பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய் நடிப்பில் ஜனநாயகன் , சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.
ஜனநாயகன் 9ஆம் தேதியும், பராசக்தி 10ஆம் தேதியும் என ஒருநாள் இடைவெளியில் படம் வெளியாகள்ளதால் இரு நடிகர்களின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் வெளியிடுவதால் ‘பராசக்தி’ மீது அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவதாகப் பரவிய தகவலுக்கும், ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு தாமதத்திற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று பரவிய தகவலுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பதிலளித்துள்ளார்.
தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், “ஜனநாயகன்’ படத்திற்கு முன்பதிவு மெதுவாக இருப்பதற்கும், திரையரங்குகள் ஒதுக்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணம் வசூல் பங்கீடு தான். விநியோகஸ்தர்கள் வசூலில் 75% முதல் 80% வரை கேட்கிறார்கள். நாங்கள் 70 சதவிகிதம் கொடுக்கிறோம் என்கிறோம். அவர்கள் முடியாது என்கிறார்கள்.
கேரளாவில் 60% பங்கீடுக்கு சம்மதிக்கும் நிலையில், தமிழகத்தில் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் 75% மற்றும் திருநெல்வேலியில் 80% வரை கேட்பது முறையற்றது
இந்தத் திரையரங்கப் பங்கீட்டுப் பிரச்சனை குறித்து தான் நடிகர் விஜய்யின் கவனத்திற்கே கொண்டு சென்றுள்ளேன்.
ஜனநாயகன் படம் தான் அதிக திரையரங்குகளில் ஓடும். 60 சதவிகிதம் விஜய் படத்துக்கும், 40 சதவிகிதம் சிவகார்த்திகேயன் படத்துக்கும் போகும். ஆனால் அவர்கள் கேட்கும் வசூல் பங்கீடுதான் இப்போது பிரச்சினை.
அரசியல் அழுத்தம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. மேலே இருப்பவர்களுக்கு சினிமாவை பற்றி பேசுவதுதான் வேலையா?
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஓரிரு நாட்களில் அது முடிந்துவிடும்” என்று கூறினார்.
