ADVERTISEMENT

“அரசு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அது நடக்கும்”: திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் கடும் கண்டனம்!

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அருகே இருக்கும் தூணில் தீபம் ஏற்றலாம் என்று கடந்த டிசம்பர் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

ADVERTISEMENT

இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் முந்தைய உத்தரவை உறுதி செய்தது.

ADVERTISEMENT

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மாநில அரசு, காவல்துறை, மதுரை மாவட்ட ஆட்சியர், சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தரப்புகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

இந்த தீர்ப்பு வழங்கிய போது நீதிபதிகள், “ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கல் தூணில் விளக்கேற்ற அனுமதிப்பது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று அரசு வலிமையாக வாதங்களை முன்வைத்தது அபத்தமாக இருக்கிறது. நம்புவதற்கும் கடினமாக இருக்கிறது.

ADVERTISEMENT

மாநில அரசே ஆதரவு அளித்தால் மட்டுமே பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். எந்தவொரு மாநிலமும் தங்கள் அரசியல் காரணங்களுக்காக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நிலைக்கு செல்லக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

தீபம் ஏற்றினால் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்தியுள்ள அச்சம், அவர்களின் வசதிக்காகவும், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராக சந்தேகம் மற்றும் தொடர்ச்சியான அவநம்பிக்கைக்கு உள்ளாக்குவதற்காகவும் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பேய்” என்று கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும், இரு தரப்பினரும் அமைதியான சகவாழ்வையே வாழ விரும்புகிறோம். தயவுசெய்து உத்தரவைப் பின்பற்றுங்கள்… அரசியலமைப்பு, இயற்கை வளங்கள், அனைவருக்கும் பொதுவானது. மற்றவருக்கு இடையூறு விளைவிக்காமல் அனைவருக்கும் மத சுதந்திரம் இருத்தல் வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.

இன்றைய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share