எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ‘கூண்டுக்கிளி’. அந்தக் காலத்தில் அது பெருந்தோல்வியைச் சந்தித்தது. அப்படம் வெளியான காலகட்டத்தில் நட்சத்திரங்களாக இருவரும் உருவெடுத்திருந்தார்களே தவிர, மிகப்பெரிய உயரத்தை அடையவில்லை. அந்த அந்தஸ்தை அடைந்தபிறகு, முதலிடத்திற்கான போட்டியில் இருவரும் எதிரும்புதிருமாக இருப்பதான பிம்பமே ரசிகர்களுக்குக் காணக் கிடைத்தது. அவர்களும் கூட, அதனைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. அதனால், இருவரும் சேர்ந்து நடிக்கிற பேச்சே எழவில்லை எனலாம்.
என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் இருவரும் கிட்டத்தட்ட அதே போன்றதொரு நிலையை தெலுங்கு திரையுலகில் உருவாக்கினார்கள். ஆனால், இருவரும் இணைந்து சில படங்களில் நடித்திருக்கின்றனர். மலையாளம், கன்னடத்தில் மேற்சொன்ன நிலைமை உருவாகவில்லை.
அடுத்த தலைமுறையில் அப்படியான போட்டி ரஜினி, கமல் இடையே முளைத்தது.
இத்தனைக்கும் நடிப்பைப் பொறுத்தவரை ரஜினிக்கு சீனியர் கமல். ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அவர் அறிமுகமானபோது, நீச்சல் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் கடலிலோ, நதியிலோ குதிப்பது போன்று செயல்பட்டுக் கொண்டிருந்தார் கமல். அதனைக் காணும் எவருக்கும் பயமும் பிரமிப்பும் வருவது இயல்பு.
ரஜினியிடம் பயம் இருந்ததா என்பது நமக்குத் தெரியாது; ஆனால், கமல் மீது கொண்ட பிரமிப்பு இன்றும் அவரிடத்தில் இருப்பதை உணர முடியும்.

ஆரம்ப காலத்தில் இருவரும் இணைந்து நடித்தபோதும், அவற்றில் கமலுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால், ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களில் ரஜினியின் இமேஜுக்கு ஏற்பச் சில காட்சிகளை வலிந்து திணித்திருந்தார் இயக்குனர் கே.பாலச்சந்தர். அவற்றை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள் என்பது வேறு விஷயம்.
16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் என இருவரும் 18 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் கௌரவ வேடத்தில் நடித்த தில்லு முல்லு, கிராப்தார் என்ற இந்திப்படமும் இதில் அடக்கம்.
எண்பதுகளில் ‘எம்ஜிஆர் – சிவாஜி’யின் அடுத்த தலைமுறை வாரிசுகளாக இருவரும் உருப்பெறத் தொடங்கியபோதுதான் ‘நாம் சேர்ந்து நடிப்பது கடினம்’ என்ற முடிவுக்கு இருவரும் வந்திருக்கக் கூடும். அதற்கான காரணங்கள் இருவருக்கே வெளிச்சம்.
ஆனால், அந்த கருத்தைத் தான் முதலில் வெளிப்படுத்தியதாகப் பல பேட்டிகளில் கமல் கூறியிருக்கிறார்.
அதேநேரத்தில், ’நாங்க தனித்தனியா நடிக்க ஆரம்பிச்சோம்’ என்று எங்கும் ரஜினி சொன்னதாகத் தெரியவில்லை. இருவரும் சேர்ந்தெடுத்த முடிவைப் பகிரங்கமாகச் சொல்லத் தேவையில்லை என்று அவர் நினைத்திருக்கலாம்.
எண்பதுகள் தொடங்கி இப்போது வரை சுமார் 35 ஆண்டுகளில் ரஜினியும் கமலும் பல மேடைகளைப் பகிர்ந்திருக்கின்றனர். சினிமா சார்ந்த, தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதித்திருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

மேற்சொன்ன கால இடைவெளியில் பலமுறை ரஜினி – கமல் இணைந்து நடிப்பது பற்றிப் பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பேட்டிகளில் அது குறித்து இருவரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒருபோதும் நேரடியான பதில்கள் ரசிகர்களுக்குக் கிடைத்ததே இல்லை.
