ரிச்சர்ட் வில்சன்
தமிழ்நாட்டிலிருக்கும் கரூரில் செப்டம்பர் 27 அன்று, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவராக இருக்கும் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்தனர்.

சம்பவத்திற்குப் பிறகு, செப்டம்பர் 27 அன்று தவெக நிர்வாகிகளுக்கு எதிராக ஒரு முதல் தகவல் அறிக்கையை (FIR) கரூர் போலீஸ் பதிவு செய்தது. அதற்குப் பின், இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐக்கு மாற்றக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் இரண்டு பொதுநல வழக்குகள் பதியப் பட்டன. மேற்கு வங்க அரசிற்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவிற்கும் (Committee for Protection of Democratic Rights) இடையே நடந்த வழக்கில் (State of West Bengal v. Committee for Protection of Democratic Rights) உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்புச்சட்ட அமர்வு 2010இல் வழங்கிய தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு, உயர் நீதிமன்றத்தின் இரட்டை நடுவர் அமர்வு அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தது.
சிபிஐ விசாரணையை வழக்கமான ஒன்றாக உத்தரவிட முடியாது என்றும், ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போலீஸ் விசாரணையைச் சந்தேகிக்கத் தேவையான ஆதாரம் இல்லை என்றும் மதுரை அமர்வு கூறியது. அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் தெருக்களில் பிரச்சாரக் காட்சிகள் நடத்துவது குறித்து வழிகாட்டு நெறிகளை உருவாக்குமாறு உத்தரவிடக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வின் முன் இன்னொரு ரிட் மனு பதியப்பட்டது. அக்டோபர் 3 அன்று, கரூர் சம்பவத்தை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை (Special Investigation Team) நீதிபதி அமைத்தார்.
இந்த மூன்று உத்தரவுளுக்கும் எதிராக சில சிறப்பு அனுமதி மனுக்கள் (Special Leave Petitions) உச்ச நீதிமன்றத்தில் பதியப்பட்டன. நெரிசலில் பலியான குடும்ப உறுப்பினர்கள் சிலர் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி மேலும் இரண்டு ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அக்டோபர் 13 அன்று விசாரணையை எஸ்.ஐ.டியிலிருந்து சிபிஐக்கு மாற்றி ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்; சிபிஐ விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியின் தலைமையிலான ஒரு குழு கண்காணிக்கும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது.
வழக்கமான ஒன்றாகவோ அல்லது தன் விருப்புரிமை சார்ந்தோ ஒரு நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதில் _ அதுவும் ஒரு இடைக்காலத் தீர்ப்பின் மூலம் உத்தரவிடுவதில் _ உச்ச நீதிமன்றம் காட்டிய ஆர்வமும் வேகமும்தான் வியப்பளிக்கிறது. விசாரணைகளை ஒரு மாநிலத்திடமிருந்து பறித்தெடுத்து ஒரு ஒன்றிய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அதிகாரத்தின் தீவிரத் தன்மை குறித்த உணர்வே கிஞ்சிற்றும் இல்லை என்று தோன்றுகிறது.
கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கையில், 1935ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டத்திலிருந்த அட்டவணை 7 சட்டமியற்றும் அதிகாரத்தை மத்திய அரசுக்கும் மாகாண சட்டமன்றங்களுக்கும் பகிர்ந்தளித்திருந்தது; இரு அரசுகளின் அதிகாரங்களையும் தனித் தனி பட்டியல்களாக இட்டிருந்தது. மத்திய அரசின் அதிகாரங்கள் குறித்த பட்டியல் எண் 1இலிருக்கும் 39வது பொருளின் படி, ‘பிரிட்டிஷ் இந்தியாவின்’ எந்தவொரு பகுதியைச் சேர்ந்த போலீஸின் அதிகாரங்களையும் வேறு எந்தவொரு மாகாணத்திற்கும் அந்த மாகாண கவர்னரின் ஒப்புதலுடன் மட்டுமே நீட்டிக்க முடியும்.

இரண்டாம் உலகப் போரின் காரணமாக அவசரநிலை (emergency) ஆட்சி அறிவிக்கப்பட்ட சூழலில், இராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வினியோகிக்கும் அரசுத் துறையில் நடக்கும் கையூட்டு பெறுதல் போன்ற ஊழல்களை விசாரிக்கத்தான் சிபிஐ 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அவசரநிலைக் காலத்தில், 1935ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்ட அட்டவணை 9இன் 72ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கவர்னர்-ஜெனரல் சிறப்பு போலீஸ் நிறுவன (போர்த் துறை) அவசரச் சட்டத்தை (Special Police Establishment -War Department Ordinanace) 1943ஆம் ஆண்டு பிறப்பித்தார்; அமைதியைப் பேணுவதும் நல்ல ஆட்சிமுறையை உறுதி செய்வதும்தான் இந்தச் சட்டத்தின் நோக்கம். இந்த அவசரச் சட்டத்தின் பிரிவு 2(4)இன் கீழ, சிறப்பு போலீஸ் நிறுவனம் இந்தியா முழுவதிலும் தன் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.
