மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் கூட முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அழுத்தத்திற்குப் பணிந்து போகிறார்கள்
அமனா பேகம் அன்சாரி
ஜாவேத் அக்தர். இந்தியாவில் அறிமுகம் தேவையில்லாத பெயர். இந்தி சினிமாவுக்கு அளித்த பங்களிப்புக்காகப் புகழப்பட்டவர். அஞ்சாத பார்வைகளுக்காகவும், வெளிப்படையான நாத்திகத்திற்காகவும் பாராட்டப்பட்டவர். இதனால் வலதுசாரிகளில் பல தரப்பினரின் எதிர்ப்பையும் அவர் சம்பாதித்துள்ளார்.
ஆனால், ஒரு இஸ்லாமிய அச்சுறுத்தல் அவரை ஒரு பொதுமேடையிலிருந்து வெளியேற்றியது. மேற்கு வங்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உருது அகாடமி, கொல்கத்தாவில் விழாவை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஜாவேத் அக்தர் பேச அழைக்கப்பட்டிருந்தார். ஜாவேத் அக்தரை அழைத்ததற்காக ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு வெளியிட்ட கடும் எதிர்ப்பு காரணமாக உருது அகாடமி கொல்கத்தா விழாவையே ரத்து செய்துவிட்டது. இது இந்தியாவில் பேச்சு சுதந்திரம் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.
ஜாவேத் அக்தர் இத்தகைய எதிர்ப்பைச் சந்திப்பது இது முதல் முறையல்ல. எக்ஸ் (X) தளத்தை ஒருமுறை எட்டிப் பார்த்தாலே, அவருக்கு எதிரான எண்ணற்ற வசவுகளையும் ட்ரோல்களையும் காணலாம்.
இஸ்லாமியர்களால் மௌனமாக்கப்பட்ட முதல் குரலும் அவருடையது அல்ல. சல்மான் ருஷ்டி மிகப் பிரபலமான உதாரணம். ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும்தான் இப்படி என்றில்லை. இன்றைய இந்தியாவில் யாரையும் மௌனமாக்கவோ அல்லது அச்சுறுத்தவோ அதிக நேரம் ஆகாது என்பதை நாம் நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

குணால் கம்ரா, சமேய் ரெய்னா போன்ற நகைச்சுவை நடிகர்கள் முதல் ரன்வீர் அல்லாபாடியா போன்ற ஒலி ஊடகவியலாளர்கள் வரை (podcasters) பலரின் குரல்கள் குறி வைக்கப்படுகின்றன, அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இதன் வழிமுறை எப்போதும் ஒன்றுதான்: யாருக்கோ, எவருக்கோ மனதைப் புண்படுத்தும் பேச்சு, கோபத்திற்கான காரணமாகிறது. அந்தக் கோபம், பேசுபவரின் வாயை ஒட்டு மொத்தமாக அடைப்பதற்கான ஆயுதமாகிறது.
ஒருவரை மௌனமாக்குவது என்பது அதிகாரத்தின் வழிமுறை. யார் பேசலாம், யார் பேசக் கூடாது என்பதை அதிகாரமே தீர்மானிக்கிறது. பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்ற உண்மையை மறைக்கும் முகமூடி. ஜாவேத் அக்தர் ஒரு விழாவிலிருந்து நீக்கப்படும்போது, அல்லது நகைச்சுவை நடிகர்கள் மீது “உணர்வுகளைப் புண்படுத்துவதற்காக” வழக்கு பதிவு செய்யப்படும் போது, தாக்குதலுக்கு உள்ளாவது ஒரு குரல் மட்டுமல்ல. இது மற்ற அனைவருக்கும் ஒரு சமிக்ஞை: கவனமாகப் பேசுங்கள், எல்லைக்குள் இருங்கள், இல்லையெனில் அடுத்தது நீங்கள்தான்.
