பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் பூட்டி வைத்து கருணை கொலையா செய்கிறீர்கள்? என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தம்மிடம் கேட்டதாக பாமக எம்.எல்.ஏ. அருள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். PMK Anbumani Ramadoss
சேலத்தில் இன்று ஜூன் 29-ந் தேதி பாமக எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஊமை ஜனங்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் டாக்டர் ராமதாஸ். இதுவரை எம்.எல்.ஏ, எம்பி, மத்திய அமைச்சர் பதவிக்கும் ஆசைப்படாதவர்.
தான் உருவாக்கிய இயக்கத்தில் என்னை போன்ற சாமானியனை எல்லாம் எம்.எல்.ஏ.வாக்கியவர் ராமதாஸ்; மத்திய அமைச்சர்களாக, எம்பிக்களாக பலபேரை உருவாக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். அரசியலே தெரியாமல் ஆசிரியர் குடும்பத்தில் இருந்து வந்த நான் 38 ஆண்டுகளாக ராமதாஸை பின்பற்றி செயல்பட்டு வருகிறேன்.
நாங்கள் அனைவரும் வழக்குகளை வாங்கி இருக்கிறோம்.. சிறைக்குப் போயிருக்கிறோம்.. அனைத்தும் பாமகவுக்காக மட்டுமே. எங்கள் மீது கொள்ளை வழக்கு இருக்கிறதா? கொலை வழக்கு இருக்கிறதா? காவல்துறையில் விசாரித்து கொள்ளலாம். நாங்கள் யாரும் இலந்தை பழம் விற்பவர்களும் அல்ல.
சாலையில் இலந்தை பழம் விற்பவர்களுக்கும் குற்ற பின்னணி உள்ளவர்களுக்கும் ராமதாஸ், பதவி கொடுத்துள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டுகிறார். அப்படியானால் சாலையில் இலந்தை பழம் விற்பது குற்றமா? சாலை ஓர வியாபாரிகளை இப்படி கொச்சைப்படுத்தலாமா? அவனும் ஒரு பாட்டாளிதானே..
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொன்னவர் அன்புமணி. டாக்டர் ராமதாஸை அவமானப்படுத்துகிறேன் என சொல்லி, பாட்டாளி வர்க்கத்தை அவமதிக்கிறார் அன்புமணி.
டாக்டர் ராமதாஸை சுற்றி தீய சக்திகள் இருப்பதாக சொல்கிறார் அன்புமணி. அந்த அன்புமணியை வழிநடத்துகிற சக்திகள் யார்? என்பதை சொல்லவா?
டாக்டர் ராமதாஸை 2 ஆண்டுகளாக தைலாபுரம் தோட்டத்தை விட்டு வெளியே வரக் கூடாது என அழுத்தம் கொடுத்துள்ளார் அன்புமணி. இதனால் என்னிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார், ” உங்க அய்யாவை கருணை கொலை செய்றீங்களாடா பாவிகளா?” என கேட்டார். ராமதாஸுக்கு நெருக்கமான அந்த நண்பர், “தைலாபுரத்தில் அவரை பூட்டி வைத்து கருணை கொலை செய்கிறீர்களா?” என கேட்டார். அந்த பத்திரிகையாளர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.
டாக்டர் ராமதாஸ், 5 ஆண்டுகளாக அய்யாவாக இல்லை.. குழந்தையாக மாறிவிட்டார் என்கிறார் அன்புமணி. அந்த குழந்தைதான் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அன்புமணியை தலைவராக நியமித்தது.. 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தை எனில், அந்த குழந்தையால் அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டது எப்படி செல்லுபடியாகும்? இவ்வாறு அருள் எம்.எல்.ஏ. கூறினார்.