ராமதாஸ், அன்புமணி இருவரும் நீதிமன்றத்தில் உள்ள தனது அறைக்கு வந்து ஆஜராகுமாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். பாமகவின் தலைமை அலுவலகம் அன்புமணி அலுவலகத்தின் முகவரியில் உள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
அவருக்கு போட்டியாக வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தரப்பில் வடிவேல் ராவணன் அறிவித்தார்.
இருவரும் பொதுக்குழு அறிவித்திருக்கும் நிலையில் பாமக நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த சூழலில் அன்புமணி பொதுக்குழு கூட்டுவதற்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ராமதாஸ் நியமித்த பாமக மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் தாக்கல் செய்த மனுவில், “அன்புமணி தன்னைத்தானே தலைவர் என்று சொல்லிக்கொண்டு செயல்படுகிறார். வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
அன்புமணி அறிவித்த பொதுக்குழு நாளை நடைபெறவிருக்கும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு, ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இன்று மாலை 5.30 மணிக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் நீதிமன்றத்தில் உள்ள தனது அறைக்கு வர வேண்டும். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடமும் தனித்தனியாக பேச போகிறேன். உடனடியாக ராமதாசை புறப்பட சொல்லுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்” என்று கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் வழக்கறிஞர் கோபு, “அன்புமணியையும் ராமதாசையும் தனியாக வந்து ஆஜராக நீதிபதி சொல்லி இருக்கிறார்” என்றார்.
அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு கூறுகையில், “இந்த வழக்கை ஐந்து நிமிடத்தில் என்னால் முடித்து விட முடியும். எனினும் இருவரின் நலன் கருதி இந்த வேண்டுகோளை வைக்கிறேன் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்” என்று தெரிவித்தார்.