’ஆர் ஆர் ஆர்’, ‘தேவரா’ படங்களுக்குப் பிறகு ‘பான் இந்தியா’ படத்தைத் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தெலுங்கு நட்சத்திரமான ஜுனியர் என்.டி.ஆர். அதற்கேற்ப, ‘கேஜிஎஃப்’, ‘சலார்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கிற படம் உருவாவதாகச் சொல்லப்படுகிறது. ‘ட்ராகன்’ என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு நடந்தது. பிறகு ‘வார் 2’ பட புரோமோஷன்களில் ஈடுபட்ட ஜுனியர் என்.டி.ஆர், ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது கீழே விழுந்ததில் காயமடைந்தார். அதையடுத்து, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். இது அவரது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியது.
சிறு இடைவெளிக்குப் பிறகு, ‘காந்தாரா 2’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் ஜுனியர் என்.டி.ஆர். பங்கேற்றார்.

இந்த நிலையில், மீண்டும் ’ஜுனியர் என்.டி.ஆர். – பிரசாந்த் நீல்’ படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் நடைபெறவிருப்பதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் ரவிஷங்கர். காந்தாரா 2 நிகழ்ச்சியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் ருக்மிணி வசந்த், அனில் கபூர், டொவினோ தாமஸ் எனப் பல மொழிகளைச் சேர்ந்த நட்சத்திரக் கலைஞர்கள் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது. வித்தியாசமான ‘ஆக்ஷன் ட்ராமா’வாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.