கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் சேவை வரும் 7ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
குடியரசு துணைத் தலைவராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக கோவை வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்த ரயிலை சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய இடங்களில் நின்று செல்லும் வகையில் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று புதிய வந்தே பாரத் ரயில் இந்த 4 ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெங்களூரு-எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு-எர்ணாகுளம் வந்தே பாரத் ரயில் (எண் 26651) 5.20 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 8.15 மணிக்கு சேலம், 9 மணிக்கு ஈரோடு, 9.47 மணிக்கு திருப்பூர், 10.35 மணிக்கு கோவை, 11.30 மணிக்கு பாலக்காடு, 12.30 மணிக்கு திருச்சூர், 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
மறுமார்க்கமாக புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் பிற்பகல் 2.20 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் (எண் 26652) 3.20 மணிக்கு திருச்சூர், 4.35 மணிக்கு பாலக்காடு, 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூர், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலம், 10.25 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 11 மணிக்கு பெங்களூரு நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா, தமிழகம், கேரளா என 3 மாநிலங்களை இணைக்கும் இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் நின்று செல்லும் என்பது பொது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
