவது மெட்ரோ ரயில் சேவை 62 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தேவையா, தேவையில்லையா என்று பார்க்கும்போது, அது எவ்வளவு பேருக்கு சென்று சேர்கிறது, அதன் பயன் என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும்.இந்திய அளவில் தமிழ்நாட்டில் அதிக அளவில் நலத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பதுபோல் இருக்கக்கூடிய ஆதாரத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறோம். நம் தாயுமானவர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் திட்டம் என அத்தனை பேரையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறோம் என்றால், சமூகத்தில் அத்தனை பேரையும் நாம் நேசிக்கிறோம் என்று அர்த்தம். அவர்களுக்காகக் கவலை கொள்கிறோம் என்று அர்த்தம். அவர்களுக்காகவாவது நிதி ஆதாரத்தை உயர்த்துவதும் பெருக்குவதும் நமது கடமை.

எனது அன்பான வேண்டுகோள்

ஜெயரஞ்சனின் பங்கு மிக முக்கியமானது. பல நேரங்களில் அவரது பேச்சுகள் காற்றில் கலந்த பேரோசையாகக் கரைந்து விடுமோ என்று கூட நான் யோசித்திருக்கிறேன். அதனால் தொடர்ச்சியாக அவர் எழுத வேண்டும்; எழுத்து காலத்தை வெல்லும் என்று நான் நம்புகிறேன். எழுத்துக்கு அதிகமாக உழைக்கவும் வேண்டும்.இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் நம்மை யோசிக்க வைக்கும். நாம் எந்தத் திசையில் மாநிலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். தொடர்ச்சியான உரையாடல் மட்டுமே சமூகத்தை முதிர்ச்சி அடைய வைக்கும்” என்றார்.

🔴LIVE: TamilNadu In Transition நூல் வெளியீட்டு விழா நேரலை | J Jeyaranjan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share