போர் முடிந்த பிறகு, செப்டம்பர் 25, 1946 அன்று, மத்திய அரசு தொடர்பான விவகாரங்களைக் குறித்து மட்டும் விசாரணை செய்வதற்காக டெல்லி மாகாணத்தின் தலைமை ஆணையரின் தலைமையில் செயல்படும் ஒரு ‘சிறப்பு போலீஸ் படையை’ உருவாக்கும் மற்றொரு அவசரச் சட்டத்தை கவர்னர்-ஜெனரல் பிறப்பித்தார். கவர்னரின் ஒப்புதலுடன் மட்டுமே இந்த போலீஸ் படை ஒரு மாகாணத்திற்குள் நுழைய முடியும். பிறகு நிறைவேற்றப்பட்ட டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்புச் சட்டமும் (Delhi Special Police Establishment Act) ஒரு மாகாண கவர்னரின் ஒப்புதலின்றி போலீஸ் அங்கு செயல்பட முடியாதென்கிற கட்டுப்பாட்டை விதித்திருந்தது. [இந்த சிறப்புச் சட்டத்தின் கீழ் 1963ஆம் ஆண்டு சிபிஐ உருவாக்கப்பட்டது.]
அரசியலமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தவுடன் ஒன்றிய அரசு ஒரு சட்ட மற்ற உத்தரவின் மூலம் சிறப்பு போலீஸ் சட்டத்தில் (1946) தேவையான மாற்றங்களைச் செய்து நிறைவேற்றியது. சிபிஐ ஒரு மாநிலத்திற்குள் தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஒப்புதல் வேண்டுமெனெ அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டணையில் காணப்படும் மாநில அதிகாரங்களின் பட்டியலில் (பட்டியல் 2) இருக்கும் பொருள் 1 மற்றும் 2 கூறுகின்றன. சிறப்புப் போலீஸ் சட்டத்தின் பிரிவு 6ம் மாநில அரசின் ஒப்புதல் தேவை என்கிறது. எனவே, சிபிஐ இந்த மாநில அதிகாரத்தை மீறி செயல்பட முடியாது. சிபிஐ விசாரணைக்கு ஒரு ‘பொதுவான ஒப்புதல்’ கொடுத்திருந்த தமிழ்நாடு அரசு, அரசியல் நோக்கங்களுக்காக சிபிஐ நிறுவனத்தை ஒன்றிய அரசு ஆயுதமாகப் பயன்படுத்துவதை உணர்ந்து தன் ஒப்புதலை 2023ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது.
ஆயினும், மேற்கு வங்கம் தொடர்பான வழக்கில் (2010) சிறப்பு போலீஸ் சட்டத்தின் 6ஆவது பிரிவிற்கு ஒரு விலக்கு அளித்தது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றங்களோ ஒரு விசாரணையை சிபிஐக்கு மாற்றினால் மாநில அரசின் ஒப்புதல் தேவையில்லை என்பதுதான் அந்த விலக்கு.
இந்த உத்தரவு ஒன்றிய-மாநில உரிமைகளில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியது; ஏனெனில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கூட மத்திய அரசின் போலீஸ் படை கவர்னரின் ஒப்புதலின்றி மாகாணங்களுக்குள் நுழைய முடியாது. இப்போது, ஒரு நீதிபதி உருவாக்கிய சட்டத்தின் மூலம், ஒரு மத்திய போலீஸ் நிறுவனம் குற்றவியல் விசாரணையை மாநிலங்களுக்குள் நடத்தும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறது. அதிகாரங்களை ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கும் அரசியலைமைப்புச் சட்ட விதிக்கு முரணானது இந்தச் செயல்.
ஆயினும் இந்த உத்தரவின் செயல்பாட்டிற்கு பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்து தன் செயலுக்கு நியாயம் கற்பித்தது உச்ச நீதிமன்றம்:
- விசாரணைக்கு சிபிஐக்கு மாற்றும் அதிகாரம் சொற்பமாகவும் கவனமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும்;
- வழக்கில் தொடர்புடைய ஒரு தரப்பு மாநில போலீஸுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைத் தொடுத்திருக்கிறது என்கிற காரணத்திற்காக மட்டுமே விசாரணை மாற்றம் செய்யக் கூடாது.
