சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ஜாதி மற்றும் மத பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் புகார் அனுப்பினார்.
இதனையடுத்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன். இன்று ஜூலை 28-ந் தேதி வாஞ்சிநாதன் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

அதன்படி வழக்கறிஞர் வாஞ்சிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன்பு இன்று ஆஜரானார்.
அப்போது வாஞ்சிநாதன் அளித்த பேட்டியின் வீடியோவைக் காட்டி, அதன் தலைப்பை படிக்குமாறு கூறினார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன்.
அதை படிக்க தடுமாறிய வாஞ்சிநாதனை பார்த்து, “கண்ணு தெரியலையா? அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போகனுமா? என்று கேள்வி எழுப்பினார்.
பதிலுக்கு வாஞ்சிநாதன், “நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்கமளித்து அதனை தாக்கல் செய்துள்ளேன். எனக்கு அனுப்பிய நோட்டீஸில் ப்ரீ காக்நீஷன் என்றும், உத்தரவில் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் என் மீதான குற்றச்சாட்டு எந்த நிலையில் உள்ளது என புரியவில்லை.
நீங்கள் கேட்பது கேள்விக்கு தொடர்பானது இல்லை. அதனை எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை. வீடியோ பார்த்து என்னால் விளக்கம் அளிக்க முடியவில்லை.
உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நீதிபதி, “நான் விசாரிக்கவில்லை. நீங்களாக அப்படி நினைத்துக்கொள்கிறீர்கள். உங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் அளித்த புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் நீதிமன்றம் கூறுகிறது. அதுவும் அந்த வழக்கில் வந்ததால் தான் புகார் குறித்து உங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
நீங்கள் கடந்த நான்கு வருடமாக என்மீது குற்றஞ்சாட்டி வருகிறீர்கள். நான் இதுவரை உங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் என்னுடைய தீர்ப்பினை விமர்சிப்பதற்கு 100 சதவீதம் உரிமை உள்ளது. அதில் நான் உங்களுடன் நிற்கிறேன். ஆனால், ’மதப்பாகுப்பாட்டுடன்’ தீர்ப்பளிப்பதாக குற்றஞ்சாட்டுவது என்பது வித்தியாசமானது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்மீது ஊடகங்களில் வைத்த குற்றச்சாட்டுகள் சுமார் 50 பதிவுகள் உள்ளன. உங்களுடன் கூட நிற்கும் மற்ற நீதிபதிகளுக்கும் சொல்லுங்கள், நான் ஒன்று முட்டாள் அல்ல” என்றார்.
அதற்கு வாஞ்சிநாதன், “ நீங்கள் எப்போதும் உங்களுடைய நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பீர்கள். நீங்கள் எழுத்துப்பூர்வமாக என்னிடம் கேளுங்கள். அதற்கு நான் பதில் அளிக்கிறேன். அதுதான் சரியானது” என்றார்.
இதனையடுத்து வழக்கை மதியம் 2.50 மணிக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒத்திவைத்தார்.