பழ.நெடுமாறன்… கலைஞரைப் போல ஸ்டாலின்.. சுப.வீயின்’ நெகிழ்ச்சி’ நினைவலைகள்

Published On:

| By Mathi

Suba Veerapandian Kalaingar Nedumaran

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று (மார்ச் 30) சந்தித்து திமுக கூட்டணிக்கான ஆதரவு கடிதத்தைக் கொடுத்தார்.

இந்த சந்திப்பின் போது திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பழ.நெடுமாறன் வந்த போது அறையை விட்டு வெளியே வந்து முதல்வர் ஸ்டாலின் அவரை கை பிடித்து அழைத்து அறைக்குள் அழைத்து சென்றார். இதேபோல 20 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரும் பழ. நெடுமாறனிடம் பேரன்பும் மரியாதையையும் காட்டிய நெகிழ்ச்சியான சம்பவங்களை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் வீடியோ பதிவு ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியிருப்பதாவது: நான் சற்றும் எதிர்பாராத, பழைய நினைவுகளையெல்லாம் கிளறக்கூடிய, நெஞ்சை நெகிழவைக்கிற ஒரு நிகழ்வு நடைபெற்றது. கழகத்தின் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்திப்பதற்காக நான் அறிவாலயம் சென்றிருந்தேன். அங்கே தலைவர் அறையிலே அமர்ந்திருக்கிறபோது, ‘ஐயா நெடுமாறன் வந்திருக்கிறார்’ என்று தலைமை நிலையச் செயலாளர் வந்து சொன்னார்.

ADVERTISEMENT

எனக்கு எதிர்பாராத மகிழ்ச்சி. ஆனால் அதைவிட எதிர்பாராத இன்னொரு செய்தி நடைபெற்றது.

‘அப்படியா?’ என்று கேட்ட முதலமைச்சர் அவர்கள், சட்டென்று எழுந்து அறைக்கு வெளியே போய் அவரை அழைத்து வருவதற்காக வெளியிலேயே போய்விட்டார்.

ADVERTISEMENT

அதை நான் எதிர்பார்க்கவில்லை. ஐயாவை அழைத்து வருகிறார்கள் என்கிற செய்தியைத்தான் சொன்னார்கள். அதற்குப் பிறகு நான் வெளியே வந்தபோது, முதலமைச்சரே ஐயாவை கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார். வந்து அங்கே அமரவைத்தார்.

ஐயா நெடுமாறன் அவர்கள் என்னைப் பார்த்ததும், ‘பாண்டியன் எப்படி இருக்கீங்க?’ என்று கேட்டார். அவரை விட்டு நான் வெளியில் வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இடையில் ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். நான் ஐயா நெடுமாறன் அவர்களை விட்டு வெளியே வந்துவிட்டாலும், ஒருநாளும் அவரைப் பற்றி குறைவாக நான் பேசியதில்லை. எப்போதும் என்னைப் பற்றி அன்போடுதான் அவரும் பேசியிருக்கிறார்.

இன்றைக்குப் பார்த்ததற்குப் பிறகு அந்த உருவம், அந்தத் தோற்றம், அந்த வயது எனக்குள் பழைய நினைவுகளையும் கிளறியது. அதே நேரத்தில் நெகிழ்வாகவும் அது அமைந்தது.

‘ஐயா, பிள்ளைகளெல்லாம் எப்படி இருக்காங்க?’ என்று என் பிள்ளைகளைப் பற்றி கேட்டார். அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. என் பிள்ளைகள் மூவரின் திருமணமும் நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில்தான் நடைபெற்றது. எனவே பிள்ளைகளைப் பற்றிக் கேட்டார்.

நான் பார்த்த அந்த நெடுமாறன் ஐயாவினுடைய உருவம் இல்லை. வயதுக்கேற்ப உடல் கொஞ்சம் குனிந்து, கையிலே தடி ஊன்றிக்கொண்டு அவர் வந்தார்.

2006-ஆவது ஆண்டு நான் ஐயாவை விட்டு வெளியே வந்தேன். இன்னொன்றைச் சொல்ல வேண்டுமென்றால், நான் திமுகழகத்திற்கு வாக்கு கேட்டு முதன்முதலாக மேடையில் பேசியது கூட, ஐயா நெடுமாறன் அவர்களோடு துணையாகப் போய் நான் பேசிய கூட்டங்கள்தான்.

அது 2003. 2003 டிசம்பரில்தான் நாங்கள் பொடாவிலிருந்து வெளியே வந்தோம். நான் தேர்தல் கூட்டங்களில் பொதுவாக பேசியது இல்லை. ஆனால் முதல் முறையாக 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பேசுகிற வாய்ப்பும் ஐயா பழ.நெடுமாறன் அவர்களால்தான் எனக்குக் கிடைத்தது.

பிறகு 2006 தேர்தலில், அன்றைக்கு நாங்கள் சார்ந்திருந்த தமிழர் தேசிய இயக்கம் நடுநிலையாக முடிவெடுப்பது என்கிறபோது, நான் திமுகழகத்தை ஆதரிக்க வேண்டும் என்று செயற்குழுவிலே சொன்னேன். அப்போதுதான் நான் தமிழர் தேசிய இயக்கத்தை விட்டும் வெளியே வந்தேன்.
பின்னர் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தேன். 20 ஆண்டுகளாக கோபாலபுரத்தின் முதல் நாள் அமர்ந்ததும், அன்றிலிருந்து இன்று வரை மாறவே இல்லை.

இன்றைக்கு மீண்டும் அறிவாலயத்தில் ஐயா நெடுமாறன் அவர்களைச் சந்தித்ததும், அவர் முதலமைச்சரைப் பார்த்து, ‘உங்களுக்கு ஆதரவு, திமுகவுக்கு ஆதரவு’ என்கிற கடிதத்தைக் கொடுப்பதற்காக வந்தேன் என்றார்.

முதலமைச்சர் கேட்டார், ‘அதற்காக இந்த வெயிலில் நீங்கள் வரவேண்டுமா? சொல்லியிருந்தால் நான் வந்து அந்தக் கடிதத்தை வாங்கிக் கொண்டிருக்க மாட்டேனா?’ என்று கேட்டார்.

‘இல்லை, நான் வந்து கொடுப்பதுதானே முறை’ என்று ஐயா சொன்னார்.

இரு பெரும் பண்பாளர்களின் குணங்களை அங்கே பார்க்க முடிந்தது. இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share