- விசாரணைக்கு நம்பகத்தன்மை கொடுக்கவும், அதில் நம்பிக்கை உண்டாக்கவும் ஒரு தேவை எழும்போது
- நடந்த சம்பவத்திற்கு தேசிய, சர்வதேச விளைவுகள் இருக்கும் பட்சத்தில்.
- முழுமையான நீதி வழங்க வேண்டும், அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்கிற தேவை எழும்போது.
தற்போது, கரூர் வழக்கில் வழங்கியிருக்கும் இடைக்காலத் தீர்ப்பிற்கு மூன்று காரணங்களைக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அவையாவன:
- இந்த வழக்கிற்குப் பின் வெளிப்படையாகத் தெரியாத அரசியல் சாயங்கள் இருக்கின்றன.
- காவல்துறையின் உயர் அதிகாரிகள் ஊடகங்களுக்கு முன்னால் கூறிய கருத்துகள் விசாரணையின் மீது நியாயமான, விருப்புவெறுப்பு அற்ற சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடும்.
- பொதுமக்களிடையே விசாரணை குறித்த நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
மறைமுக அரசியல் சாயங்கள் இருக்கின்றன என்கிற காரணம் மேற்கு வங்கம் தொடர்பான வழக்கில் (2010) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அடிப்படையான கோட்பாட்டிற்கு எதிரானது.
ஒரு கூட்டாட்சி அமைப்பில் ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் வெவ்வேறு அரசியல் சேர்க்கைகள் அல்லது கூட்டணி அரசுகள் இருக்கும் என்பதை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியிலிருக்கும் கட்சிகள் வெவ்வேறாக இருக்கும் நிலையில் அரசியல் குற்றச்சாட்டுகளைக் கூறி சில மாநில அளவிலான விசாரணைகளை மத்திய போலீஸ் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி இயல்பாகவே நடக்கும். ஆதாரமில்லாத ஊழல் குற்றச்சாட்டுகளை போகிறபோக்கில் அரசியல் எதிரிகள் மீது சதாசர்வ காலமும் சுமத்துவது வழக்கம். ஒரு விசாரணையை சிபிஐக்கு மாற்ற மறைமுக அல்லது வெளிப்படையான காரணங்கள் மட்டுமே போதுமென்றால், ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சிக்கு பிராந்தியக் கட்சிகளை விட நியாமற்ற ஆதாயம் அதிகமாக இருக்கும்.
ஒன்றிய அரசு மத்திய நிறுவனங்களை தவறான முறையில் அப்பட்டாகப் பயன்படுத்த வழிவகுக்கும். மத்தியில் அதிகாரத்திலிருக்கும் ஒரு கட்சி வழக்கு விசாரணைகளை மாநில அரசுகளிடமிருந்து தன் நிறுவனங்களுக்கு மாற்றும் அரசியல் விளையாட்டிற்காகத் தன்னைப் பயன்படுத்தக் கூடாது என்பதில் நீதிமன்றம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கரூர் வழக்கில் தன் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் இரண்டாவது, மூன்றாவது காரணங்களும் விசாரணை மாற்றத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் அளவுகோல்களின் மிகவும் கீழான இடத்தில் இருக்கின்றன.
மாநில அரசின் உயரதிகாரிகள் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர் என்பது மட்டுமே ஒரு விசாரணையை பாதிக்கும் காரணமாக இருக்க முடியாது. இது வரை நடந்திருக்கும் மாநில போலீஸின் விசாரணையைச் சீர்தூக்கிப் பார்த்த பிறகுதான் உச்ச நீதிமன்றம் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்க முடியுமேயன்றி விசாரணையத்தின் ஆரம்பக் கட்டத்தில் அல்ல.
கோரப்பட்டிருக்கும் நிவாரணத்தை விசாரணையின் இடைக்காலத்தில் கொடுக்கக் கூடாது என்பது ஏற்கனெவே நிறுவப்பட்டுள்ள சட்டக் கோட்பாடாகும். மாநில போலீஸின் விசாரணை குறைபாடானது அல்லது தவறானது என்று கண்டுபிடிக்கப்பட்டதாக தன் இடைக்காலத் தீர்ப்பில் கூறாமல், விசாரணை அதிகாரியின் டயரிக் குறிப்புகளைக் கூடப் பார்க்காமல், ஊகங்கள் மற்றும் முன்முடிவுகளின் அடிப்படையில் கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருக்கக் கூடாது.

சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கும் குழு
உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க ஒரு ‘மேற்பார்வைக் குழுவிற்குத்’ தலைவராக ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியை ஏன் தேர்ந்தெடுத்தது என்பது இடைக்காலத் தீர்ப்பின் மற்றொரு விசித்திரமான அம்சம். சிபிஐ ஒரு சார்பற்ற நிறுவனம் என்பதுதான் விசாரணை மாற்றத்திற்குக் காரணமென்றால், ஒரு மேற்பார்வைக் குழுவை நியமிப்பது அதற்கு முரணான முடிவு. பாரதீய நியாய சம்ஹிதாவிலோ [முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்று அறியப்பட்டது] அல்லது 1946ஆம் ஆண்டின் சிறப்பு போலீஸ் நிறுவனச் சட்டத்திலோ மேற்பார்வை குழு அமைப்பதற்கான அடிப்படை இல்லை. எனவே, விசாரணைக்கு வழிகாட்ட ஒரு குழுவிற்கு அதிகாரமளிப்பது குற்றவியல் விசாரணை குறித்த சட்டங்களுக்கு நேரெதிரான செயல்; அதை காரணங்களைக் கொடுக்காமல் ஒரு வழக்கம் போலவோ மேம்போக்காகவோ செய்யக் கூடாது.
தமிழ்நாட்டில் பிறக்காத ஆனால் தமிழ்நாட்டில் போலீஸ் பணிக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகள் (Tamil Nadu cadre)
தமிழ்நாட்டில் பிறக்காத ஆனால் போலீஸ் பணிக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகள் இருவரை கண்காணிப்புக் குழு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமென உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த வழிகாட்டுதலுக்கான காரணங்களை அது கொடுக்கவில்லை. ஆட்சிப்பணி அதிகாரிகளை இப்படி எதிரெதிரான இரு வகையாகப் பிரிப்பதிற்குப் பின்னால் தமிழ்நாட்டில் பிறக்காத ஒரு ஆட்சிப் பணியாளர் அப்படிப் பிறந்த பணியாளரை விட நடுநிலையாகவும் பாரபட்சமின்றியும் நடப்பார் என்கிற பொருள் தொக்கி நிற்கிறது. இது தமிழ்நாட்டு காவல்துறைக்கும், இந்திய போலீஸ் பணியாளர்களுக்கும் (IPS), அரசியலைமைப்புச் சட்டத்தின் பிரிவு 312இன் கீழ் அகில இந்திய ஆட்சிப்பணியை உருவாக்குவது என்கிற சிந்தனைக்கும் நேர்ந்த அவமதிப்பாகும்.
இது முன்னெப்போதும் கண்டிராத, அபாயகரமான பிளவுவாதப் போக்கு.
இனம் அல்லது மொழியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15 தடை செய்திருக்கிறது. அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக நடப்பதாக உறுதிமொழி ஏற்றிருப்பதால் ஆட்சிப் பணியாளர்களை ஒரு மாநிலத்தில் பிறந்தவரென்றும் பிறக்காதவரென்றும் நீதிமன்றம் பார்க்கக் கூடாது. நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட அதிகாரியைத் தெரிவு செய்யலாம்; ஆனால் அதற்கு தகுதியும் திறமையும்தான் அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர, பிறப்பிடம் அல்ல. இப்படிப் பாரபட்சம் காட்டும் நீதிமன்ற உத்தரவுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை என்பது கண்கூடு.
உயர் நீதிமன்றத்திடம் ‘விளக்கம்’ கேட்பது அந்த நிறுவனத்தை பலவீனப் படுத்தும்
ஒரு உயர் நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டப்படியே சுயேச்சையான அமைப்பு, உச்ச நீதிமன்றத்திற்குக் கீழ்நிலையிலிருக்கும் ஒன்றல்ல என்பதை, அலஹாபாத் உயர் நீதிமன்ற வழக்கறினர் சங்கத்திற்கும் உத்தரப்பிரதேச அரசுக்கும் இடையிலான வழக்கில் (High Court Bar Association v. State of U.P. & Others) உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சட்ட அமர்வு வலியுறுத்தியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 136 வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் ஒரு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்யலாம்; ஆனால் தனக்கு மேற்பார்வை அதிகாரம் இருப்பது போல் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியிடமிருந்தோ அல்லது பதிவாளரிடமிருந்தோ விளக்கம் கேட்க முடியாது. உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக வரும் மேல்முறையீட்டு மனுக்களை, கேள்விக்குள்ளாகியிருக்கும் தீர்ப்பு, வாதங்கள், சமர்ப்பிக்கபட்ட ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சட்டம் எனும் உலைகளத்தில் வைத்து ஆய்வு செய்துதான் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க முடியும்; உயர் நீதிமன்றத்திடமிருந்து “விளக்கங்கள்” கேட்பது மூலமாக அல்ல. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு போன்றவை உயர் நீதிமன்றங்களின் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பலவீனப்படுத்தும்; அவை தவிர்க்கப்பட வேண்டும்.