விவாதத்திற்கும் கருத்து வேறுபாட்டிற்கும் பெருமை கொண்டிருந்த ஒரு சமூகம், சுதந்திரமான சிந்தனையின் சாராம்சத்தை இழக்கத் தொடங்குகிறது.
இந்தச் சம்பவம் கொல்கத்தாவில் நடந்ததுதான் கூடுதலாக நம் கவனத்தை ஈர்க்கிறது. அதுவும் இஸ்லாமுடன் நேரடித் தொடர்பு இல்லாத மேற்கு வங்க உருது அகாடமி பின்வாங்கியது அதிர்ச்சி அளிக்கிறது.
மம்தாவுக்கு வந்த சோதனை

பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது சர்வாதிகார அரசாங்கத்தின் செயல் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கு, சம்பந்தப்பட்ட அரசை நடத்துவது, மதச்சார்பின்மை, பன்மைத்துவம் ஆகியவை இந்திய ஜனநாயகத்தின் முக்கியத் தூண்கள் என்று மீண்டும் மீண்டும் கூறிவரும் மம்தா பானர்ஜி. ஆனால் மதச்சார்பின்மை, பன்மைத்துவம் ஆகிய கொள்கைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் சோதனையை எதிர்கொண்டபோது, அவரது அரசு தடுமாறியது.
முற்போக்கு, மதச்சார்பின்மை ஆகியவற்றின் பொறுப்பைத் தாங்கிக்கொண்டிருப்பவர்களே, அதன் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்?
தன்னை “பாசிச” மோடி அரசுக்கு எதிரான போராளியாக நிலை நிறுத்தும் மம்தாவின் மாநிலம் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குகிறது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் அம்பேத்கர் மகாபத்ராவுக்கு இது நன்றாகவே தெரியும். 2012இல், அவர் மம்தா பானர்ஜியைப் பற்றிய ஒரு கேலிச் சித்திரத்தைப் பகிர்ந்ததற்காகக் கைது செய்யப்பட்டார். இதனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப் போர் நடந்தது. அதில் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
முற்போக்கு, மதச்சார்பின்மை ஆகிய கொள்கைகளுக்கு உண்மையாக உறுதியுடன் இருக்கும் எந்தவொரு அதிகாரமோ, அரசாங்கமோ நம்மிடம் இருக்கிறதா? இருப்பதாகத் தெரியவில்லை.
இதுவா முஸ்லிம் ஆதரவு?

மதச்சார்பற்றதும் முற்போக்கானதுமான அடையாளத்தைச் சுமக்கும் கட்சிகள் கூட, முஸ்லிம் சமூகத்திற்குள் இருக்கும் அடிப்படைவாதக் குழுக்களின் அழுத்தங்களுக்கு அடிபணிகின்றன.
சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி இதைக் கச்சிதமாகச் சித்தரிக்கிறார்: “இது ஆரம்பம் மட்டுமே. முஸ்லிம் வலதுசாரி இயக்கங்களால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு மதிப்பளிப்பதை நிறுத்துமாறு நான் சக சமூகச் செயல்பாட்டாளர்களிடமும் இளைஞர்களிடமும் மன்றாடி வருகிறேன். பெரும்பான்மை அரசியலை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற பெயரில் மூத்த சமூகச் செயல்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் தங்களை முட்டாளாக்கிக் கொள்கிறார்கள். முஸ்லிம் வலதுசாரி அமைப்புகளின் மேடைகளில் ஏற மறுத்ததால் நான் தில்லி சிவில் சமூகத்திற்குள் ஓரங்கட்டப்பட்டேன்” என்று அவர் கூறினார்.
அவரது வார்த்தைகள் ஆழமான, அசௌகரியமான உண்மையை வெளிப்படுத்துகின்றன: இந்தியாவில் மதச்சார்பின்மை, கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டம் சர்வாதிகார சக்திகளால் மட்டுமல்ல, அதை பாதுகாப்பதாகக் கூறிக் கொள்பவர்களாலேயும் தொடர்ந்து பலவீனப்படுத்தப்படுகிறது.
