தான் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து, இறந்துவிட்டதாக இணையத்தில் பரவிய செய்தியை, ’அது வதந்தி யாரும் நம்ப வேண்டாம்’ என நடிகை காஜல் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோலிவுட், டோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். 2004ம் ஆண்டு இந்தி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, அதன்பின்னர் தமிழில் விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், அஜித்துடன் விவேகம், சூர்யாவுடன் மாற்றான், கார்த்திக்குடன் நான் மகான் அல்ல என உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபர் கௌதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பின்னர் சிக்கந்தர், இந்தியன் 2, கண்ணப்பா ஆகிய படங்களில் படங்களில் நடித்திருந்தார். தற்போது பான் இந்திய படமாக உருவாகி வரும் ராமாயணம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் படுகாயம் அடைந்ததாகவும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டதாகவும் இணையத்தில் செய்திகள் பரவின. இந்த அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளுக்கு, அவரே தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் நேரடியாக பதிலளித்தார். அதில், ”எனக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாகவும், நான் உயிருடன் இல்லை என்றும் சில ஆதாரமற்ற செய்திகளை நான் கண்டேன். இது முற்றிலும் உண்மை இல்லாதது. நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக இருக்கிறேன்.
கடவுளின் அருளால், நான் நலமாகவும், பாதுகாப்பாகவும், மிகவும் சிறப்பாகவும் இருக்கிறேன் என்று உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். இணையத்தில் பரவும் இதுபோன்ற தவறான செய்திகளை யாரும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நேர்மறை மற்றும் உண்மை மீது நம் கவனத்தைச் செலுத்துவோம்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.