தமிழகத்தில் பொங்கல் திருநாள் நெருங்கி விரும் நிலையில் நிலக்கோட்டை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 10000க்கு விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத் தலைநகர் சென்னையில் இன்று (ஜனவரி 10, 2026) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதைப் போலவே, மல்லிகைப்பூ விலை உயர்வும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக மல்லிகைப்பூ விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் பக்தர்கள் மாலை அணிவதாலும், அடுத்த சில நாட்களில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளதாலும் மல்லிகைப்பூவின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தேவைக்கும் வரத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மல்லிகைப்பூ விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நிலக்கோட்டை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் ஒரு கிலோ ரூ.9,000-க்கும், ஆண்டிபட்டி மலர் சந்தையில் ரூ.8,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மல்லிகைப்பூவுக்கு பிரசித்தி பெற்ற மதுரையில் மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.500-க்கு விற்ற மல்லிகைப்பூ தற்போது ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர் பூ மார்க்கெட் பகுதியில் ஒரு கிலோ மல்லிகைப்பூ கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.7,000-ஐத் தாண்டி பூக்களின் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் பரவலாக செவ்வந்தி ஒரு கிலோ ரூ.120, சம்பங்கி ஒரு கிலோ ரூ.60, பிச்சிப்பூ ரூ.1,000, முல்லைப்பூ ரூ.1,400, அரளி ரூ.160, ரோஜா ரூ.240, கனகாம்பரம் ரூ.800 வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
பூக்களின் விலை உயர்வு மற்றும் வரத்து குறைவு காரணமாக வெளிநாடுகளில் இருந்து கிடைத்த ஆர்டர்களுக்கு உரிய நேரத்தில் பூக்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
