வேளாண் துறையில் காலநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது. வேளாண் துறையில் உற்பத்தித் திறன் அதிகரித்திருந்தாலும், அதன் வளர்ச்சி தேக்கநிலையை அடைந்துள்ளது என மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை இன்று மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தமிழகத்தில் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக மக்கள் தொகை பெருக்கம் குறைந்துள்ளது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதால் சந்தைகளிலும் பிற இடங்களிலும் வேலை செய்யும் ஆட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
வேளாண் துறை பங்களிப்பு
தமிழகத்தில் 25 சதவீதம் மக்களே விவசாயம் தொடர்பான பணிகளைச் செய்கின்றனர். 75 சதவீதம் மக்கள் வேளாண் துறையில் அல்லாத பணிகளைச் செய்து வருகின்றனர். வளர்ந்த நாடுகளில் 3 அல்லது 4 சதவீதம் பேர்தான் வேளாண் துறையில் இருப்பார்கள். தமிழகத்தில் ஒரு காலத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்த நிலையில், தற்போது 25% மக்களே வேளாண் தொழிலில் உள்ளனர். மேலும், பிற துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால் வேளாண் துறையின் பங்களிப்பு குறைந்து வருகிறது.
பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், அங்கு மக்கள் அதே துறையில் தொடர்ந்தாலும் அதன் பங்களிப்பு குறையும். இதனால் வறுமை ஏற்படும். ஆனால் தமிழகத்தில் நிறைய பேர் வேறு தொழிலுக்கு மாறுகின்றனர்.
பொருளாதார வளர்ச்சி
கடந்த நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.3% ஆக அதிகரித்துள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிக வளர்ச்சியைப் பெற்றுள்ளது. உலக நாடுகள் 3 சதவீதமும், இந்தியா 7 சதவீதமும் வளர்ச்சியடைந்த நிலையில், தமிழகம் 11.3% வளர்ந்துள்ளது. இதற்கு உற்பத்தி மற்றும் தொழில் துறைதான் முக்கிய காரணம். உற்பத்தித் துறை 14 சதவீதம் பங்களித்துள்ளது.
உலகம் முழுவதும் தோல் அல்லாத காலணிகளுக்கு தேவை உள்ளது. தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணித் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தமிழகத்தின் தொழில் துறை வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது ஒரு காரணம். குறிப்பாக வாகன உற்பத்தி, வாகன உதிரி பாக உற்பத்தி, தோல் டெக்ஸ்டைல்ஸ் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இவை கடந்த நான்கைந்து ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றுள்ளது.
முன்பு உதிரி பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து வரும்; அதனை ஒருங்கிணைப்பு பணிகளை மட்டுமே செய்து வந்தோம். தற்போது உதிரி பாகங்கள் இங்கேயே உற்பத்தி செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அதன் மதிப்புக் கூட்டு தன்மை அதிகரித்துள்ளது. உள்நாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
கப்பல் கட்டும் தளம்
இந்தியாவில் நீண்ட கடல் பகுதிகள் இருந்தாலும், கப்பல் கட்டும் தொழில் வளரவில்லை. தற்போது அதற்கான பெரு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகமும், குஜராத்தும் தேர்வு செய்யப்படுகின்றன. கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க தென் கொரிய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிக வேலைவாய்ப்பு உருவாகும். இதற்கு மத்திய அரசு ஊக்கம் அளித்துள்ளது.
சவால்
வேளாண் துறையில் காலநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது. வேளாண் துறையில் உற்பத்தித் திறன் அதிகரித்திருந்தாலும், அதன் வளர்ச்சி தேக்கநிலையை அடைந்துள்ளது. பிற மாநிலங்களைக் காட்டிலும் சமூகத் துறைக்கு தமிழகம் அதிக அளவு நிதி ஒதுக்கியுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி கை கொடுக்காத நிலையில், நிலக்கரி மின் உற்பத்தியை அதிக அளவில் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பகலில் சோலார் மூலம் உருவாகும் மின்சாரத்தை பேட்டரி மூலம் சேமித்து மாலையில் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
