ADVERTISEMENT

மதுரையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றிய கமல்ஹாசன்

Published On:

| By Mathi

Kamal DMK Alliance

மதுரையில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் ’மறவோம் காந்தி’ என்ற நிகழ்ச்சி நேற்று பிப்ரவரி 21-ந் தேதி நடைபெற்றது.

இம்மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பெ.சண்முகம், வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் எம்.பி. பேசியதாவது: மேடைச் சம்பிரதாயங்களை மறந்து உணர்ச்சியோடு பேசத் துவங்குகிறேன். அதனால் வழக்கமாக உங்களை நோக்கிச் சொல்லும் அந்த வார்த்தைகளை இவர்களை நோக்கிச் சொல்கிறேன். உயிரே, உறவே, தமிழே.

இப்பொழுது மேடைச் சம்பிரதாயம்… காரணம் இது மக்கள் நீதி மய்யம் கூட்டம் அல்ல, பண்பட்ட கமல் நடத்தும் கூட்டம். என்ன பண்பட்ட கமல்னா என்ன? கமல் தான பண்படுத்துறார்? நானே பண்பட்டுத் தாயா இந்த மேடைக்கு வந்தேன்.

ADVERTISEMENT

அதனால் சொல்லுகிறேன், இங்கு இந்த விழாவின் உணர்வைப் புரிந்து கொண்டு தன் கடமையையும் சுமையையும் சொல்லியிருந்தார் மாண்புமிகு முதல்வர் அவர்களை… ‘பரவாயில்லைங்க ஐயா நாங்க நடத்திக்கிறோம்’ அப்படின்னு சொல்லியிருப்பேன். ஆனால் நான் அன்பைச் சொன்னேன், அவரும் அதையேதான் சொல்லியிருக்கிறார். இது அரசியல் கூட்டமல்ல, அன்பர்கள் சேர்ந்து நடத்தும் கூட்டம்.

அதற்கு அவர் உடனே வருகிறேன் என்று சொல்லித் தன் நிகழ்ச்சிகளில் ஒரு சின்ன இடைவெளி விட்டு இங்கே வந்துவிட்டுச் சென்றிருக்கிறார். முதல் நன்றி அந்தத் தமிழனுக்கு நான் சொல்லியே ஆக வேண்டும்.

ADVERTISEMENT

இங்கே வந்திருப்பவர்கள் அனைவரையும் சுட்டிக்காட்டி இவர் யார் என்றால் ஒரு ஒரு மணி நேரம் பேசுவதற்கு இந்தக் கூட்டத்தில் ஆள் இருக்கிறார்கள். அத்தனை பேருமே தலைவர்கள். இதில் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இதில் 70 வயதில் நான்தான் மிக இளமையான கட்சி.

என்னை திருமா அவர்கள் பேசும்போது… மன்னிக்கணும் நேரம் காரணமாக நான் ‘அவர்களே’ அப்படின்னு ஒவ்வொருத்தரையும் குறிப்பிடல. நீங்க எல்லாருமே தலைவர்கள் என்பதை நான் ஏற்றுக்கொண்டவன். தமிழகத்தின் தலைவர்கள் நீங்களெல்லோரும்.

அவர்கள் எல்லோரும் இங்கே வந்து இந்த மேடையில் என் தலைவன் பெயரைச் சொன்னவண்ணம் வந்திருக்கிறீர்கள். அவருக்குக் கட்சி கிடையாது, இருக்கவும் கூடாது. அவரை எந்தக் கட்சியும் மொத்தமாகக் கையில் எடுத்துக்கொண்டு போகக் கூடாது, மறந்துவிடவும் கூடாது. அதனால்தான் ‘மறப்போம்’ என்று நான் சொன்னேன்.”

