இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு (JOBS) கனவுடன் காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு ஒரு பொன்னான செய்தி! ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), ஜூனியர் இன்ஜினியர் (JE), டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டென்ட் (DMS) மற்றும் கெமிக்கல் & மெட்டலார்ஜிகல் அசிஸ்டென்ட் (CMA) ஆகிய பல்வேறு தொழில்நுட்பப் பதவிகளுக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கிவிட்ட நிலையில், நவம்பர் 30, 2025 அன்றுடன் விண்ணப்ப காலக்கெடு முடிவடையவுள்ளது.
மிஸ் பண்ணாதீங்க..
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: அக்டோபர் 31, 2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30, 2025 (இரவு 11:59 மணி வரை)
- கட்டணம் செலுத்த கடைசி நாள்: டிசம்பர் 2, 2025
- விண்ணப்பத் திருத்தம்: டிசம்பர் 3, 2025 முதல் டிசம்பர் 12, 2025 வரை
கல்வித் தகுதியும் வயது வரம்பும்
- ஜூனியர் இன்ஜினியர் & DMS: சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்லது B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். DMS பணிக்கு எந்தவொரு பொறியியல் பிரிவிலும் டிப்ளமோ போதும்.
- கெமிக்கல் & மெட்டலார்ஜிகல் அசிஸ்டென்ட் (CMA): இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 01.01.2026 அன்று 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் மற்றும் சலுகைகள்
தேர்ந்தெடுக்கப்படும் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் அதற்கு நிகரான பதவிகளுக்கு, 7வது ஊதியக் குழுவின்படி நிலை 6-ல் அடிப்படை சம்பளமாக மாதம் ₹35,400 வழங்கப்படும். அத்துடன் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, பயணப்படி போன்ற பல்வேறு படிகளும் சலுகைகளும் கிடைக்கும். பயிற்சிக்குப் பிறகு, மொத்த மாதச் சம்பளம் சுமார் ₹42,000 முதல் ₹52,000 வரை உயர வாய்ப்புள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவச் சலுகைகள், பயணச் சலுகைகள் எனப் பல கூடுதல் பலன்களும் உண்டு.
தேர்வு முறை எப்படி இருக்கும்?
- முதல் நிலை கணினி வழித் தேர்வு (CBT 1): 100 மதிப்பெண்களுக்கு, கணிதம், பொது அறிவு மற்றும் பகுத்தறிவு, பொது விழிப்புணர்வு, பொது அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும். தவறான பதில்களுக்கு 1/3 மதிப்பெண் குறைக்கப்படும் (நெகட்டிவ் மார்க்கிங்).
- இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு (CBT 2): முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த 150 மதிப்பெண் கொண்ட இரண்டாம் நிலைத் தேர்வை எழுத முடியும். பொது விழிப்புணர்வு, இயற்பியல் மற்றும் வேதியியல், கணினி பயன்பாடுகளின் அடிப்படைகள், சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு கட்டுப்பாடு, மற்றும் சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவின் தொழில்நுட்பத் திறன் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெறும். 120 நிமிடங்கள் வழங்கப்படும். இங்கும் 1/3 மதிப்பெண் நெகட்டிவ் மார்க்கிங் உண்டு.
- சான்றிதழ் சரிபார்ப்பு: இரண்டு CBT தேர்வுகளிலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
- மருத்துவ பரிசோதனை: இறுதியாக, ரயில்வே சேவைக்குத் தேவையான உடல் தகுதியை உறுதி செய்ய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
- பொதுப் பிரிவு, OBC மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர்: ₹500. இதில் ₹400 CBT-1 தேர்வில் கலந்துகொண்டால் திருப்பி அளிக்கப்படும்.
- SC, ST, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு (EBC): ₹250. இது CBT-1 தேர்வில் கலந்துகொண்டால் முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு முற்றிலும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.
