சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணின் தந்தை வனராஜ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 25) தள்ளுபடி செய்தது.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் – விஜயா ஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில், தனுஷின் சகோதரர் இந்திரசந்த் கடத்தப்பட்டார்.
இது தொடர்பாக அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றார்.
அதுபோன்று ஏடிஜிபி ஜெயராமனின் போலீஸ் வாகனமும் கடத்தல் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனால் ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளானார். பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறுவன் கடத்தல் வழக்கில் ஜாமின் கேட்டு, பெண்ணின் தந்தை வனராஜ், மணிகண்டன், கணேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இன்று (ஜூலை 25) நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது காவல்துறை சார்பில், ‘ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கியமானவர்கள் இன்னும் கைது செய்யப்படாததால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்’ என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி மூன்று பேருக்கும் ஜாமின் வழங்க மறுத்து அவர்களது மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் அவர், ‘ இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட போதும் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையை பார்க்கும் போது, விசாரணையில் போதுமான முன்னேற்றம் இல்லை. அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்’ என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கை பார்க்கும் போது நாடு போலீஸ் ராஜ்யத்திற்கு செல்கிறதா என்ற அச்சம் எழுகிறது என்று தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் சட்டமன்ற உறுப்பினரும் உள்ளனர். அதனால் காவல்துறை அறிக்கையில் கூறியபடி விசாரணையை முறையாக நடத்தி காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மீட்டெடுப்பீர்கள் என்று நம்புவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.