’மகாராஜா’ தந்த பெருவெற்றிப் பிறகு ‘ஏஸ்’ சிறிதே சறுக்கினாலும், மீண்டும் விஜய் சேதுபதி கம்பீரமாகத் திரையுலகில் வெற்றி நடை போடுகிற அளவுக்கு அமைந்தது ‘தலைவன் தலைவி’. இயக்குனர் பாண்டிராஜ், நாயகி நித்யா மேனன் உட்படப் பலருக்கு அந்த வெற்றி பல திசைகளில் வாய்ப்பைத் திறந்துவிட்டிருப்பது நிஜம். போலவே, நாயகன் விஜய் சேதுபதியும் தனக்கான தேர்வுகளில் கறாராகவும் கண்டிப்பாகவும் இருக்க வேண்டிய கட்டாயத்தை அந்த வெற்றி ஏற்படுத்தியது.
அதனால், ‘கௌரவமாக’த் தலைகாட்டுவது என்ற பெயரில் சின்னச் சின்ன ‘கேமியோ’ பாத்திரங்கள் செய்வதில்லை என்ற முடிவுக்கு விஜய் சேதுபதி வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. கடந்த கால அனுபவங்கள் சில அதற்குக் காரணம் எனவும் கூறப்பட்டது.
அதற்கு நேரெதிராக, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கிற ‘கிஸ்’ படத்தில் விஜய் சேதுபதியும் இருக்கிறார் என்று தகவல் சமீபத்தில் வெளியானது.
இதனை இப்போது கவினும் உறுதிப்படுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்து ’எக்ஸ்’ தளத்தில் அவர் ஒரு பதிவினை இட்டிருக்கிறார். அதில், கிஸ் படத்தில் விஜய் சேதுபதியின் குரல் இடம்பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. அவர் கதை சொல்வது போன்று இப்படம் திரையில் விரிகிறதாம்.

வரும் 19ஆம் தேதியன்று ‘கிஸ்’ ரிலீஸ் ஆகிற நிலையில், இந்த அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இதுவே ‘பேண்டஸி ரொமான்ஸ் ட்ராமா’ ஆக உருவாகியிருக்கிற இப்படத்திற்கான வரவேற்பை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி, பிரபு, விடிவி கணேஷ், ஆர்ஜே விஜய், ராவ் ரமேஷ், தேவயானி உட்படப் பலர் இதில் நடித்திருக்கின்றனர். ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்திருக்கிறார்.