முரண்பட்டு வந்திருக்கிறார்கள். சோ, காந்தியுடன் முரண்படுவது மகா பாவம் இல்லை; அது வந்து ஒரு பெரிய வீரமும் இல்லை. முரண்படுவது கடமை. அது மூத்த தலைமுறை, அதனுடன் முரண்படும். அதற்கு புத்தி சொல்லத் தவறிவிட்டால் கோபித்துக் கொண்டு வெளியேறிவிடு. அப்படி வெளியேறித் திரும்பி என் தாத்தாவிடம் வந்த ‘ப்ராடிகல் சன்’ (Prodigal Son) நான்.

47-ல் இருந்திருந்தால் யார் கண்டா? அந்த கூட்டத்தோட நானும் பின்னாடி போயிருப்பேன்.. காந்தியச் சுடப்போறாங்க, நம்மளும் போலாம்ன்னு. அதுல என்னன்னா, இதை நானும் அவருடைய கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் பேசியிருக்கிறோம். அந்த காலத்துல நம்ம இருந்திருந்தோம்னா இந்த இழுப்புகளுக்கு ஆளாகி நம்மளும் அங்க போயிருப்போம்ல அப்படின்னு சொன்னார். ‘கரெக்ட், நீங்க சொல்றது’ன்னுட்டு ஒரு புத்தகம் எழுதினார். அதில் நான்தான் முன்னுரை எழுதும் வாய்ப்பைப் பெற்றேன். ‘ஹேராம்’ படத்தைப் பார்த்துட்டு எழுதின புத்தகம். ‘Come, Let’s Kill Gandhi’ என்பதுதான் அந்தப் புத்தகத்தின் பெயர். எழுதியவர் காந்தியின் கொள்ளுப்பேரன். அது வந்து ஒரு வஞ்சப்புகழ்ச்சிதான் அது. அது பல பேருக்கு புரியல.

நான் இங்கு இந்த கூட்டத்தைத் திரட்டியதற்கான காரணம்—முக்கியமாக இந்தக் கூட்டத்தைத் திரட்டுவது… சினிமாவில் டான்ஸ் ஆடினாலே திரட்டிடலாம்ங்க. இந்தக் கூட்டத்தைத் திரட்டுவது கஷ்டம். ஏன்னா, இவங்க காந்தியுடன் முரண்பட்டவர்கள். இவர்களை எப்படி ஒரு மேடையில் அமர வைப்பது? அதுதான் ஒன்பதாவது ஆண்டில் நான் செய்திருக்கும் சிறிய சாதனை.

‘எலக்டோரல் பாலிடிக்ஸ்’ (Electoral Politics) என்பது ஒன்று. அது ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வந்து கொண்டே இருக்கும். அதற்காக மட்டுமே வந்தவர்கள் அல்ல இவர்கள். 25 வருஷமா எலக்டோரல் பாலிடிக்ஸ்க்கு மட்டும் இருந்திருந்தால் திருமாவளவன் செய்திருக்க வேண்டிய சமரசங்கள் எத்தனை இருந்திருக்கும் யோசித்துப் பாருங்கள். எலக்ஷன் மட்டுமே இருந்திருந்தால் கம்யூனிஸ்ட்கள் என்னென்ன காம்ப்ரமைஸ் பண்ண வேண்டியிருந்திருக்கும் ஞாபகப்படுத்துங்கள். முஸ்லிம்களும் தான்.

ராம் மனோகர் லோகியா ‘காந்தியன் மார்க்சிசம்’ என்று எழுத வேண்டிய தேவை ஏன் வருகிறது? அனைவருக்குமானவர் என்பதை வாழ்வில் தன்னுடைய செய்தியாகக் கொடுத்துச் சென்றவர். அந்தச் செய்தியை நாம் கொடுக்க வேண்டும், இங்கே இருக்கும் எஞ்சிய இளைஞர்களுக்கு.