தொண்ணூறுகளில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தலையெடுத்தபிறகு, தமிழ் சினிமாவில் ‘பிரமாண்டம்’ என்ற வார்த்தைக்கு வேறொரு அர்த்தம் உண்டானது. விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் எனப் பல நட்சத்திரங்கள் தங்களுக்கான வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவேளை அந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைப்பு சாத்தியப்பட்டிருந்தால், திரையில் பிரமாண்டத்திற்கான அர்த்தமே வேறாக மாறியிருக்கும்.
தத்தமது பாதையில் இருவரும் சிகரத்தைத் தொட்ட 2000களில் கூட அதனை முயற்சித்திருக்க முடியும். அந்த நேரத்தில் படையப்பா, பாபா, சந்திரமுகி என்று ரஜினி வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியிருந்தார்.
தெனாலி, அன்பே சிவம், ஆளவந்தான், விருமாண்டி என்று தன் பங்குக்கு இன்னொரு திசையில் சென்றார் கமல்ஹாசன்.
அவர்கள் இருவருக்கும் எப்படி கதைகளை யோசிப்பது என்ற தவிப்புக்கு இயக்குனர்கள் ஆளான காலகட்டம் அது.
அப்போது, அந்த இடைவெளியை விஜய்யும் அஜித்தும் நிரப்பினார்கள். பிற்பாடு விக்ரம், சூர்யா வந்து சேர்ந்தார்கள். அதற்கடுத்த பத்தாண்டுகளில் அடுத்த தலைமுறையும் வந்துவிட்டது.
கமல், லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் ‘விக்ரம்’ உருவாவதற்கு முன்னர், ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக இருந்தது ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயம். ஆனால், அதனை லோகேஷ் இயக்குவதாகவும் இருந்தார்.
அது ஒரு வடிவத்தைப் பெறாமல் போக, இறுதியில் ‘விக்ரம்’ உருவானதும் அது ‘ப்ளாக்பஸ்டர்’ ஆனதும் தெரிந்ததே.
அப்போது நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பொன்றில், ‘கமலும் ரஜினியும் இணைகிற படத்தை இயக்க ஆவலாக இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், ரஜினியும் கமலும் ஒரு படத்தில் இணைவதாகச் செய்திகள் வெளியானது. அது ஒரு ‘சம்பிரதாயமான’ கேள்வி பதிலில் கிடைத்த தகவலாகவோ அல்லது ‘கூலி’ பட புரோமோஷன் உத்தியாகவோ இருக்கக்கூடும் என்ற எண்ணமே இருவரது ரசிகர்களிடத்திலும் இருந்தது.

ஆனால், சமீபத்தில் துபாயில் நடந்த ‘சைமா’வில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சதீஷ் கேட்ட கேள்வி மீண்டும் அந்த விஷயத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
இந்த முறை கமல்ஹாசன் ‘ஆம், இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறோம்’ என்பதை அவரது பாணியில் சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறார். ’தனித்தனியாக இருவருக்கும் பிஸ்கட் வேண்டுமென்று நினைத்த நாங்கள், இப்போது ஒரே பிஸ்கட்டை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்ளத் தயாராகிவிட்டோம்’ என்று கதை வடிவில் விளக்கம் சொல்லியிருக்கிறார்.
ஆனால், இந்த முயற்சி சாத்தியமா என்று கேட்டால் தலையைச் சொறிய வேண்டியிருக்கிறது. அந்த படத்திற்கான பூஜை பற்றிய அறிவிப்போ அல்லது இருவரும் சேர்ந்து தருகிற பேட்டியோ மட்டுமே அத்தகவலை உறுதிப்படுத்தக்கூடும். அதுவரை அது வெறும் தகவலாக மட்டுமே இருக்கும்.
