மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தலைமையில் இன்று (மார்ச் 6) நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு அவசரக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், கட்சியின் துணைத் தலைவர்கள் மெளரியா, தங்கவேலு, பொருளாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை திமுகவிடம் கேட்பது, யார் வேட்பாளர்கள், எந்த சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் முடிவு வரும். தனி சின்னமா உதய சூரியானா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எதுவாக இருந்தாலும் நாங்கள் முடிவு செய்த பிறகு உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.
அண்ணா அறிவாலயத்தில் கடந்த மார்ச் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மநீம நிர்வாகிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு முதல் கட்ட ஆலோசனை நடத்தியது.
அதன்படி, மநீமவுக்கு உதயசூரியன் சின்னத்தில் 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நமது மின்னம்பலத்தில் களைகட்டும் பேச்சுவார்த்தை.. திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்? என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் கூறியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