காரணம், நான் அவரை ஒருபோதும் ‘மகாத்மா’ என்று கூப்பிட மாட்டேன். காரணம், பூஜைக்குரியவராக ஆக்கிவிட்டால் அந்தக் கோயிலை மூடுவதற்கு கூட வழி உண்டு. ‘நீங்கள் வரக்கூடாது அங்கே, அது எங்கள் கோயில்’ என்று உரிமை கொண்டாடுவதற்கு கூட வழி உண்டு. அவர் எங்களில் ஒருவர். என் தாத்தா, இவர்கள் தாத்தா, எங்கள் குடும்பத்திற்கு மூத்தவர் அவர். நாங்கள் சாடுவோம், போற்றுவோம், வணங்குவோம். அது இங்கு நிகழும் சூழல்கள் எங்களை எப்படித் தாக்குகிறதோ, அதற்கு ஏற்ப வீட்டில் வந்து புலம்புவோம். அந்த வீட்டில் காந்தி தாத்தா இருந்திருப்பார்… இருப்பார், என்றும் இருப்பார் என்று நான் நம்புகிறேன்.

‘காந்தி ஒரு மனிதர்’ என்னும் காலகட்டம் கடந்துவிட்டது. Gandhi is an idea. An idea we can all use, we can all share. இதை ஏன் திடீர்னு ஆங்கிலத்துல போறார்ன்னா, எங்கேயாவது ஒரு துளியாவது சிதறி அவங்க சித்தத்தில் தங்கிவிடாதா என்ற நம்பிக்கையில். ஒவ்வொரு வாட்டியும் அந்த பெரிய வட்டத்தில போய்தான் பேசணுங்கிறது இல்லை; மக்கள் மத்தியில் அமர்ந்து பேசினாலும் அங்கே கேட்கும்.

என்னுடைய அப்பா பரமக்குடியில் இருந்து நான் புறப்பட்டு சினிமாவுக்கு வந்தபோது, ‘என்றைக்காவது நீ அரசியலில் வரவேண்டும்’ என்று சொன்னபொழுது, என்னுடைய சகோதரர்கள் எல்லாம் ‘அவனையாவது விட்டு வையுங்களேன், உங்கள மாதிரி அவனும் பாழாப்போகணுமா’ என்று சொன்னார்கள். அவர் பாழாகவில்லை; நாமாகியிருக்கிறோம். அவரும் சாகவில்லை; நாமாகியிருக்கிறோம்.

இப்போ கடைசியா கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் பேசியிருக்காரே, அது என்ன… கடைசியில கட் பண்ணிட்டாங்க, ஏன்னா அவர் கண்கலங்கினதக் காட்ட வேண்டாம்ன்னு. அந்த ‘Three Bullets’ நிறுத்த வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது. அது எப்படிங்க காந்தியார் காலம் எல்லாம் பொருந்தும், இப்போ ஆயுதம் இல்லாம எப்படிங்க ‘மூணு புல்லட்’ங்கிறீங்க அப்படின்னா… ரெண்டு புல்லட்டை தமிழ்நாடு தயார் பண்ணிடுச்சு: Health and Education.

“If you don’t answer these bullets, you will fall. It’s not a promise, it’s a belief and analysis of how this country is going to go. இது அப்படித்தான் நகரும் இந்த தேசம். இது மொத்த தேசத்திற்கும்.

உலகத்துல 1.4 பில்லியன் பீப்பிள் முட்டாள்களாக இருக்க முடியுமா? சாத்தியமா? யோசித்துப் பாருங்கள். இல்லை என்கிறேன் நான். இருக்கு என்கிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் அகலும் இல்லை என்றால் அகற்ற வேண்டும். இது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

இந்த காதி துணி பின்னாடி சிவப்பு கலர்ல இருக்கு, இங்க கருப்பு கலராக மாறியிருக்கு. நான் நடத்துற கம்பெனி பேரு கமல் ஹாசன் ஹவுஸ் ஆஃப் கதர் (Kamal Haasan’s House of Khaddar), அதுல தயார் பண்ணது இந்த துணி. காந்தியார் கடைசியாக இங்கு வந்தபோது, இந்த கதர் ஆடை உற்பத்தியை அதிகரிப்பதற்காகத்தான் மதுரை வந்தார். அந்த வேலை துவங்கிவிட்டது ஐயா என்பதைக்கூடச் சொல்லும் விழாவாக இதை வைத்துக்கொள்ளலாம்.

