அமைச்சர் பதவிக்காகவா சட்டசபை தேர்தலில் போட்டி? திருமா சொன்ன பதில் என்ன? முழுமையாக!

Published On:

| By Mathi

DMK Allaince Meeting Thiruma

தமிழக சட்டசபை தேர்தலில், மக்களவை எம்.பி.யாக இருக்கும் நிலையில் தாம் போட்டியிடுவது அமைச்சர் பதவிக்காக அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று மார்ச் 30-ந் தேதி மாலை நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: கூட்டணியின் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தேநீர் விருந்து அளித்தார். நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அனைத்துத் தலைவர்களும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நானும் அதிலே பங்கேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே எம்முடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம்.

அறப்போர் நடக்கும் தேர்தல்

ADVERTISEMENT

நடைபெற உள்ள இந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி ஆகிய கூட்டணிகளுக்கு இடையிலே நடக்கிற ஒரு தேர்தல் அல்ல. தமிழ்நாட்டிற்கும் மதவாத சக்திகளுக்கும் இடையிலே நடக்கிற ஒரு அரசியல் அறப்போர்.

தேர்தலின் முதன்மையான நோக்கம்

ADVERTISEMENT

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இந்த அறப்போரில் வெல்ல வேண்டும் என்பதற்கான வியூகங்கள் குறித்து கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் எம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதிமுக பின்னணியில் திராவிட அரசியல் என்பது மாறி மதவாத அரசியல், வெறுப்பு அரசியல் என்கிற ஒரு நிலை உருவாகி இருக்கிறது. ஆகவே அதனை எதிர்த்து அவர்களின் சதித்திட்டங்களை முறியடித்து வீழ்த்த வேண்டும் என்பதுதான் இந்த தேர்தலில் நமது முதன்மையான நோக்கம்.

திருவாரூரில் தொடங்கும் பிரசாரம்

234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற ஒற்றை இலக்கை வைத்து களம் காணப் புறப்படுகிறோம். நாளை முதல் கூட்டணியின் தலைவர்களுடைய தேர்தல் பிரச்சாரம் திருவாரூரில் இருந்து தொடங்குகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 8 தொகுதிகள் மட்டுமன்றி தமிழ்நாடு தழுவிய அளவில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காகவும் நான் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

சட்டசபை தேர்தலில் போட்டி ஏன்?

செய்தியாளர்களின் கேள்விகளும் திருமாவளவன் அளித்த பதில்களும்:

கேள்வி: நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறீர்கள். தற்போது மக்களவை எம்.பியாக இருக்கிறீர்கள்.. மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி?

திருமாவளவன்: ஏற்கனவே நான் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். 2 அல்லது இரண்டரை ஆண்டுகளில் அந்தப் பதவியை நான் துறந்திருக்கிறேன்.

அதன் பின்னர் நான் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் பங்கேற்றதில்லை.

சட்டப்பேரவையில் இருந்து பணியாற்ற வேண்டும் என்ற வேட்கை எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. தமிழ்நாடு சட்டமன்றம் தான் தமிழ்நாடு அரசியலுக்கான ஒரு முகம். என்னதான் நாடாளுமன்றத்திலே நாம் குரல் கொடுத்தாலும், தேசிய அளவிலான பிரச்சனைகள் குறித்துப் பேசினாலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசியல் குறித்து, விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகள் குறித்து வலுவாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்ற அடிப்படையில் தான் நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். வேறு எந்த நோக்கமும் இல்லை.

அமைச்சராக சட்டசபை தேர்தல் போட்டியா?

கேள்வி: எம்.பிக்களான எல். முருகன், சி.வி. சண்முகம், வைத்திலிங்கம் போன்றவர்கள் களத்தில் உள்ளனர். நீங்களும் அந்த வரிசையில் ஒரு வேட்பாளராக இருக்கிறீர்கள். அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?

திருமாவளவன்: ஏற்கனவே ராஜ்யசபா உறுப்பினர்களாக இருக்கிற 2 பேர் தமிழ்நாட்டில் போட்டியிடுகிறார்கள். அமைச்சராக இருக்கிற எல். முருகன், ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிற சி.வி. சண்முகம் ஆகியோர் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களத்தில் உள்ளனர். புதுச்சேரியிலே வைத்திலிங்கம் அவர்கள், முன்னாள் முதலமைச்சர், இப்போது மக்களவை உறுப்பினர் (MP). அவரும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அந்த வரிசையில் நானும் ஒரு வேட்பாளர் அவ்வளவுதான். இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை.

வைத்திலிங்கம் அவர்கள் முதலமைச்சர் என்கிற கனவோடு களத்தில் இருக்கிறார் என்று நீங்கள் சொல்வது சரி. நான் சட்டமன்ற உறுப்பினரானாலே போதும் என்ற கனவோடு களத்தில் இருக்கிறேன். அவ்வளவுதான்.

தமிழக அரசியல் சூழல் மாறுகிறதா?

கேள்வி: தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் சூழல் மாறப்போவதாக முதலமைச்சருடனான சந்திப்பிற்குப் பிறகு நீங்கள் கூறியிருந்தீர்கள். என்ன மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

திருமாவளவன்: தேர்தலுக்குத் தேர்தல் அரசியல் களம் மாறிக்கொண்டுதான் இருக்கும். இந்த முறை 4 முனைப் போட்டி என்று 4 அணிகளாகக் களத்தில் கூஇறங்கியிருக்கின்றன. என்றாலும் கூட திமுக தலைமையிலான கூட்டணிக்கும், பாஜக பின்னணியில் இருந்து இயக்கக்கூடிய அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி.

தேர்தல் முடிவுகள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று பெரிதும் நம்புகிறோம். தமிழ்நாட்டு மக்கள் திமுக கூட்டணிக்கு பேராதரவு நல்குவார்கள் என்பதிலும் எமக்கு வலுவான நம்பிக்கை இருக்கிறது.

அந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் மிக முக்கியமான ஒரு சக்தியாக இருக்கும். அப்போது நானும் இந்த களத்திலே இருந்தால், இந்தக் கூட்டணியை இன்னும் வலுப்படுத்துவதற்கும், கட்டுக்கோப்பாக எடுத்துச் செல்வதற்கும் என்னாலான பங்களிப்பைச் செலுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்.

விசிகவையே துருப்புச் சீட்டாக..

எங்களையே துருப்புச்சீட்டாக்குவதற்குப் பலர் முயற்சி செய்தார்கள். விடுதலைச் சிறுத்தைகளைப் பயன்படுத்தி திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துவதற்கு, சிதறடிப்பதற்கு என்னென்னவோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் இந்தக் கூட்டணியைக் காப்பாற்றவும், கட்டுக்கோப்பாக இதனை வழிநடத்திச் செல்வதற்கும் கூட்டணியின் தலைவருக்கு உற்ற துணையாக இருப்பதற்கு நாங்கள் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறோம்.

பாஜகவால் ஆபத்து

பாஜக கடந்த தேர்தல்களை விட இப்போது அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதால், அவர்கள் பெறவிருக்கிற வாக்கு சதவீதத்தின் அளவு உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அவர்கள் வலுப்பெறுகிறபோது அவர்கள் செய்கிற அரசியலை எதிர்கொள்வதற்கு நாங்கள் இங்கே வலுவாக இருக்க வேண்டும், கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share