இத்தகைய சம்பவங்கள், அரசியல் கட்சிகள் கொள்கைகளைவிட வாக்கு வங்கிக்கு அதிக அக்கறை செலுத்துகின்றன என்ற கருத்திற்கு வலுக் கூட்டுகின்றன. மேலும், அவர்கள் மதச்சார்பின்மையைப் பற்றிப் பேசும்போது, அது சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களைச் சமமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கான செயல்பாடாக அமைவதில்லை. மாறாக, வாக்குகளைப் பெறுவதற்காக முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள கடும் போக்காளர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவே அமைகிறது.

அப்படியானால், இந்தக் கொள்கைகளுக்காக உண்மையாக நிற்பவர்கள் யார்? அனேகமாக யாருமில்லை. இங்கே ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. பேச்சு சுதந்திரம், மதச்சார்பின்மை, முற்போக்கு மதிப்பீடுகள் ஆகியவை தொடர்ந்து சமரசம் செய்யப்படுகின்றன.
ஜாவேத் அக்தர் கலந்துகொள்வதை ஒட்டி எழுந்த எதிர்ப்பினால் கொல்கத்தா உருது விழா ரத்து செய்யப்பட்டது விதிவிலக்கான தவறு அல்ல. இது ஏற்கெனவே உள்ள வெற்றிடத்தைத் தெளிவாகக் காட்டும் ஒரு அறிகுறி. தனது படைப்புகளாலும் குரலாலாலும் பழமைவாதத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பிய ஒரு மனிதர் மௌனமாக்கப்படுகிறார். மதச்சார்பின்மையையும் பன்மைத்துவத்தையும் பாதுகாக்கிறோம் என்று கூறும் நிறுவனங்களும் தலைவர்களும் இதில் தலையிடாமல் மௌனம் காக்கிறார்கள்.
அக்தரின் குரலை முடக்கிய இந்தச் செயல், பேச்சு சுதந்திரம் பேரத்துக்கு உட்பட்டது என்பதையும், மதச்சார்பின்மை நிபந்தனைக்குட்பட்டது என்பதையும், கொள்கைகள் அதிகாரத்தின் பலிபீடத்தில் தியாகம் செய்யப்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறது.
உரிமைகளையும் கொள்கைகளையும் பாதுகாக்கும் பொறுப்பை அரசியல், வாக்குறுதிகள் அல்லது வசதியான அடையாளங்களிடம் விட்டுவிட முடியாது என்பதை இந்தச் சம்பவம் நமக்கு நினைவூட்டட்டும். என்ன பேசலாம் அல்லது பேசக் கூடாது என்பதை ஒரு சிலரது பழமைவாதப் போக்கு தீர்மானிக்கும்போது சிவில் சமூகம் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது. அச்சுறுத்தலுக்கு எதிராக அமைதியாக இருப்பது அதற்கு உடந்தையாக இருப்பதற்குச் சமம். அடிப்படைவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் மேடைகளுக்கு மதிப்பளிப்பது இந்தப் போக்கை வலுப்படுத்துகிறது. நமக்கு உண்மையாகவே ஆரோக்கியமான ஜனநாயகம் தேவை என்றால் எல்லைகளை வகுப்பது, குரல் கொடுப்பது, கருத்துச் சுதந்திரத்திற்கான இடத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் – குடிமக்கள், சிந்தனையாளர்கள், மற்றும் ஆர்வலர்கள் – பொறுப்பு என்பதை உணர வேண்டும்.
அமனா பேகம் அன்சாரி அரசியல் விமர்சகர், எழுத்தாளர், தொலைக்காட்சி விவாதப் பேச்சாளர். அவர் ‘இந்தியா திஸ் வீக் பை அமனா அன்ட் காலித்’ (‘India This Week by Amana and Khalid’) என்ற வாராந்திர யூடியூப் நிகழ்ச்சியை நடத்துகிறார்.