அன்புமணி பணத்தை வைத்து கொண்டு கட்சியில் சிலரை விலைக்கு வாங்கி பொய் சொல்லி வருகிறார் என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்குக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில், தந்தையையே மகன் வேவு பார்த்தார் என அன்புமணி மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தநிலையில் இன்று (ஆகஸ்ட் 7) திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “அன்புமணி நிறைய பொய்களையும் கட்டுக்கதைகளையும் கட்சி தொண்டர்களிடம் பரப்பி வருகிறார்.
தைலாபுரத்தில் தன்னை சந்தித்தபோது கதவை மூடிக்கொண்டு பார்க்க மறுத்ததாக அன்புமணி கூறுகிறார். நான் ஏன் பேச மறுக்கபோகிறேன். 46 ஆண்டு காலம் கட்டி காப்பாற்றி வைத்த கட்சியை அன்புமணியிடம் ஏன் கொடுக்க வேண்டும்.
தனது அம்மாவை மட்டும் பார்த்துவிட்டு, நான் அன்புமணியை சந்திக்கவில்லை என பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
என்னை, அய்யா அய்யா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணி தான். கட்சி அங்கீகாரம் இல்லாமல் சின்னம் இல்லாமல் இருக்கிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நிறுவனர் என்ற முறையில் நான் தான் கட்சி வேட்பாளர், கூட்டணியை முடிவு செய்வேன் என்றேன். ஆனால் நான் தான் இதையெல்லாம் முடிவு செய்வேன் என்று அன்புமணி பிடிவாதம் பிடித்ததுதான் பிரச்சினையே.
கட்சியில் உள்ள பொறுப்பாளர்களை மாற்ற, புதியதாக நியமிக்க தனக்கு அதிகாரம் என அன்புமணி கூறுகிறார். நிறுவனர் என்ற முறையில் தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று பாமகவை அன்புமணியிடம் கொடுத்துவிட்டு தைலாபுரம் இல்லதில் கதவை சாத்திகொண்டு கொள்ளு பேரன்களுடன் விளையாடுவதை ஏற்க முடியாது. கடைசி மூச்சு வரை பாட்டாளி மக்களுக்காக உழைப்பேன் மக்கள் தன் மேல் உயிரை வைத்துள்ளார்கள்.
பணத்தை வைத்து தன் மீது உயிரை வைத்திருந்த சிலரை அன்புமணி பக்கம் இழுத்துக்கொண்டார். பாமகவினர் தன்னை நிறுவனராக மட்டும் பார்க்க மாட்டார்கள், சில பேர் குலதெய்வம் கடவுள் என்பார்கள். அப்படி கூறியவர்களை பணம் கொடுத்து அன்புமணி தன்பக்கம் இழுத்து கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர் தன்னால் தான் போட முடியும் என்று கூறி பை பையாக அன்புமணி பொய் கூறுகிறார்.
அன்புமணியை எம்.பி ஆக்கிய போதே தன்பக்கம் கட்சியை இழுக்க வேண்டுமென உள் அடி வேலைகளை பார்க்க துவங்கினார். பாமகவை ஆலமரமாக வியர்வை சிந்தி உருவாக்கினேன். ஆனால் அதிலுள்ள கிளையை வெட்டி கோடாரி செய்து ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்.
கிரேனில் ஆப்பிள் மாலை போடுவது, நூறு கார் போவது எல்லாம் கட்சி கொள்கைக்கு எதிரானது. வீடு வீடாக கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க முடியவில்லை என வருத்தம் உள்ளது.
அதை தான் அன்புமணியை செய்ய கோரினேன், அதனை செய்யவில்லை, பொது வெளியில் அன்புமணி தன்னை பற்றி விமர்ச்சிக்காமல் உள்ளது நாடகம்.
வீட்டிற்குள் பேச வேண்டியதை பொதுவெளியில் அய்யா பேசுவதாக அன்புமணி கூறுகிறார், கட்டுக்கடங்காத மனக்குமுறலை ஊடகம் முன்பு கூறுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறேன்.
எதிரிகள் கூட என் மீது கேவலமான விமர்சனங்களை வைத்ததில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் தன்னை கேவலமாக எழுதி வருகிறார்கள். அமைதியாக இருந்து கொண்டு இதனை அன்புமணி செய்து வருகிறார். கட்சி இரண்டாக இருப்பது போன்ற பிரமையை அவரே உருவாக்கியிருக்கிறார். கட்சி இரண்டாக இல்லை ஒன்றாகத்தான் இருக்கிறது.
தைலாபுரம் தோட்டத்தில்தான் கட்சி இருக்கிறது. 50 பேராக இருந்த எனது குடும்பம் 10 பேராக சுருங்கிவிட்டது.
பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணை மந்திரம் மாயம் போட்டு இனோவா கார் வாங்கி கொடுத்து அன்புமணி மாற்றியுள்ளார். நல்ல பேச்சாளர் நல்ல சிந்தனையாளர் வடிவேல் ராவணனுக்கு காரை கொடுத்து வளைத்து போட்டிருக்கிறார்.
கட்சியாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் தைலாபுரம் தோட்டம் தான் பாமக அலுவலகம். சட்டப்படி வெற்றி கிடைக்கும். பொய் பொய்யாக சொன்னதை கேட்டு அன்புமணியிடம் சென்ற மாவட்ட செயலாளர்கள் தன்னிடம் வர வேண்டும்.
தந்தையிடம் ஒட்டு கேட்பு கருவி வைத்தது எந்த விதத்தில் நியாயம். அன்புமணி மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியாது, கட்சியில் குழப்பத்திற்கு இடமில்லை. அன்புமணி நடத்துவது கட்சியே கிடையாது. பணத்தை வைத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள்” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்
