சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து எல்விஎம் 3- எம்5 ராக்கெட் மூலம் 4,410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைகோள் இன்று (நவம்பர் 2) விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் 4410 கிலோ எடை கொண்ட சிஎம்எஸ்-03 செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளனர்.
இது குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவு, அதிகபட்சம் 29,970 கி.மீ. கொண்ட புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதுவரை புவிவட்ட சுற்றுப் பாதையில் ஏவப்பட்டதில் இதுதான் அதிகபட்ச எடை கொண்ட தகவல் தொடா்பு செயற்கைகோள். இதில், விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய கடற்படை, ராணுவத்தின் பணிகளுக்காக இந்தச் செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளது. இது இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போா்க் கப்பல்கள்-விமானங்கள் இடையே பாதுகாப்பான தொலைத்தொடா்பு சேவையை இந்த செயற்கைக்கோள் மேம்படுத்தி வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2013-ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அதற்கு மாற்றாக சுமாா் ரூ.1,600 கோடியில் அதிநவீன சிஎம்எஸ் 03 செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
