நாடு முழுவதும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் அம்மா உணவகங்களில் தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை என்று மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் -அமெரிக்கா போர் காரணமாக இந்தியாவில் கியாஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள் உணவு வகைகளை குறைத்துள்ளன. இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர்கள் இருப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நாளை ஹோட்டல்கள் உரிமையாளர்களுடன் தமிழக அரசு ஆலோசனை செய்யவுள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் பிரதமருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றனர். தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த தட்டுப்பாடு தொடர்பாக பிரதமரும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதுபோன்ற சூழலில் ஏழை எளிய மக்கள் அதிகம் சாப்பிடச் செல்லும் உணவகமான அம்மா உணவகங்களிலும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் , “அம்மா உணவகங்களில் போதிய சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. தற்போது வரை எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி போதிய அளவு சிலிண்டர்கள் இருப்பை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
