ஒவ்வொரு திரைப்படத்தையும் ஒவ்வொரு வகைமையில் தருவதுதான் ‘சிறந்த இயக்குனர்’ அந்தஸ்தை அடைய விரும்புபவர்களின் கனவாக இருக்கும். தமிழ் திரையுலகில் அப்படி விதவிதமான வகைமைகளில் படங்களைத் தந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களது பட வாய்ப்புகளும் கதைகளும் நடிப்புக்கலைஞர்களும் அதற்கேற்றவாறு அமைந்தது அதன் பின்னிருக்கும்.
அரிதாகச் சிலர், வெவ்வேறு வகைமைகளில் தான் ஒவ்வொரு படத்தையும் தர வேண்டுமென்பதில் உறுதி காட்டுவார்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் சமகாலத்தில் அவ்வாறு காண்பவர்களில் ஒருவர், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். is dna trailer gives goosebumbs to watch
ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா என்று இவரது முந்தைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். ஆனால், அவற்றில் சமூகம் சார்ந்த அக்கறை படர்ந்திருக்கும்.
அதனாலோ என்னவோ, அவர் இயக்கத்தில் வெளியாகவிருக்கிற ‘டிஎன்ஏ’ மீது எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. வரும் 20ஆம் தேதி ‘பான் இந்தியா’ வெளியீடாக வரும் ‘குபேரா’வுக்கு போட்டியாக விளங்க வருகிறது இப்படம்.
இதன் ட்ரெய்லர் இப்போது வெளியாகியிருக்கிறது.
நாயகன் அதர்வா, நாயகி நிமிஷா சஜயன் இருவரது பெயர்களும் டைட்டிலுக்கு மேலே இடப்பட்டிருப்பதே அவர்களது பாத்திரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
சென்னையிலுள்ள அரசினர் தாய் சேய் நல மருத்துவமனை வாசலில் ஒரு மூதாட்டி வந்து நிற்பதில் இருந்து ட்ரெய்லர் தொடங்குகிறது.
சோம்பேறியான நாயகன், சற்றே மனநலக் குறைபாடு உடைய நாயகி, இவர்கள் வாழ்வில் ஒன்றிணைவதைக் காட்டுகிறது. பிறகு, அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது.
அந்தச் சூழலில், மருத்துவமனையில் நிகழும் குற்றமொன்றை நாயகி கண்டுவிட்டு நாயகனிடம் சொல்வதும், அதன் பின்னணி அறிய அவர் முயல்வதுமே இதன் கதை என்று பிடிபடுகிறது.
டிஎன்ஏ எனும் டைட்டிலில் பொதிந்துள்ள ’72 ஹவர்ஸ்’ எனும் எழுத்துகள் மொத்தக் கதையும் நாயகி மருத்துவமனையில் இருக்கும் மூன்றும் நாட்களில் அடங்கியிருப்பதை உணர்த்துகிறது.
குற்ற விசாரணையின்போது சாதாரண நபர்களே ‘மனநலம் பிறந்தவர்களாக’ச் சித்தரிக்கப்படுகிற செய்திகளைக் கண்டுவருவதால், இக்கதை நிச்சயம் சுவாரஸ்யமான ‘க்ரைம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ ஆக இருக்கும் என்ற உணர்வு மேலிடுகிறது. மருத்துவ உலகப் பின்னணியில் அமைந்த கதைகள் குறைவு என்பதால், இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது இந்த ட்ரெய்லர்.
பார்த்திபனின் ஒளிப்பதிவு, சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு, டான் அசோக்கின் சண்டைக்காட்சி வடிவமைப்பு என்று வித்தியாசமான கூட்டணியில் உருவான வேறுபட்ட கமர்ஷியல் படமாக ‘டிஎன்ஏ’ அமையலாம். அதற்கான வாய்ப்புகள் அனேகம் என்கிறது ட்ரெய்லர்.
இதில் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணிய சிவா, கருணாகரன், பசங்க சிவகுமார், போஸ் வெங்கட் எனப் பலர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசை சிறப்பாக ‘த்ரில்’ ஊட்டியிருக்கிறது. ‘இதே மாதிரி படமும் இருந்தா சரிதான்’ என்று சொல்ல வைக்கிறது. ஆக, எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிரது ட்ரெய்லர்.
வரும் 20ஆம் தேதி திரையில் ’டிஎன்ஏ’ என்ன சொல்லப் போகிறதோ?!