உத்தரப் பிரதேச சட்ட மேலவை செயலகப் பணித் தேர்வு ஊழல் வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பு
நான் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதே, உத்தரப் பிரதேச சட்ட மேலவைக்கும் சுஷில் குமாருக்கும் இடையிலான வழக்கில் (Legislative Council UP, Lucknow & Others v. Sushil Kumar & Others) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டேன். உத்தரப் பிரதேச சட்ட மேலவை செயலகத்திற்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் கூறும் வழக்கு விசாரணையை லக்னோ உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியிருந்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதை உயர்நீதி மன்றம் வழக்கமாக்கக் கூடாது, மாற்றுவதற்கான அதிகாரத்தை சொற்பமாகவும், எச்சரிக்கை உணர்வுடன் அது பயன்படுத்த வேண்டும், தனக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் முதல் பார்வையில் சிபிஐ விசாரணை தேவையென்று காட்டும் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது என்று அது திருப்தி அடைந்தால் மட்டுமே அப்படிச் செய்ய வேண்டுமென்றது. மாநில போலீஸின் நேர்மையின் மீது சந்தேகமெழுப்பி அதன் புகழை ஒரு தரப்பு சிதைக்கும் போதோ அல்லது போலீஸ் மீது நம்பிக்கையில்லை என்று அத்தரப்பு ஒரு எண்ணத்தை மனதில் வைத்திருப்பதாலோ மட்டும் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
கரூர் வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்த அதே நீதிபதிதான் உத்தரப் பிரதேச வழக்கில் மேற்கூறிய பரிசோதனைகளைப் பரிந்துரைத்திருக்கிறார்; ஆனால் கரூர் வழக்கின் தீர்ப்பு இந்தப் பரிசோதனைகள் எதுவிலும் வெற்றி பெறாது என்பதால், அத்தீர்ப்பைக் குறித்து உத்தரப் பிரதேசத் தீர்ப்பை விட சிறந்த விமரிசனம் இருக்க முடியாது.
அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றங்கள் வழக்குகளை மாநில போலீஸிடமிருந்து சிபிஐக்கு மாற்றக் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால், அப்படிச் செய்யும்போது மேற்கு வங்கம் தொடர்பான வழக்கின் (2010) தீர்ப்பில் கூறப்பட்ட பரிசோதனைகளை நீதிமன்றங்கள் கறாராகப் பின்பற்ற வேண்டும்.
மாநில போலீஸ் விசாரணை தவறானது அல்லது நீதியைச் சிதைக்கும் வகையில் நடக்கிறது என்பதை நீதிமன்றங்கள் சோதிக்க வேண்டும்; சிபிஐ விசாரணை கோரும் நபரிடமிருந்து இத்தகைய சந்தேகங்களை நிரூபிக்கும் சாரமான ஆதாரங்களைக் கோர வேண்டும். விசாரணை நடக்கும் இடைக்காலத்தில் அதனை சிபிஐக்கு மாற்றும் செயல் ஒரு அபாயகரமான சூழலை உருவாக்கும்; வழக்கின் ரிட் மனு இறுதியாக தள்ளுபடி செய்யப்பட்டால் அதுவரை சிபிஐ சேகரித்த ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும்.
ஒரு மாநிலத்திலிருந்து மத்திய நிறுவனமொன்றுக்கு விசாரணையை மாற்றுவது, அதிகாரங்களை ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுத்திருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான வன்முறை போலாகி விடும். அத்தகைய விசாரணை மாற்றம் செய்யும் போது உச்ச நீதிமன்றம் இந்த அபாயத்தைக் கருத்தில் கொண்டு இன்னும் அதிக கவனமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதைற்கு கரூர் வழக்குதான் ஒரு சான்று.
மொழிபெயர்ப்பாளர்: ஆர். விஜயசங்கர், மேனாள் ஆசிரியர், ஃபிரண்ட்லைன். தொடர்புக்கு: vijay62@gmail.com
நன்றி: Bar & Bench Who will bell the cat? Transfer of investigation in the Karur stampede case
கட்டுரையாளர் ரிச்சர்ட்சன் வில்சன்

ரிச்சர்ட்சன் வில்சன், பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்.
