எஸ்.பி. வேலுமணி வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்?: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி!

Published On:

| By Kavi

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று (நவம்பர் 10)  விசாரணைக்கு வந்த போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சரிமாரி கேள்வியை சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது. 

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில், சுமார் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள்  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. 

ADVERTISEMENT

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை  அமல்படுத்தவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கோரி அனுப்பப்பட்ட ஆவணங்கள் (சுமார் 12,000 பக்கங்கள்) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நவம்பர் 7ஆம் தேதி அனுப்பப்பட்டது. தற்போது  மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதைக் கேட்ட நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.

“வேலுமணி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர 2024 பிப்ரவரியில் அனுமதி பெற்றுள்ள நிலையில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க 19 மாதங்கள் காலதாமதம் எடுத்தது ஏன்?. ஆமை வேகத்தில் செயல்படுவது ஏன்?” என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

“அடுத்த தேர்தல் நெருங்கி வருவதால், ஊழல் வழக்குகளுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை முன்னுரிமை அளிக்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால், வழக்கு தனது வலுவை இழந்துவிடும்.  ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும் என்பது பொதுமக்கள் விருப்பமாக உள்ளது” என்றும் கருத்து தெரிவித்தார். 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கே.எஸ். கந்தசாமி மற்றும் கே. விஜயகார்த்திகேயன் ஆகியோருக்கு  எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க காலதாமதம் எடுத்துக் கொண்டது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share