இது உணர்வுப்பூர்வமான விழா, அரசியல் விழா அல்ல. அதனால்தான் வைகோ அவர்கள் கண்கலங்கி என் கையை குலுக்கினார். எல்லோருக்குள்ளும் அந்த உணர்வு இருக்கிறது. இந்த மனிதர்கள் என் உறவன்றி வேறென்ன? அதனால்தான் சொல்லுகிறேன், ‘மையம்’ யாரையும் எதிர்க்கும் தேவைப்படும்போது; ஆனால் யாருமே எங்களுக்கு எதிரியில்லை.

நாங்கள் எதிர்ப்பது தனி மனிதர்களை அல்ல, தனி மனிதர்களின் அவசரச் சட்டங்களையும், அவசரத் திட்டங்களையும், சுயநலத் திட்டங்களையும். இவைகளையெல்லாம் மாற்றுவதற்காக நாம் பட்டுவந்த பாடையெல்லாம் 15 வருடத்தில மாற்றிவிட முடியுமா? இல்ல 25 வருஷத்துல தான் மாற்றிவிட முடியுமா? ‘முடியாது’ என்கிறேன் நான்.

கோரஸ் பாட இந்தியா எங்கிலும் தலைவர்கள் இதேபோல் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் கட்சி மாறவேண்டிய அவசியம் இல்லை. இருக்குமிடத்திலேயே இருங்கள், உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள், ஆள் மாறிவிடுவீர்கள்; கட்சி காணாமல் போய்விடும்.

நான் கோபத்தில் பேசுவதாக நினைக்க வேண்டாம், யோசித்துத்தான் பேசுகிறேன். குறிப்பெடுக்க எனக்கு அம்பேத்கர் இருக்கிறார், பெரியார் இருக்கிறார், பழசு எதையாவது எடுத்து பெரிய இம்பீரியலிச பவருக்கு (imperialist power) எதிராக எப்படிப் பேசணும்னு பாடமெடுக்க காந்தியார் இருக்கிறார். இப்பொழுதும் வருகிறது வருகிறது, இம்பீரியல் பவர் இந்தியாவை நோக்கி.

சந்தேகமே வேண்டாம். இரண்டாவது இந்திய சுதந்திரப் போராட்டம் துவங்கிவிட்டது என்றே நீங்கள் கொள்ளவேண்டும். அதன் விழிப்புரல் (விளிக்குரல்) இங்கிருந்தன்றி வேறு எங்கிருந்து கேட்கும்? அதை நீங்கள் மதுரை என்று எடுத்துக்கொண்டாலும் சரி, மங்கம்மாள் அரண்மனை என்று எடுத்துக்கொண்டாலும் சரி, காந்தி மண்டபம் என்று எடுத்துக்கொண்டாலும் சரி. இது நம் குரல். இது இவ்வாறாகவே கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் என் கொடியையெல்லாம் கீழே வைத்துவிட்டு, என் அன்பை மாத்திரம் ஏந்தி வந்திருக்கிறேன் இந்த விழாவிற்கு.

இவ்வாறாகவேதான் இவர்களும் வந்திருக்கிறார்கள். இது கொஞ்சம் அவங்களுக்கு ‘என்னயா இது, இந்த நேரத்துல இப்படிலாம் போனா எப்படி இருக்கும்?’ அப்படின்னெல்லாம் யோசிக்கக்கூடிய ஒரு விழா. ஆனால் நான் எடுத்துச் சொன்னது முதல்வருக்கு (முதல்வர் அவர்களுக்கு) எப்படிப் புரிந்ததோ, அதேபோல் இந்தத் தலைவர்களுக்கும் அது புரிந்ததால்தான் இங்கே இருக்கிறார்கள். என் கட்சிக்காரர்கள் இதற்கு இதை இப்படி நடத்த வேண்டும், அப்படி நடத்த வேண்டும் என்று அவர்களெல்லாம் நடத்திவிட்டு பின்வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள்.