சமீப ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் வெளியான ‘மல்டி ஹீரோ’ திரைப்படங்களில் ’போர்தொழில்’, ‘லப்பர் பந்து’ போன்றவையே ரசிகர்கள் கொண்டாடத்தக்கதாக இருந்திருக்கின்றன. ‘இறுகப்பற்று’ போன்ற சில திரைப்படங்களையும் அந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.
’விக்ரம்’, ‘மாஸ்டர்’, ‘ஜெயிலர்’ போன்றவற்றை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. காரணம், அவற்றில் ‘எதிரும்புதிருமான’ நட்சத்திரங்கள் நேருக்கு நேராகத் திரையில் தோன்றவில்லை. சிலவற்றில் முன்னணி நடிகர்கள் நாயகர்களாவும் வில்லன்களாகவும் நடித்திருக்கின்றனர்.
கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழ் திரையுலகில் இரு துருவங்களாகத் திகழ்கிற ரஜினியும் கமலும் திரையில் அப்படித் தோன்றுவதும் மோதுவதும் இனி சாத்தியமில்லை.
’அக்னி நட்சத்திரம்’ பாணியில் முக்கால்வாசி படம் வரை ‘எதிரும்புதிருமாக’த் திரையில் தோன்றுபவர்கள், கிளைமேக்ஸில் ஒன்றாகக் கைகோர்ப்பது மாதிரியான காட்சியக்கம் இருவரது ரசிகர்களையும் ‘கூஸ்பம்ஸ்’ ஆக்கக்கூடும்.
ஆனால், எழுபதுகளில் இருக்கிற இருவரையும் ஒன்றிணைக்கிற மாதிரியான கதைகளை வார்ப்பது அவ்வளவு எளிதல்ல.
சரி, ‘தில்லு முல்லு’ போன்று ஒருவர் நாயகனாக நடிக்கிற படத்தில் இன்னொருவர் சில நிமிடங்களுக்கு ‘கேமியோ’ ஆக வந்து போக முடியுமா? அதற்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அது இருவரில் ஒருவரது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கும்.

சரி, அப்படியானால் ரஜினி – கமல் இணைவு எப்போது சாத்தியம் ஆகும்?
இருவரும் தத்தமது நட்சத்திர அந்தஸ்தை மறந்துவிட்டு அல்லது துறந்துவிட்டு ‘அவள் அப்படித்தான்’, ’இளமை ஊஞ்சலாடுகிறது’ போன்று ஒரு கதையின் பாத்திரங்களாக மாறத் தயாராக இருக்க வேண்டும். ‘கமர்ஷியல் ஆக்ஷன்’ வகைமை படமாக இருந்தாலும் கூட, அந்த முன்னெடுப்பு நிகழ்ந்தால் மட்டுமே இருவரையும் திரையில் பார்த்து திருப்தியுறுகிற படைப்பு ரசிகர்களான நமக்குக் கிடைக்கக் கூடும்.
மேற்சொன்ன எல்லாவற்றையும் ஏற்கனவே இருவரும் பலமுறை மனதுக்குள் அசை போட்டு, சீர் தூக்கிப் பார்த்திருக்கவே வாய்ப்புகள் கணிசம்.
அதற்கேற்ப ரஜினி, கமல் மற்றும் இதர தரப்பில் இருந்து அது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரலாம்.
ஒருவேளை, ஒரு ‘புராஜக்ட்’ ஆக யோசித்து ‘இவரும் அவரும் சேர்ந்தால் இப்படியொரு மார்க்கெட் வேல்யூ கிடைக்கும்’ என்று ‘கணக்கு வழக்கு’ பார்க்கும் வகையில் மட்டும் அப்படம் அமையுமானால் என்ன செய்வது? ’சூரியன்’ படத்தில் ‘சத்திய சோதனை..’ என்று கவுண்டமணி சீரியசாக ‘காமெடி’ செய்வாரே, அது போலக் கடந்து போக வேண்டியதுதான்..!