”கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளதாவது: கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “நானும் ஒரு கிறிஸ்துவன் தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அல்லேலுயா சொல்கிறார்.. உதயநிதி கிறிஸ்தவன் என சொல்கிறார் என்று சிலருக்கு நிச்சயம் வயிறு எரியவே செய்யும்.. நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்துவ மத்தை சேர்ந்தவர் தான்” என்றார்.

அப்போது தன்னை கிறிஸ்தவர் என்ற சொன்ன உதயநிதி, இப்போது திமுகவே கிறிஸ்தவ கட்சிதான் என பேசியிருக்கிறார். மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை மக்களிடம் போதிக்க வேண்டும். சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் இயேசு கிறிஸ்து” என்று கூறியிருக்கிறார்.
கிறிஸ்துவ மதம், இயேசு கிறிஸ்துவின் சிறப்புகள் பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதை வரவேற்கிறோம். கட்டாய மதமாற்றத்தையும், பயங்கரவாதத்தையும் மட்டுமே பாஜக எதிர்க்கிறது. அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் கட்சி பாஜக.
அதே நேரத்தில், “கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது” என்பதன் மூலம் உதயநிதி என்ன சொல்ல வருகிறார்?
இதுவரை திமுகவை மதச்சார்பற்ற கட்சி என்றும், தங்களை நாத்திகர்கள் என்றும் கூறி வந்த திமுகவும், உதயநிதி ஸ்டாலினும் மதம் மாறி விட்டார்களா? கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தனது அடையாளத்தை வெளிப்படுத்தி வரும் உதயநிதி, மீதி உண்மையையும் சொல்லி விட்டால் நல்லது.
“சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் இயேசு கிறிஸ்து” என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசியது 100க்கு 100 சதவீதம் சரிதான். ஆனால் திமுகவில் சாதாரண மனிதர்கள் யாரும் தலைவர் பதவிக்கு கனவுகூட காண முடியாது. இந்த உண்மையையும் உதயநிதி சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே.சேகர்பாபு, கொடுங்கோல் மன்னன் அவுரங்சீப் ஆட்சிக் காலத்தை நினைவுபடுத்துகிறார். இந்து கோவில் திருவிழாக்களை, மரபுகளை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அவர், இந்து கோவில்களுக்கு எதிராக செயல்படுகிறார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த மறுக்கிறார். கோவில் பணத்தில் கோவில்களுக்கு எதிராக வழக்கறிஞர்களை வைத்து வாதிடுகிறார்.
முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார் எனப் பேசி முருகப்பெருமானை அவமதித்துள்ளார்.
தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகப் பெருமான் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் முதல்வர் ஸ்டாலின். அப்படிப்பட்டவரோடு முருகன் எப்படி கைகோர்ப்பார்? இப்போது இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து விரோத திமுக அரசுக்கு உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.