எழுந்து நில்லுங்கள். இவர்களும் தலைவர்கள்தான், நாளைய தலைவர்கள். இவர்களை அறிமுகப்படுத்த வேண்டியது இந்த மேடை. நான், எல்லோரும் பெருமை கொள்கிறோம். இந்திய நாட்டை சுமக்க எத்தனை தோள்கள் இருக்கிறது பாருங்கள். அதில் எனக்கு கடைநிலை ஊழியன் பதவி கிடைத்தாலும் மிக மிக மகிழ்வேன்.

என் வயது ஒன்பதுதான். என்னுடைய அதிப்பிரசங்கித்தனத்தை நீங்கள் மன்னிப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் மன்னிப்பார்களா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்பதுதான் முக்கியம். காரணம், இந்த மேடையில் இவ்வளவு முழங்கும் அருகதை எனக்கு இருக்கிறதா என்றால் நான் கொஞ்சம் சந்தேகப்படுவேன். அவர்கள் சந்தேகமின்றி ‘முன்நின்று சொல் தம்பி’ என்று சொன்னதுதான் எனக்குக் கிடைத்த பெருமை. மக்கள் நீதி மையத்திற்கும் கிடைத்த பெருமை.

வெறும் நற்பணி கூட்டமாக, வெறும் ரசிகர் கூட்டமாக இருந்த உங்களை 40 ஆண்டுகாலம் செதுக்கி மேடை ஏற்றியிருக்கிறேன் உங்களை.

இதுதான் மேடை என்று நினைக்காதீர்கள், அதுவும் மேடைதான். நான் சொன்ன சத்தியத்தை நிறைவேற்றிவிட்டேன். உங்களைப் பெரிய மனிதர்கள் அவையில் அமர வைப்பேன் என்று 40 வருடங்களுக்கு முன்னால் சொன்னேன். இதோ, நிகழ்ந்துவிட்டது. இனி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் நாம். நாம் என்றால் இவர்களும் சேருவார்கள். நாடு காத்திருக்கிறது நமக்காக. நாளை நமதே!

இங்கு நான் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் சொல்ல மறந்திருந்தால் ஞாபகப்படுத்துங்கள். ஒன்றும் இல்லையே? ஏன்னா, அவர் ஃபிளைட்டுக்குப் (Flight) போகணும். திரும்ப அவர்கள் பல்லைக் கடித்துக்கொண்டு மணியைப் பார்த்துக்கொண்டு எனக்காக இருக்கிறார். அன்பினால் மட்டுமே கட்டுப்படும் அந்த சிறுத்தை. அதைச் சங்கிலியால் எல்லாம் போட முடியாது. அவரை அமர்த்தி கையைப் பிடிச்சு உட்கார வெச்சிருக்கேன். அதனாலேயே உரை சுருங்கிவிட்டது. பரவாயில்லை, மீண்டும் வருவேன். இங்கே கலைஞர் ஒரு கையெழுத்துப் போட்டுட்டுப் போயிருக்கார். இந்த மண்டபத்தைப் பார்த்து ரசித்துவிட்டு மீண்டும் வருவேன் என்று அவரும் வந்திருக்கிறார், நானும் வருவேன். நாளை நமதே! ஜெய் ஹிந்த். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன் நடத்திய ‘மறவோம் காந்தி’ நிகழ்ச்சி வீடியோ:

🔴LIVE: மநீம சார்பில் 'மறவோம்' நிகழ்ச்சி நேரலை | MKStalin | Kamalhassan | MNM
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share