ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜூன் 18) தெரிவித்துள்ளது. supreme court questions adgp jayaram suspend
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயராம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயராம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜூன் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பிறகு நேற்று (ஜூன் 15) விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு தொடர்பில்லை. இருப்பினும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைப்பதால் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி உஜ்ஜல் புயான், “மனுதாரர் 28 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசு அவரை சஸ்பெண்ட் செய்திருக்கக்கூடாது. இது அவரது மன உறுதியை குலைக்கும் செயலாகும்.
சென்னை உயர்நீதிமன்றம் ஏடிஜிபியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபோன்ற உத்தரவுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக நான் நீதிபதியாக பணியாற்றுகிறேன். உயர் காவல் அதிகாரி ஒருவரை கைது செய்யும் அதிகாரம் எனக்கு இருப்பதாக தெரியவில்லை” என்றார்.
இதனையடுத்து தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கை நாளை (ஜூன் 19) ஒத்திவைத்தனர். supreme court questions adgp jayaram suspend
