பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று விஜய் சொல்லும் போது, அவர் எப்படி எங்கள் பிடியில் இருப்பார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து, தங்களுக்கு கொள்கை எதிரி பாஜக , அரசியல் எதிரி திமுக என்று கூறி வருகிறார்.
இந்தநிலையில் கரூரில் அவரது பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 உயிரிழந்திருக்கும் நிலையில், திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை பாஜக எழுப்பி வருகிறது.
இந்தசூழலில் இன்று (அக்டோபர் 2) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம், விஜய்யை சங் பரிவார் இயக்கி வருவதாகவும், அவர் பாஜக பிடியில் இருப்பதாகவும் சொல்கிறார்களே என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “தவெக கூட்டத்தில் மின்சாரத்தை யார் கட் செய்தது? செருப்பை யார் தூக்கி வீசியது? போலீஸ் லத்தி சார்ஜ் நடத்தியது ஏன்?
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கேட்ட இடத்தில் மாவட்ட நிர்வாகம் ஏன் அனுமதி வழங்கவில்லை? கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக 30 ஆம்புலன்ஸ்கள் வருவதற்கு காரணம் என்ன?
இதையெல்லாம் அவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
தனிநபர் ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும்போது அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திப்பது தவறு.
பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என்று கூறி எங்களை விமர்சனம் செய்து விஜய் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.