ஜனநாயகன் வழக்கு : மீண்டும் தனி நீதிபதி விசாரணை – ஏன் இந்த முடிவு? தீர்ப்பு விவரம்!

Published On:

| By Kavi

ஜனநாயகன் வழக்கில்  தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவரும் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் சென்சார் பிரச்சினை காரணமாக படம் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

தனி நீதிபதி உத்தரவு

இந்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

ADVERTISEMENT

ஜனவரி 6ஆம் தேதி வழக்குத் தொடரப்பட்டு, ஜனவரி 7ஆம் தேதி விசாரணை நடந்து, ஜனவரி 9ஆம் தேதி நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்பு வழங்கினார். ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

அப்போது, “சென்சார் வாரியம் கூறிய திருத்தங்களைச் செய்த பிறகு சான்றிதழை வழங்க முடிவு செய்யப்பட்டும், அதற்குப் பிறகு படத்தை மறு ஆய்வு குழுவுக்கு  அனுப்ப முடிவு செய்தது சட்டத்திற்கு அப்பாற்பட்டது” என்று நீதிபதி பி.டி.ஆஷா தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

மேல்முறையீடு  

இந்த உத்தரவை எதிர்த்து ஜனவரி 9ஆம் தேதி சென்சார் வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஜனவரி 20ஆம் தேதி தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

அப்போது,  “தனி நீதிபதி முன்பாக விசாரணை அவசர அவசரமாக நடைபெற்றது. எங்கள் தரப்பு வாதங்களைச் சொல்ல போதுமான அவகாசம் கிடைக்கவில்லை’ என்று சென்சார் வாரியம் வாதிட்டது.

ஜனநாயகன் பட நிறுவனம்,  ‘படத்தை ஆய்வு செய்த குழுவின் உறுப்பினரே புகார் அளித்திருக்கிறார், விதிப்படி அவ்வாறு செய்ய முடியாது ‘ என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பிலும் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 27) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,

“* இந்த வழக்கில் ஒரு தரப்பிற்கு முறையாகப் பதில் சொல்ல வாய்ப்பு வழங்கப்படவில்லை. இயற்கை நீதி கொள்கை பின்பற்றப்படவில்லை.

*மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க போதுமான வாய்ப்பளித்து,  இந்த வழக்கை தனி நீதிபதி புதிதாக விசாரிக்க வேண்டும்.

*படத்திற்கு எதிரான புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இதனால் வாரியத் தலைவர் மறு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்.  எனவே தனிக்கை வாரியத்துக்கு வாதங்களை முன்வைக்க வாய்ப்பளித்திருக்க வேண்டும். 

*மனுதாரர் எதைக் கோருகிறாரோஅதைப்பற்றி மட்டுமே நீதிமன்றம் விவாதிக்க வேண்டும். தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை எதிர்த்து மனுதாரர் நேரடியாக எந்தக் கோரிக்கையையும் வைக்காதபோது, வழக்கின் தகுதியை தனி நீதிபதி ஆராய்ந்திருக்க வேண்டும்” என்று கூறினர்.

தொடர்ந்து,  தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து வழக்கை மீண்டும் தனி நீதிபதியே விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

அப்போது,  தயாரிப்பு நிறுவனம் தணிக்கை வாரியத் தலைவரின்  உத்தரவை எதிர்க்கவில்லை. எனவே, தங்கள் மனுவை திருத்தி “எந்த உத்தரவை நீங்கள் எதிர்க்கிறீர்களோ, அதை முறையாக உங்கள் மனுவில் குறிப்பிட்டுச் சவால் செய்யுங்கள்” என்றும் நீதிபதிகள் அறுவுறுத்தினர்.


 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share